

# உலகிலேயே மிகவும் பழமையான பள்ளிஇங்கிலாந்தின் கான்டர்பரியில் உள்ளது. இங்குள்ள கிங்ஸ் பள்ளி பொ.ஆ. 597-ல் நிறுவப்பட்டது. அதேநேரம் இன்றைய நவீனச் சூழலுக்கு ஏற்ற வசதிகளையும் இந்தப் பள்ளி கொண்டுள்ளது.
1422 ஆண்டுகளாக இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது, அம்மாடி! தற்போது 800-க்கும் மேற்பட்ட பதின்பருவச் சிறார்கள் இங்கே பயில்கிறார்கள். தினசரி வந்து படிப்பவர்களும் விடுதியில் தங்கிப் படிப்பவர்களும் இந்தப் பள்ளியில் உண்டு. அகஸ்டின் என்ற பாதிரியார் நிறுவிய இந்தப் பள்ளி, பிரிட்டனின் பழமையான அரசுப் பள்ளியும்கூட!
# உலகின் மிகச் சிறிய பள்ளி இத்தாலியில் 2014-ல் இருந்தது. டூரின் நகரில் ஆல்பெட் என்ற இடத்தில் இருந்த ஒரு தொடக்கப் பள்ளியில் சோபியா வயோலா என்ற ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்தார்.
இசபெல்லா கார்வெல்லி என்ற ஆசிரியர் அவருக்குக் கற்பித்தார். ஒரு மாணவி மட்டுமே படிக்க வந்தாலும், அந்தப் பள்ளியை மூட வேண்டாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் நடத்தச் சொன்னார்கள். வயோலாவுக்குக் கற்பனையான நண்பர்களே அதிகம்!
# உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் பள்ளி என்ற பெருமையை திபெத்தில் புமசாங்டாங் ஆரம்பப் பள்ளி பெற்றுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 17,628 அடி உயரத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமுக்கு அருகில் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது. நூறுக்கும் குறைவான குழந்தைகள் இங்கே படித்து வருகின்றனர்.
# நமது அண்டை நாடான வங்கதேசத்தில் நூற்றுக்குக் குறையாமல் மிதக்கும் பள்ளிகள், அதுதான் படகுப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் நூலகம், சூரிய மின்கல வசதி போன்றவையும் உண்டு.
ஆண்டுதோறும் பருவமழைக் காலமான ஜூலை முதல் அக்டோபர்வரை வங்கதேசம் வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு. மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்மபுத்திராவும் நம் நாட்டின் மிகப் பெரிய ஆறான கங்கையின் ஒரு பகுதியும் வங்கதேசத்தில் பாய்கின்றன.
# உலகின் மிகவும் முதிய ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றவர் ஆக்னஸ் ஸெலெஸ்னிக். தனது 81-வது வயதில் இருந்து 102 வயதுவரை நியூஜெர்சியில் உள்ள சன்டேன்ஸ் பள்ளியில் அவர் கற்பித்தார்.
தையல் கலை, சமையல் கலை ஆசிரியர் அவர். உலகின் மிகவும் வயதான ஆசிரியையாக இருந்த அவர் 2017-ல் மறைந்தார். குழந்தைகள் இவரைப் பாட்டி என்று அழைத்தாலும் அவர் கோபப்படவில்லை. நிஜமாகவே பாட்டி வயதில்தானே அவர் கற்பிக்க வந்தார்!