அறிவியல் மேஜிக்: தண்ணீரில் மிதக்கும் ஊசி!

அறிவியல் மேஜிக்: தண்ணீரில் மிதக்கும் ஊசி!
Updated on
1 min read

கொசுக்களும் ஈக்களும் தண்ணீரில் சாதாரணமாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? தண்ணீரில் அவை மூழ்காமல் எப்படி நிற்கின்றன? ஒரு சோதனை செய்து பார்த்து விடுவோமா?

என்னென்ன தேவை?

கண்ணாடி டம்ளர்

மெல்லிய காகிதம் (டிஷ்யூ பேப்பர்)

ஊசி 2

எப்படிச் செய்வது?

# கண்ணாடி டம்ளரின் விளிம்புவரை தண்ணீரை ஊற்றிக்கொள்ளுங்கள்.

# ஓர் ஊசியை எடுத்து தண்ணீரில் போடுங்கள். ஊசி என்ன ஆனது? தண்ணீரில் மூழ்கிவிட்டதா?

# சரி விடுங்கள், இப்போது ஒரு துண்டு டிஷ்யூ பேப்பரைக் கிழித்து தண்ணீரில் போடுங்கள்.

# டிஷ்யூ பேப்பர் மீது இன்னோர் ஊசியை வையுங்கள்.

# சற்று நேரத்தில் டிஷ்யூ பேப்பர் நீரில் நனைந்துவிடும். நனைந்த பேப்பரைச் சிறிய குச்சியால் தண்ணீருக்குள் தள்ளிவிடுங்கள்.

(ஊசி மீது குச்சிப் படக் கூடாது.)

# பேப்பர் தண்ணீருக்குள் சென்ற பிறகு ஊசி மட்டும் மிதப்பதைப் பார்க்கலாம்.

முதலில் தண்ணீரில் போட்டவுடன் மூழ்கிய ஊசி, பிறகு மூழ்காமல் மிதந்தது எப்படி?

காரணம்

நீரின் பரப்பு இழுவிசையே ஊசி மிதந்ததற்குக் காரணம். நீர்மத்தின் ஓரலகுப் பரப்பில் உணரப்படும் விசையே பரப்பு இழுவிசை. திரவ மூலக்கூறுகளிடையே உள்ள தன்னினக் கவர்ச்சி விசையால் இது ஏற்படும்.

ஒரு நீர்மத்தின் உட்பகுதியில் உள்ள மூலக்கூறுகள் மற்ற எல்லா மூலக்கூறுகளாலும் எல்லாத் திசையிலும் சமமாக இழுக்கப்படுகின்றன. இதனால் நீர்மப்பரப்பில் இறுக்கம் உணரப்படுகிறது.

இந்த இறுக்கத்தினால் மூலக்கூறுகள் தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்து சிறிய படலமாகப் படிந்துவிடுகின்றன. இதனால், ஊசி மிதக்கிறது.

பயன்பாடு

கொசுக்கள், ஈக்கள் மட்டுமல்ல சோப்பு நீரில் ஏற்படும் குமிழி நீண்ட நேரம் நிலைத்து நிற்கவும் நீரின் பரப்பு இழுவிசையே காரணம்.

ஒரு சந்தேகம்:

டிஷ்யூ பேப்பர் மட்டும் ஏன் மூழ்கியது? தண்ணீரில் டிஷ்யூ பேப்பர் நனைவதால் அதன் அடர்த்தி அதிகமாகிவிடுகிறது. அதனால், அது நீருக்குள் மூழ்கிவிடுகிறது. ஆனால், அதன் மீது வைக்கப்பட்ட ஊசி, நீரின் பரப்பு இழுவிசையின் காரணமாக  மூழ்காமல் மிதக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in