Published : 08 May 2019 10:41 AM
Last Updated : 08 May 2019 10:41 AM

டிங்குவிடம் கேளுங்கள்: புறா வழியைக் கண்டுபிடிப்பது எப்படி?

மோர் சிலுப்பினேன். உறை ஊற்ற கொஞ்சம் தயிரை மிச்சம் வைக்கச் சொன்னார் அம்மா. முதன் முதலில் தயிர் எப்படி உருவாகியிருக்கும், டிங்கு?

பல உணவு வகைகள் தற்செயலாக உருவானவை, அல்லது கண்டுபிடிக்கப்பட்டவை. அப்படித்தான் தயிரும் உருவாகியிருக்க வேண்டும். பால் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு புளிக்க ஆரம்பித்துவிடும். பாலில் தற்செயலாகப் புளி, எலுமிச்சை போன்ற அமிலங்கள் விழுந்து, பாலைத் தயிராக மாற்றியிருக்கலாம்.

இந்தத் தயிர் சுவையாக இருந்ததால் பாலில் உறை ஊற்றி, தயிரை உருவாக்கியிருக்கலாம். பாலை அதிக நேரம் புளிக்காமல் வைத்திருக்க முடியாது. அதனால் பாலைத் தயிராக மாற்றி ஓரிரு நாட்கள் வைத்திருக்கலாம் என்பதால் இதைச் செய்ய ஆரம்பித்திருப்பார்கள், நவஸ்ரீ.

– பா.ரா. நவஸ்ரீ, 9-ம் வகுப்பு, செந்தில் பப்ளிக் பள்ளி, சேலம்.

பூமியின் காற்று மண்டலம் எவ்வளவு உயரம் வரை இருக்கும், டிங்கு?

பூமியிலிருந்து சுமார் 83.6 கி.மீ. உயரம்வரை காற்று மண்டலம் இருப்பதாக ஹங்கேரியைச் சேர்ந்த இயற்பியலாளர் தியோடர் வான் கார்மன் கூறினார். அதனால் காற்று மண்டலம் முடிவடைந்து விண்வெளி ஆரம்பிக்கும் எல்லையை, கார்மன் கோடு என்று அழைக்கிறார்கள். காற்று மண்டலம் சட்டென்று முடிவடைந்துவிடுவதில்லை. 80 முதல் 100 கி.மீ. உயரம்வரை காற்று மண்டலம் காணப்படுவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது, திவ்யதர்ஷினி.

– வி. திவ்யதர்ஷினி, 5-ம் வகுப்பு,

செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த டென்சிங் நோர்கே இந்தியரா, டிங்கு?

இல்லை கீர்த்தனா. டென்சிங் நோர்கே நேபாளத்தில் பிறந்தவர். உயரமான மலைப்பகுதியில் வாழக்கூடிய ஷெர்பா இனத்தைச் சேர்ந்தவர். முதுகில் சுமையைத் தூக்கிக்கொண்டு, கடினமான மலைப்பாதைகளில் வேகமாகச் செல்லக்கூடியவர்கள் இந்த ஷெர்பாக்கள். அவர்களில் ஒருவரான டென்சிங் நோர்கேயின் உதவியோடு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லரி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.

அதனால் இருவரும் உலகப் புகழ் பெற்றனர். பின்னர் டென்சிங் நோர்கே இந்தியக் குடியுரிமைப் பெற்று, மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜீலிங் மலைப் பிரதேசத்தில் வசித்தார். மலையேறும் கழகத்தை ஆரம்பித்து, பயிற்சியாளராகவும் இருந்தார். பத்மஜா நாயுடு விலங்கியல் பூங்காவுக்குள் இருக்கும் டார்ஜீலிங் இமயமலையேறும் கழகத்தில்  இவருக்குச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. நேபாளராகப் பிறந்து, இந்தியராக மறைந்தவர் டென்சிங் நோர்கே.

– ர. கீர்த்தனா, 4-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நாதன்கோவில்.

புறா எப்படித் தகவலைக் கொடுத்துவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே சரியாக வந்து சேர்கிறது, டிங்கு?

Homing Pigeon  என்று அழைக்கப்படும்  புறாக்களைத்தான் மனிதர்கள் வளர்க்கிறார்கள். இந்தப் புறாக்களுக்குப் பயிற்சி கொடுத்து, செய்தி அனுப்புவதற்கும், உலகப் போர்கள், பந்தயங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்திவந்தனர். அறிமுகம் இல்லாத ஓர் இடத்திலிருந்து தான் வசிக்கும் இடத்துக்கு மிகச் சரியாக இந்தப் புறாக்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

புறா தான் செல்லும் வழியை வரைபடமாக உணர்ந்துகொள்கிறது. திசைகாட்டி உணர்வும் இருக் கிறது. தலையில் உள்ள காந்தத் திசுக்களை வைத்து, பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து வழியைக் கண்டுகொள்கிறது. ஒளியை வைத்துச் செல்கிறது. அகவொலி வரைபடம் மூலம் வழியைக் கண்டுபிடிக்கிறது. மனிதர்கள் கற்றுக்கொண்டுதான் வழியை நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், புறாக்களுக்கு மரபணுவிலேயே இந்தத் தகவல் இருக்கிறது என்றெல்லாம்  சொல்லப்படுகின்றன.

ஆனால், இந்தக் காரணத்தால்தான் சரியான இடத்துக்குத் திரும்பி வருகிறது என்று உறுதியாக இதுவரை சொல்ல முடியவில்லை. இதுபற்றி இன்றும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலே சொன்னவற்றில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட காரணங்களைப் பயன்படுத்தி புறா வழியைக் கண்டுபிடிக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் சரியான காரணத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்புவோம், மலர்விழி.

– ஆ. ஜெ. மலர்விழி, 9-ம் வகுப்பு,

ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

வசதி இல்லாதவர்களிடம் தாராளக் குணமும் பிறருக்கு உதவும் குணமும் இருப்பது எப்படி, டிங்கு?

தாராளக் குணத்துக்கும் பிறருக்கு உதவுவதற்கும் வசதி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நல்ல மனம் இருந்தால் போதும், தென்றல். இல்லாதவர்களுக்குதான் கஷ்டம் புரியும். தங்களைப்போல் இன்னொருவர் கஷ்டப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில் இருப்பதைக் கொடுத்து, கஷ்டத்தைப் போக்குகிறார்கள். சில நேரம் அன்புக்காகவும் இருப்பதைக் கொடுத்து, மகிழ்ச்சியடைகிறார்கள்.

– எஸ். தென்றல், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x