திறந்திடு சீஸேம் 02: எங்கே டக்கர் சிலுவை?

திறந்திடு சீஸேம் 02: எங்கே டக்கர் சிலுவை?
Updated on
2 min read

உலகில் அதிகமாகக் கப்பல் போக்குவரத்து நடக்கும் கடல் பகுதி அதுதான். பல நூற்றாண்டுகளாக, அதிக அளவில் கப்பல் விபத்துகள் நடந்த பகுதியும் அதுதான். பெர்முடா. வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கிலும், வட அட்லாண்டிக் பெருங்கடலின் மையப்பகுதியிலும் அமைந்த சிறிய தீவு. பிரிட்டனின் கடல் கடந்த ஆட்சி, அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதி இது.

பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் பெர்முடாவின் கடல் பகுதியை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏகப்பட்ட கப்பல்கள் கடந்து சென்றன. மோசமான வானிலை, புயல் காரணமாகப் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாயின. அதில் ஸ்பெயின், போர்ச்சுகலைச் சேர்ந்த கப்பல்கள் அதிகம்.

டெடி டக்கர் (Teddy Tucker), பெர்முடாவைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலுக்குள் குதித்து, சிப்பிகளை எடுத்துவந்து சுற்றுலா பயணிகளிடம் விற்றவர். தன் இளம் வயதில் நீர்வாழ் உயிரினக் காட்சியகம் (Aquarium) ஒன்றைத் திறந்தார். மூழ்கிப் போன பழைய கப்பல்களில் புதையல் வேட்டை நடத்துவது டக்கரின் இன்னொரு வேலை. சிறிய தங்க, வெள்ளிக் கட்டிகள், பழங்காலக் கண்ணாடிகள், தட்டுகள், பாத்திரங்கள், ஜாடிகள், பித்தளை திசைகாட்டிகள், வெண்கலத்திலான சிறு பீரங்கிகள், பழங்கால கையெறி குண்டுகள் போன்றவை அவருக்குக் கிடைத்தன. அவற்றைத் தன் காட்சியகத்தில் வைத்தார்.

1955. கோடைகாலத்தில் ஒருநாள். தன் குழுவினருடன் கடலுக்குச் சென்ற டக்கர், நீரினுள் டைவ் அடித்தார். அதுவரை அவர் கண்ணில் சிக்காத கப்பல் ஒன்று தென்பட்டது. அந்தக் கப்பலின் உடைந்த பாகங்களில் தன் தேடுதலைத் தொடங்கினார். மூன்று பெரிய முத்துகள், தங்க பட்டன்கள், பழங்கால ஸ்பானிய, பிரெஞ்சு நாணயங்கள் கிடைத்தன. வெளியே வந்து அந்த நாணயங்களை ஆராய்ந்தபோது அதில் 1592 என்று வருடம் பொறிக்கப்பட்டிருந்தது. அது 1594-ல் மூழ்கிப் போன ஸ்பானிய கப்பலான San Pedro.

டக்கர், அந்தக் கப்பலில் அடுத்தடுத்த நாட்களிலும் தனது தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தார். சிறிய தங்க உருண்டை, ஸ்பானிய அரச முத்திரை, 36 அவுன்ஸ் எடை கொண்ட தங்கக்கட்டி, சிறு முத்துகள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று அகப்பட்டது.

தேடுதல் வேட்டையின் ஏழாவது நாள். டக்கர், கப்பல் உடைந்து கிடந்த பகுதியில் இருந்த பவளத்திட்டுக்கு அருகில் தன் கைகளால் தோண்டினார். கலங்கிய நீர் தெளிவான பின், கடலின் தரையில் பளிச்சென ஒரு பொருள் தென்பட்டது. 22 காரட் தங்கத்தால் ஆன ஒரு சிலுவை. அதன் மீது ஏழு பெரிய மரகதக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. சிலுவையின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் யேசுவின் கைகளைக் குறிக்கும்படி தங்கத்தாலான தொங்கட்டான்கள் இருந்தன. யேசுவின் கால்களைக் குறிக்கும்படியான தொங்கட்டான் மட்டும் காணாமல் போயிருந்தது.

‘‘இதுவரை கடலுக்கடியில் நாம் எடுத்த பொருட்களிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொக்கிஷம் இந்தச் சிலுவைதான்’’ என்று டக்கர் தன் நெருங்கிய நண்பர்களிடம் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் சொன்னார். அதை அவர்கள் ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்தனர். பீட்டர்ஸன் என்பவரை வரவழைத்து அந்தச் சிலுவையின் மதிப்பை ஆராயச் சொன்னார். ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிய பீட்டர்ஸன் சொன்ன அன்றைய மதிப்பு, இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள்.

எப்படியோ இந்த ‘டக்கர் சிலுவை’ குறித்த தகவல்கள் வெளியே கசிந்தன. ‘லைஃப்’ இதழில் இந்தச் சிலுவை குறித்த கட்டுரை வெளிவரவும், டக்கருக்குத் தொந்தரவுகள் ஆரம்பமாயின. அவரை அரசு அதிகாரிகள் கண்காணித்தனர். அவரது வீட்டை உடைத்து சிலுவையைக் கொள்ளையடிக்க நினைத்தார் ஒருவர். அரசின் கடல் எல்லைக்குள் கைப்பற்றிய புதையல் என்பதால், அது அரசாங்கத்துக்கே சொந்தம் என்று பெர்முடா அரசு டக்கருக்கு நிர்பந்தம் கொடுக்க ஆரம்பித்தது.

பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு 1959-ல் அந்தப் பொக்கிஷ சிலுவையை அரசிடம் ஒரு லட்சம் டாலருக்கு டக்கர் விற்றார். சிலுவையின் உண்மையான மதிப்புக்கு அது மிகக் குறைந்த விலைதான். ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் பெர்முடா தீவை விட்டு இந்தச் சிலுவை வெளியே போகக் கூடாது’ என்று அரசிடம் கேட்டுக் கொண்டார். சில வருடங்களுக்கு டக்கரும் அவரது மனைவியுமே அரசின் அருங்காட்சியகத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அங்கே அந்தச் சிலுவை பாதுகாப்பாக இருந்தது.

1975-ல் இங்கிலாந்து ராணி எலிசபெத், ‘டக்கர் சிலுவை’யைப் பார்வையிட பெர்முடா அருங்காட்சியகத்துக்கு வந்தார். அப்போது தங்க நிறத்தில், பச்சைக் கற்களுடன் ஒரு சிலுவை இருந்தது. ஆனால், அது போலி. அசலான டக்கர் சிலுவை காணாமல் போனது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

யாரோ போலியான சிலுவையை வைத்துவிட்டு, உண்மையானதைத் திருடிச் சென்றிருந்தார்கள். அது எப்போது நடந்தது என்று கண்டறிய முடியவில்லை. பெர்முடா போலீஸ்,  ஸ்காட்லாந்து யார்டு எனப் பலரும் அந்தச் சிலுவையைத் தேடினார்கள். திருடியவர்களைக் கண்டறிய முயற்சி செய்தார்கள். இதுவரை அது யார் என்றே கண்டறியப்படவில்லை. உண்மையான டக்கர் சிலுவை என்ன ஆனது என்ற தகவலும் தெரியவில்லை. இப்போதும் பெர்முடா அருங்காட்சியகத்தில் போலி சிலுவையே ஜொலித்துக்கொண்டிருக்கிறது.

உலக வரலாற்றில் கடலுக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களிலேயே, மிகவும் விலை மதிப்புள்ள தனிப் பொருள் டக்கர் சிலுவைதான்!

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in