Last Updated : 19 Jun, 2019 11:47 AM

 

Published : 19 Jun 2019 11:47 AM
Last Updated : 19 Jun 2019 11:47 AM

அறிவியல் மேஜிக்: தண்ணீரைத் தூக்கும் பலூன்!

தண்ணீரைத் தொடாமல் அதன் நீர்மட்டத்தைக் கூட்டவோ குறைக்கவோ உங்களால் முடியுமா? முடியாது என்று நினைப்பீர்கள். ஆனால், முடியும். அதை ஒரு சோதனை மூலம் தெரிந்துகொள்வோமா? (பெரியவர்கள் உதவியுடன் செய்ய வேண்டும்.)

என்னென்ன தேவை?

2 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் 2

உறிஞ்சுகுழல் (ஸ்டிரா)

ஆணி

சீனாக் களிமண்

தண்ணீர்

கத்தி

பலூன்

எப்படிச் செய்வது?

# இரண்டு பிளாஸ்டிக் பாட்டில்களையும் நடுவே வெட்டி, துண்டாக்குங்கள். அதன் வாய்ப் பகுதி தேவையில்லை. அடிப்பகுதியை வைத்துக்கொள்ளுங்கள். பாட்டிலின் அளவுகள் சரி சமமாக இருக்க வேண்டும்.

# இரண்டு பாட்டில்களின் அடிப்பகுதியிலிருந்து 7 செ.மீ.க்கு மேலே ஆணியால் துளையிட்டுக்கொள்ளுங்கள்.

# பாட்டில்களை 10 செ.மீ. தொலைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கு ஏற்ப உறிஞ்சுக்குழலை வெட்டி, பாட்டிலில் இட்ட துளைக்குள் செருகிவிடுங்கள். செருகிய இடத்தில் கெட்டியான களிமண்ணை ஒட்டிவிடுங்கள்.

# இப்போது தண்ணீரை எடுத்து ஏதாவது ஒரு பாட்டிலில் ஊற்றுங்கள். பாட்டிலில் தண்ணீரை ஊற்ற ஊற்ற, ஒரு பாட்டிலிலிருந்து இன்னொரு பாட்டிலுக்கு உறிஞ்சு குழல் மூலம் தண்ணீர் செல்கிறதா?

# ஒரு பாட்டிலில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும், இரு பாட்டில்களிலும் தண்ணீர் ஒரே அளவில் இருக்கும்.

# இப்போது பலூனை ஊதி அதன் வாய்ப் பகுதியைக் கட்டிகொள்ளுங்கள். அந்த பலூனை ஏதாவது ஒரு பாட்டிலின் மேல்புறத்தில் வையுங்கள். அந்த பலூனை உள்நோக்கி அழுத்துங்கள்.

# இப்போது என்ன நடக்கிறது எனப் பாருங்கள். பலூனை அழுத்த அழுத்த பலூன் உள்ள பாட்டிலில் தண்ணீர் குறைந்து, அருகே உள்ள பாட்டிலில் தண்ணீர் மட்டம் உயர்ந்துகொண்டே இருக்கும். பலூனை வெளியே எடுத்துவிட்டால், தண்ணீர் மட்டம் பழைய நிலைக்கு வந்துவிடும்.

பலூனை அழுத்தும்போது ஒரு பாட்டிலில்  நீர்மட்டம் குறைந்து இன்னொரு பாட்டிலில் அதிகரிக்க என்ன காரணம்?

காரணம்

ஒரு திரவத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் கொடுக்கும் அழுத்தம் அந்தத் திரவத்தின் எல்லா பாகங் களுக்கும் சம அளவில் பகிரப்படும் என்பதை பாஸ்கல் விதியில் படித் திருப்பீர்கள். ஒரு பாட்டிலில் பலூனை வைத்து அழுத்தும்போது நீங்கள் தண்ணீரை அழுத்தவில்லை.

காற்றைதான் அழுத்துகிறீர்கள். ஏனென்றால்,  நீரை அழுத்தினால் நீரின் எடை குறையாது. ஆனால், காற்றை அழுத்தும்போது அதன் எடை குறையும். காற்று, நீரின் இந்தப் பண்புகளால் காற்றழுத்தம் நீரில் பரவி அடுத்த பாட்டிலுக்குத் தண்ணீரைத் தள்ளுகிறது. இங்கே பலூன் ஒரு பிஸ்டனைப்போல வேலை செய்கிறது.

பயன்பாடு

பெரிய வாகனங்களை மேலே தூக்கி இறக்கப் பயன்படும் தூக்கிகள் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் வேலை செய்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x