Last Updated : 05 Jun, 2019 09:32 AM

 

Published : 05 Jun 2019 09:32 AM
Last Updated : 05 Jun 2019 09:32 AM

அறிவியல் மேஜிக்: தண்ணீரை உறிஞ்சாத குழல்!

இளநீர், குளிர்பானங்களை உறிஞ்சுகுழல் மூலம் பருகியிருப் பீர்கள். அந்த உறிஞ்சுகுழல் எப்படிச் செயல்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? ஒரு  சோதனை செய்து பார்க்கலாமா?

என்னென்ன தேவை?

தண்ணீர்

உறிஞ்சுகுழல் - 2

கண்ணாடி டம்ளர்

எப்படிச் செய்வது?

# கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றிக்கொள்ளுங்கள்.

# ஓர் உறிஞ்சுகுழலை எடுத்து டம்ளருக்குள் விட்டு, தண்ணீரை உறிஞ்சுங்கள். தண்ணீர் வாய்க்கு வந்துவிட்டதா? சரி, குடித்துவிடுங்கள். இப்போது இன்னோர் உறிஞ்சுகுழலையும் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு உறிஞ்சுகுழல் களையும் ஒன்றாக வைத்துக்கொள்ளுங்கள். ஓர் உறிஞ்சுகுழலைத் தண்ணீருக்குள் விடுங்கள். இன்னோர் உறிஞ்சுகுழலை டம்ளருக்கு வெளியே இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு உறிஞ்சுகுழல்களையும் ஒன்றாக வாயில் வைத்து உறிஞ்சுங்கள்.

# இப்போது தண்ணீர் வாய்க்கு வரவில்லையா, காற்றுதான் வருகிறதா? தனியாக உறிஞ்சுகுழலை வைத்து உறிஞ்சியபோது வாய்க்கு வந்த தண்ணீர், மாறுபட்ட முறையில் உறிஞ்சுகுழல்களை வைத்து உறிஞ்சும்போது வரவில்லையே, ஏன்?

காரணம்

முதல் உறிஞ்சுகுழலைத் தண்ணீரில் விட்டு உறிஞ்சும்போது, உறிஞ்சுகுழலில் உள்ள காற்றை உறிஞ்சிவிடுகிறீர்கள். அதனால், உறிஞ்சுகுழலில் உள்ள காற்று வெளியேறிவிடுகிறது. இதனால், டம்ளரில் உள்ள தண்ணீர் எந்தத் தடையுமின்றி வாய்க்கு வந்துவிடுகிறது.

இன்னோர் உறிஞ்சுகுழலை டம்ளருக்கு வெளியே வைத்து உறிஞ்சும்போது, காற்று மட்டுமே வரக் காரணம் உள்ளது.  நீங்கள் உறிஞ்சுகுழல் மூலம் உறிஞ்சும்போது வாய்க்குள் குறைந்த காற்றழுத்தம் உண்டாகிவிடுகிறது. அப்போது அந்த இடத்தில் காற்றை நிரப்ப டம்ளருக்கு வெளியே உள்ள உறிஞ்சுகுழல் வழியாகக் காற்றை வேகமாக உறிஞ்சி விடுகிறோம்.

இதனால் வாயில் குறைந்த காற்றழுத்தம் என்பது சமநிலையை அடைந்துவிடுகிறது. தண்ணீரில் உள்ள உறிஞ்சுகுழலை உறிஞ்சினாலும் தண்ணீர் மேலே வராமல் தடுக்கப்பட்டுவிடுகிறது. இதிலிருந்து காற்று எப்போதும் அதிக அழுத்தம் உள்ள இடத்திலிருந்து குறைந்த அழுத்தம் உள்ள பகுதிக்கே செல்லும் என்பதையும் காற்று இடப்பெயரும் என்பதையும் அறியலாம்.

பயன்பாடு

உறிஞ்சுகுழல் மட்டுமல்ல, ஊசி மருந்து, மை நிரப்பும் குழல், அடி பம்பு ஆகியவை இந்தத் தத்துவத்தின்படிதான் செயல்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x