Published : 19 Sep 2018 11:21 AM
Last Updated : 19 Sep 2018 11:21 AM

நான் ஏன் மாயாபஜார் படிக்கிறேன்?

‘இந்து தமிழ்’ நாளிதழ் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மாயாபஜார் குறித்த தங்களது கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.
 

udayjpg

குழந்தைகளுக்கான முழுமையான இதழாக வெளிவருகிறது. குழந்தைகளின் படைப்பூக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்கள், படமும் கதையும், கேள்வி-பதில்கள் என்று பல பகுதிகள் வெளிவருகின்றன.

குழந்தைகளின் அறிவியல், சமூகப் பார்வையை விரிவுபடுத்தும் கட்டுரைகள், குழந்தைப் படைப்பாளிகளின் கதைகள், சிறார் எழுத்தாளர்களின் கதைகள், நூல் அறிமுகம், படக்கதைகள் என்று பன்முகத் தன்மையுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகள் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாதபடிக்கு வண்ணமயமான வடிவமைப்பும் ஓவியங்களும் அமைந்திருக்கின்றன. குழந்தைகளின் தோளில் கைபோட்டு அவர்களோடு உரையாடும் நண்பன், மாயாபஜார்.

- உதயசங்கர், எழுத்தாளர்

 

என்னுள் உயிர்ப்புடன் இருக்கும் குழந்தைத்தனத்தைக் காப்பாற்றும் ரகசியத்தை, ஒவ்வொரு வாரமும் 'மாயாபஜார்' வாசிப்பதன் மூலம் மீட்டெடுக்கிறேன்.

ilangojpgright

மனம் ஆரோக்கியம் அடைகிறது. நல்ல எண்ணங்கள் புத்தம் புது மலர்களாகப் பூக்கின்றன. கதை, தொடர் கட்டுரைகள்,  கேள்வி-பதில், மருத்துவ உண்மைகள், புத்தக அறிமுகம்,  நாடுகள், மனிதர்கள், அதிசயங்கள் பற்றிய செய்திகள் என  அறிவு பெருக்கத்துக்குத் தேவையான புதையல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஒரு கண்டுபிடிப்பாளனைப்போல குழந்தைகள் மன இயல்பை. மேதைமையை, கற்பனை உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்ள, தேடலுக்கான வழித்தடமாக மாயாபஜாரைப்  பார்க்கிறேன்.

- கொ.மா.கோ. இளங்கோ, எழுத்தாளர்

 

 

pazhanijpg

அறிவுக்கு விருந்தாக ‘இடம் பொருள் மனிதர் விலங்கு’, ‘கண்டுபிடிப்புகளின் கதை’, ‘படக்கதை’, ‘சித்திரமும் கைப்பழக்கம்’, ‘படமும் கதையும்’, ‘டிங்குவிடம் கேளுங்கள்’, ‘வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்’ போன்றவை படிப்போரைக் கவர்ந்துவிடுகின்றன. குழந்தைகளின் கற்றலை மேம்படுத்திடும் அற்புதமான பணியைச் செய்துவருகிறது மாயாபஜார்.

வகுப்பறைச் சூழலை இனிமையாக்கக் காரணமாக உள்ளது.  புதன்கிழமைகளில் எங்கள்  மாணவர்களின் கைகளில் மாயாபஜார் படும்பாட்டைச் சொல்ல முடியாது! அவ்வளவு போட்டி! மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு சேரப் பயன்தரும் மாயாபஜார் என்று ஆசிரியர்களின் சார்பாகப் பெருமையோடு சொல்கிறேன்.

- மா . பழனி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சின்னப் பள்ளத்தூர், தருமபுரி.

 

israveljpgright

கதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. எங்களின் ஓவியத் திறமையை உலகறியச் செய்கிறது. மிகவும் பிடித்த பகுதி ‘படமும் கதையும்’. இது கதையாகவும் இருக்கிறது; விளையாட்டாகவும் இருக்கிறது. டிங்குவிடம் உரிமையுடன் கேள்வி கேட்கிறாம். அதற்கு அறிவுப்பூர்வமாகப் பதில் கிடைக்கும்.

10 குறிப்புகளில் ஒரு நாட்டைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. என் மனதைக் கவர்ந்த ‘மாயத் தோற்றம்’, ‘விடுகதைகள்’, ‘படம் நீங்க… வசனம் நாங்க…’ என மாயாபஜாரில் வரும் அத்தனை பகுதிகளும் அருமையாக இருக்கின்றன. நாங்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் மாயாபஜாரை விரும்பிப் படிக்கிறார்கள்.

