

1970 முதல் 1990 வரை தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்தவர்களின் உலகில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தது வாண்டுமாமா. கதை, சித்திரக்கதை, வரலாறு, அறிவியல், பொது அறிவு என எந்த விஷயத்தை எழுதினாலும், குழந்தைகள் விரும்பும் வகையில் சுவாரசியமாக எழுதியவர் வாண்டுமாமா.
கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், ஓவியராகும் ஆர்வத்துடன் இதழியல் துறைக்கு வந்திருந்தார். விரைவிலேயே சிறார் எழுத்தாளராக மாறினார். ‘வானவில்' என்ற இதழில் எழுதுவதற்காகத் தொடக்கக் காலத்தில் 'வாண்டுமாமா' என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்.
கௌசிகன், விசாகன், சாந்தா மூர்த்தி எனப் பல பெயர்களில் அவர் எழுதியிருந்தாலும், வாண்டுமாமா என்ற பெயரே அவருடைய அடையாளமானது. சற்றும் திகட்டாத வகையில் 50 ஆண்டுகளுக்கு மேல் சிறார் இலக்கியம் படைத்து, சிறார் இலக்கியத் தனி உலகமாகவே மாறினார்.
சித்திரக்கதை மன்னர்
அவருடைய சிறார் எழுத்து ஆர்வத்துக்காகவே கல்கி நிறுவனம் ‘கோகுல'த்தைத் தொடங்கியது. தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றில் ‘கோகுலம்' (1972), ‘பூந்தளிர்' (1984) எனப் பிரபலமாக இருந்த இரண்டு சிறார் இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர் வாண்டுமாமா.
தமிழில் சிறாருக்கான சித்திரக்கதைகளை அவர் அளவுக்கு வேறு யாரும் விரிவாகவும் சிறப்பாகவும் முயற்சி செய்து பார்க்கவில்லை. ஓவியர் செல்லம், ராமு, வினு, கோபன் ஆகியோருடன் இணைந்து பல சித்திரக்கதைகளை அவர் படைத்திருக்கிறார். ‘கனவா, நிஜமா?', ‘ஓநாய்க்கோட்டை', ‘மர்ம மாளிகையில் பலே பாலு’, ‘கழுகு மனிதன் ஜடாயு’, ‘கரடிக் கோட்டை’ போன்ற சித்திரக்கதைகள் பிரபலமானவை.
அவருடைய கதைகள், சித்திரக்கதைகளில் இடம்பெற்ற பலே பாலு, சமத்து சாரு, அண்ணாசாமி, மாஜிக் மாலினி போன்ற பல்வேறு குணாதியசங்களைக் கொண்ட அவருடைய குழந்தைக் கதாபாத்திரங்கள் ஒரு தலைமுறை சிறார்களின் உலகில் நிரந்தர மனிதர்களாகவே மாறினார்கள்.
தைரியமாக வாசிக்கலாம்
‘குள்ளன் ஜக்கு’, ‘புலி வளர்த்த பிள்ளை’, ‘பலே பாலுவும் பறக்கும் டிராயரும்’ போன்ற கதைகள், நெடுங்கதைகள் குறிப்பிடத்தக்கவை. வரலாற்றுப் பின்னணியில் அமைந்த பல கதைகள், மர்மம் நிறைந்தவையாகவும், குழந்தைகளின் துப்பறியும் ஆற்றலைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன.
‘தோன்றியது எப்படி' (4 பாகங்கள்), ‘தெரியுமா, தெரியுமே’,‘தேதியும் சேதியும்’, ‘மருத்துவம் பிறந்த கதை', ‘நமது உடலின் மர்மங்கள்' ஆகியவை அவருடைய பிரபலமான பொது அறிவு / அடிப்படை மருத்துவ நூல்கள்.
அவருடைய எழுத்தில் 150-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அவர் எதை எழுதினாலும் குழந்தைகள் தைரியமாக வாங்கி வாசிக்கலாம். ஏன் பெரியவர்களும்கூட வாசிக்கலாம். ஏனென்றால், சுவாரசியம் என்பதன் மறுபெயர் வாண்டுமாமா.
வாண்டுமாமாவின் படைப்புகளை நூல்களாக வாங்க:
கவிதா பப்ளிகேஷன், தொடர்புக்கு: 044 24364243