Published : 21 Mar 2018 10:53 AM
Last Updated : 21 Mar 2018 10:53 AM

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

சி

ங்க ராஜா வேட்டைக்குப் போனபோது ஆபத்தில் மாட்டிக்கொண்டார். வேட்டைக்காரர்கள் விரித்த வலையில் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

வலையிலிருந்து வெளியேற முடியாமல் உறுமினார். சத்தத்தைக் கேட்டு ஓடிவந்தது எலி.

"எலியே, என்னைக் காப்பாற்று” என்று பரிதாபமாகக் கேட்டார் சிங்க ராஜா.

"இப்படி மாட்டிக் கொண்டீர்களே ராஜா, இதோ நான் உங்களை விடுவிக்கிறேன்" என்று பற்களால் வலையைக் கடித்து, ராஜாவை விடுவித்தது.

"அன்பு எலியே, உருவத்தில் சிறியவனாயினும் இன்று நீ செய்த உதவி மிகவும் பெரியது. மகத்தானது. என்னைக் காப்பாற்றிய உனக்கு, இல்லை இல்லை உன் இனத்துக்கே நன்மை செய்யப் போகிறேன். இன்று முதல் நீங்கள் அச்சமின்றி வாழலாம். யாரும் உங்களை வேட்டையாடவோ, பிடிக்கவோ கூடாது என்று உத்தரவிடப் போகிறேன்” என்று நன்றியோடு சொன்னார் சிங்க ராஜா.

மறுநாள் அரசவையில் தன்னைக் காப்பாற்றிய எலிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தார் சிங்க ராஜா. எலிகளை யாரும் கொல்லவோ, வேட்டையாடவோ கூடாது என்று தடை விதித்தார். அவ்வாறு செய்வது தேசத் துரோகம் என்றும் அறிவித்தார்.

இதைக் கேட்டு அனைத்து விலங்குகளும் திடுக்கிட்டன. சிங்க ராஜாவின் புத்தி இப்படிப் போகிறதே? எலிகள் பெருகினால் காட்டுக்கு நாசம் விளையுமே என்று பேசிக்கொண்டன.

ராஜாவின் அறிவிப்பால் எலிகளுக்கு சந்தோஷம். எதிரிகளே இல்லாததால் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டன. எறும்புகள் சேர்த்து வைத்த உணவுகளைக் கொள்ளை அடித்தன. பொருள்களை நாசம் செய்தன. இவற்றின் ஆட்டம் பூனைகளுக்கும் பாம்புகளுக்கும் தெரிய வந்தபோதும் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தன. ஒருகட்டத்தில் பூனைகளின் முதுகிலேயே சவாரி செய்ய ஆரம்பித்தன எலிகள். ஆனால் அவை ராஜாவின் அரண்மனைக்குள் மட்டும் நுழையவே இல்லை.

எல்லா விலங்குகளும் நரியிடம் சென்று, எலிகளின் அத்துமீறல்களிலிருந்து காக்க வேண்டும் என்று முறையிட்டன. நரியும் எலிகளின் அராஜகம் அதிகமாகிவிட்டதை ஒப்புக்கொண்டு, ஒரு முடிவு கட்டுவதாக வாக்குக் கொடுத்தது.

எலிகளின் தலைவனைச் சந்தித்து நரி.

"எலிகளின் தலைவா, சிங்க ராஜா தங்களின் இனத்துக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் அரண்மனை விருந்துக்கு அழைத்துள்ளார். தாங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என்று கூறியது.

மகிழ்ச்சியுடன் வருவதாக எலிகளின் தலைவனும் தெரிவித்தது.

மறுநாள் எலிகள் படையெடுத்து வருவதாகச் சிங்கத்துக்குத் தகவல் தந்தது நரி.

"என்ன, எலிகள் படையெடுப்பா? அதுவும் என் மீதா? சிரிப்பாக இருக்கிறது” என்றது சிங்க ராஜா.

"உண்மைதான் மகாராஜா! எலிகளுக்குத் தாங்கள் அளித்த சலுகைகள் கண்ணைக் கட்டிவிட்டது. அகம்பாவத்தில் உங்களை விரட்டி விட்டு ஆட்சியில் அமர ஆசைப்படுகின்றன. அதனால்தான் படையுடன் வருகின்றன"என்றது நரி.

”உண்மையா?"

"உப்பரிகையில் இருந்து பாருங்கள். எலிகள் திரண்டு வருவது தெரியும். அவற்றை எச்சரித்துவிட்டு வருகிறேன்” என்று கிளம்பியது நரி.

எலிகளிடம் சென்ற நரி, "இது உங்கள் வீடு. விருந்தினரான உங்களைக் கவுரவிப்பதில் மகாராஜா மகிழ்கிறார். எனவே உங்கள் இஷ்டம்போல் தேவையானதைக் கேட்காமலேயே எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் உள்ளே நுழைந்ததும் மகாராஜா மீது தாவி முத்தமிட வேண்டும். அதுதான் அவருக்குப் பிடிக்கும் " என்று சொல்லிவிட்டு, சிங்கத்திடம் சென்றது.

”மகாராஜா, அந்த எலிகளின் அட்டகாசம் அடங்காது போலிருக்கிறது. உங்கள் அரசர் மீது பாய்ந்து கடித்துவிடுகிறோம் என்று குரல் கொடுக்கின்றன. அத்துடன் நமது அரண்மனையையும் சூறையாடுகின்றன பாருங்கள்" என்று நடக்காத ஒன்றை நடந்ததுபோல் சொன்னது நரி.

எட்டிப் பார்த்த சிங்கத்துக்கு எலிகளின் அட்டகாசம் எரிச்சலைத் தந்தது.

"என் உயிரைக் காப்பாற்றியதற்காக எலி இனத்துக்கே எவ்வளவு நன்மை செய்திருக்கிறேன். அதைப் புரிந்துகொள்ளாமல் என்னிடமே தங்கள் வேலையைக் காட்டுகின்றனவா? என்ன செய்கிறேன் பாருங்கள்” என்றபடி கோபத்துடன் சிங்க ராஜா வெளியே வந்தார்.

உடனே எலிகள் கூட்டமாகச் சேர்ந்து சிங்கத்தை முத்தமிட முயன்றன.

“ஐயோ, என்னைக் கொல்ல வருகின்றனவே இந்த எலிகள்… பூனைகளே எலிகளை வேட்டையாடுங்கள்”” என்று உத்தரவிட்டார் சிங்க ராஜா.

பூனைகள் ஆவலோடு பாய்ந்துவந்தன. ஒரு நொடி குழப்பம் அடைந்த எலிகள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடி மறைந்தன.

“நல்ல வேளை, நான் தப்பித்தேன். என்னைக் காப்பாற்றிய பூனைகளுக்கு ஏதாவது...?” என்று சிங்க ராஜா சொல்லி முடிப்பதற்குள், சிங்க ராஜாவின் வாயைப் பொத்தினார் சிங்க ராணி.

நிம்மதியாகச் சென்றது நரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x