- ரா. இஸ்ரவேல், 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, திருமலைராஜபுரம், கும்பகோணம்.

 

priyadarshinijpg

அப்பாதான் மாயாபஜாரை எனக்கு அறிமுப்படுதினார்.  கதைகளையும், படக்கதைகளையும் படித்துப் பழக்கப்பட்ட எனக்கு, விருப்பத்துடன் கேள்வி - பதிலை வாசிக்க வைத்தது டிங்குதான். சரித்திரமும் தத்துவமும் மாணவர்களும் படிக்கலாம் என்று மருதன் அழைத்து வந்ததால், அந்தப் பகுதி அதிக விருப்பத்துக்குரியதானது.

அறிவுரைகள் வெறுப்பைத் தந்தபோது, கதைகளின் வழியே வந்த நீதி ஏற்புடையதாக இருந்ததால் பிடித்துப் போனது. வாசித்தலில் விருப்பம் வந்தபோது, எழுத வேண்டும் என்ற ஆர்வத்துக்கு வாசல் திறந்த மாயாபஜாரை  மிகவும் பிடித்திருக்கிறது. மாயாபஜார் மூலம் என் நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் பாராட்டுக் கிடைக்கும்போது நெகிழ்ந்து போகிறேன்.

- அ. பிரியதர்சினி, 7-ம் வகுப்பு, சேதுலெட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி

 

குழந்தைகளின் மனம் கவரும் வகையில் மாயாபஜார் வடிவமைக்கப்படுவது சிறப்பு. படக்கதைகளில் ஓவியங்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன.
‘கண்டுபிடிப்புகளின் கதை’ விறுவிறுப்பாகவும், மேலும் அது தொடர்பாகத் தேடத் தூண்டுவதாகவும் உள்ளது. குழந்தைகளின் படைப்புகளை நன்றாக வெளிப்படுத்துகிறது மாயாபஜார்.

- பா. விஜயலட்சுமி மாதவன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாதிரி. காஞ்சிபுரம்.

மாயாபஜாரில் வாசகர்கள் விரும்பிய மாற்றங்கள்

இந்து தமிழ் 6-ம் ஆண்டில் நுழைவதை ஒட்டி, வாசகர்களின் கருத்துகளை அறிய விரும்பினோம். மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் ஆர்வத்தோடு தங்கள் கருத்துகளை அஞ்சல் மூலமும் இமெயில் மூலமும் பகிர்ந்துகொண்டதற்கு மகிழ்ச்சியும் நன்றியும். வாரம்தோறும் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டாலும், ஒட்டுமொத்தமாக உங்கள் கருத்துகளைப் படித்தபோது பிரமிப்பாக இருந்தது.

‘இடம் பொருள் மனிதர் விலங்கு’, ‘பூமி எனும் சொர்க்கம்’, ‘உடல் எனும் இயந்திரம்’, ‘டிங்குவிடம் கேளுங்கள்’, ‘இது எந்த நாடு?’ ‘கண்டுபிடிப்புகளின் கதை’ போன்றவை மாணவர்கள், பெரியவர்களின் மனதுக்கு நெருக்கமாக இருந்ததை அறிய முடிகிறது. ‘அதிபுத்திசாலி சோமன்’, ‘படமும் கதையும்’, ‘கதை’, ‘படக்கதை’, ‘புதிர்கள்’, ‘சித்திரமும் கைப்பழக்கம்’, ‘படம் நீங்க… வசனம் நாங்க…’ போன்றவை மாணவர்களின் விருப்பத்தை பெற்றிருப்பதைக் கண்டறிந்தோம்.

இதன்மூலம் மிகச் சிறிய குழந்தைகளில் இருந்து பெரியவர்கள்வரை மாயாபஜார் வாசகர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவானது. அதனால் எல்லோரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் விதத்திலேயே இனியும் பயணிப்போம். பொழுதுபோக்கு, நல்ல சிந்தனைகளை அளிப்பதோடு, மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதையும் எங்கள் கடமையாகக் கருதுகிறோம்.

பெரும்பாலான வாசகர்கள் இப்போது வரும் பகுதிகளே தொடர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். தலைவர்களின் வாழ்க்கை, சிந்திக்க வைக்கும் புதிர்கள், பரிசுப் போட்டிகள் போன்ற உங்களின் விருப்பங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவோம். நீங்கள் கொடுத்துவரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் நன்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x