

கு
ழந்தைப் பருவத்தில் அம்மா, அப்பாதான் முன்னுதாரணமாக இருக்கின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே செய்ய விரும்புவோம். இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங்கின் குழந்தைப் பருவமும் இப்படித்தான் இருந்தது. அவரது தாய், தந்தை இருவரும் புதிய விஷயங்களைத் தேடித் தேடித் தெரிந்துகொள்வதில் ஈடுபாடு கொண்டவர்கள்.
ஹாக்கிங்கின் அம்மா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல் தலைமுறை பெண் பட்டதாரிகளில் ஒருவர். தந்தை மருத்துவ விஞ்ஞானியாக இருந்தார். பெற்றோர் இருவருமே தொலைக்காட்சி பார்ப்பதில் ஈடுபாடு காட்டியதில்லை. சாப்பிடும் நேரத்தில்கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். எல்லோரின் கையிலும் ஒரு புத்தகம் இருக்கும்.
பள்ளியில் ஸ்டீவன் ஹாக்கிங், முதல் மதிப்பெண் மாணவராக இருந்ததே இல்லை. ஆனால் புத்தக வாசிப்பில் தீவிரமாக ஆர்வம் காட்டினார். புல் தரையில் படுத்துக்கொண்டு இரவில் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார். வீட்டுக்குச் செல்வதற்கான புதுப்புது பாதைகளை, தங்கை மேரியுடன் சேர்ந்து கண்டுபிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 16 வயதிலேயே உதிரிப் பாகங்களைச் சேர்த்து ஒரு கணினியை உருவாக்கிவிட்டார் ஸ்டீவன் ஹாக்கிங்.
சூரியக் குடும்பத்தைப் பற்றி உலகம் அதுவரை அறிந்திராத தகவல்களைச் சொன்ன இயற்பியல் விஞ்ஞானியாக ஹாக்கிங் மாறினார். நாம் வாழும் உலகம், உலகத்தை உள்ளடக்கியிருக்கும் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விளக்குவதற்கு முயன்றார்.
ஆராய்ச்சிப் படிப்பை முடித்தபோதே பிரபலமாகிவிட்டார். 21-வது பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. தனது ஷூவுக்கு முடிச்சைப் போடும்போது உடல் ரீதியான சங்கடத்தை உணர்ந்தார் ஹாக்கிங். நடப்பதிலும் பேசுவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. தசையும் உடல் இயக்கமும் மெதுவாகச் செயலிழந்து போகும் நோய் அது. மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருக்கமுடியும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
உயிருக்கு அச்சுறுத்தும் நோயையே வேலையைத் துரிதமாக்கும் கருவியாக்கினார் ஹாக்கிங். கலிலியோ இறந்த அதே நாளில் 300 வருடங்கள் கழித்து 1942-ம் ஆண்டு பிறந்தவர். இயக்க விதிகளைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன், பொதுச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கிய ஐன்ஸ்டைனைப்போல உலக மக்களுக்குத் தெரிந்த விஞ்ஞானியாக இருந்தார். உடல் செயல்பட முடியாத நிலையோ, உயிருக்கு அச்சுறுத்தும் நோயோ லட்சியங்களுக்குத் தடையே அல்ல என்பதை உணர்த்தியதால் சாதாரண மனிதர்களுக்கும் உதாரணமானவராகத் திகழ்ந்தார்.
அவரால் நடக்க முடியாமல் போனது. சக்கர நாற்காலியில் ஏறிக்கொண்டார். எழுத முடியாமல் போனது. குரல் கொண்டு தொடர்புகொண்டார். பேச முடியாமல் போனது. தசைகள் அசைவதைப் புரிந்துகொள்ளும் பிரத்யேக கணிப்பொறி நிரலைப் பயன்படுத்தி எண்ணங்களை வெளியிட்டார்.
நோய்களும் உடல் செயலின்மையும் ஹாக்கிங்கின் உற்சாகத்தைக் குறைக்கவேயில்லை. பயணத்தில் தீராத ஆர்வம் கொண்டார். அண்டார்டிகா உட்பட அனைத்துக் கண்டங்களுக்கும் பறந்து சென்றார். ஸ்டார் டிரக் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றினார். வெப்பக் காற்று பலூனில் பறந்து 60-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிரத்யேக போயிங் விமானத்தில் பூஜ்ய ஈர்ப்புப் பயணத்தை மேற்கொண்டார். பந்தயங்கள் வைத்து நண்பர்களான சக விஞ்ஞானிகளிடம் தோற்பதிலும் ஹாக்கிங் பேர் பெற்றவராகத் திகழ்ந்தார். மருத்துவர்களின் கணிப்பைத் தகர்த்து, 76 ஆண்டுகள்வரை வாழ்ந்து காட்டினார்.
பிரபஞ்சம், கருந்துளைகள் பற்றி இவர் கூறிய கருத்துகள் முக்கியமானவை. சக்கர நாற்காலியிலேயே பயணப்பட்டாலும் அவர் கனவுகள் பெரியவை. அவர் எழுதிய ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற புத்தகத்தை வாசிக்க வேண்டிய தருணம் இது.
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in