

# உலகின் மிகப் பெரிய பள்ளி உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள 'சிட்டி மாண்டிசோரி பள்ளி'. இந்தப் பள்ளியில் 55,000 மாணவர்கள் படிக்கிறார்கள். 1959-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் உள்ளன. 18 வளாகங்களில் செயல்படும் இந்தப் பள்ளியில் 4,500 பேர் பணியாற்றுகிறார்கள். ‘யுனெஸ்கோ அமைதிக் கல்விக்கான பரிசு’ 2002-ல் இந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
# ஒடுக்கப்பவட்டவர்களின் மீட்சிக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த ஜோதிபா பூலேவும் அவருடைய மனைவி சாவித்திரி பாய் பூலேவும் 1848 ஜனவரி 1-ம் தேதி பூனாவின் நாராயண்பேட் பகுதியில் உள்ள பிதேவாடா என்ற இடத்தில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார்கள். அதே ஆண்டில் மேலும் ஆறு மகளிர் பள்ளிகளைத் தொடங்கிய அவர்கள், 1852-ம் ஆண்டில் தலித் சிறுமிகளுக்கான பள்ளியையும் தொடங்கினார்கள். சாவித்திரி பாய் பூலேதான் இந்தியாவின் முதல் ஆசிரியை.
# நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் முதல் உறைவிடப் பல்கலைக்கழகம். 5-ம் நூற்றாண்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் இது என்று சீனப் பயணி சுவான் சாங் (யுவான் சுவாங்) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்தவர்கள் பெரும்பாலும் பவுத்தர்கள்.
# இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்றும் 1857-ல் நிறுவப்பட்டன.
# ஆசியாவின் முதல், பழமையான மகளிர் கல்லூரி கொல்கத்தாவில் உள்ள பெத்யூன் கல்லூரி. தற்போது கொல்கத்தா பல்கலைக்கழகத்தின்கீழ் இது செயல்பட்டு வருகிறது. 1849-ல் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இது, 1879-ல் கல்லூரியானது.
இந்தக் கல்லூரியில் படித்ததன் மூலம் காதம்பினி கங்குலி, சந்திரமுகி பாசு ஆகிய இருவரும் பிரிட்டிஷ் பேரரசிலேயே முதன்முதலில் பட்டம் பெற்ற பெண்கள் என்ற பெருமையைப் பெற்றனர். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஸியா இங்கு படித்தவர்தான்.
# ஆசியாவின் மிகப் பெரிய உறைவிடப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை 'பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்' பெற்றுள்ளது. 1916 ஜனவரி 4-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில், தற்போது 27,000 மாணவர்களுக்கு மேல் பயில்கிறார்கள்.
# உலகின் மிகப் பெரிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) பெற்றுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் பேர் பயில்கிறார்கள்.
# உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர் ஐ.ஐ.டி.க்குச் சொந்தமாக விமான நிலையமே உள்ளது, தெரியுமா? கான்பூர் ஐ.ஐ.டியில் ‘வான்வெளிப் பொறியியல் துறை’ தனது மாதிரிகளைப் பரிசோதிக்க இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துகிறது. இந்த விமான நிலையத்தின் பெயர் கல்யாண்பூர் விமானநிலையம். ‘கிளைடர்’ எனப்படும் மிதவைக் கலன் மூலம் பறக்கும் திட்டமும் இந்த நிறுவனத்தில் உள்ளது.
# கர்நாடகத்தின் சூரத்கல்லில் உள்ள தேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு தனி கடற்கரையே உண்டு. அரபிக் கடல் ஓரமாகத் தனி கலங்கரை விளக்கத்துடன் 250 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது, இந்தப் பல்கலைக்கழக வளாகம்.
# தமிழகத்தின் காந்தி கிராமம் அருகேயுள்ள கிராமியப் பல்கலைக்கழகம், கேரளத்தின் கோட்டயம், தெலங்கானாவின் நல்கொண்டா உள்ளிட்ட எட்டு இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.