

ஸ்னீச்சஸ் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்காது. அது ஒரு விநோத உயிரினம். அந்த உயிரினத்தின் உலகத்தில் இன்னொரு விசித்திரமும் உண்டு. ஒரு பிரிவு ஸ்னீச்சஸின் வயிற்றில் நட்சத்திர அடையாளமும் மற்றொரு பிரிவு ஸ்னீச்சஸின் வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் வாழ்ந்துகொண்டிருந்தன.
“நாங்க எல்லாம் நட்சத்திர ஸ்னீச்சஸ் தெரியுமா?’’ என்று நட்சத்திர ஸ்னீச்சஸ் தற்பெருமை அடித்துக்கொள்ளும். அத்துடன் “நட்சத்திரமற்ற ஸ்னீச்சஸ் தாழ்ந்தவை... நாங்க அதுங்களோட சேர மாட்டோம்” என்று அவை புறக்கணிக்கவும் செய்தன. இப்படியாக நட்சத்திரமற்ற ஸ்னீச்சஸ் ஒடுக்கப்பட்டவையாக இருந்தன.
ஒரு நாள் நட்சத்திரமற்ற ஸ்னீச்சஸ், தங்களின் வயிற்றிலும் நட்சத்திரம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டு, வருத்தத்துடன் கடற்கரையில் உலாத்திக்கொண்டு இருந்தன. அப்போது, விநோதமான ஆள் ஒரு விசித்திரமான வண்டியில் அங்கே சட்டென்று வந்து நின்றார்.
வந்ததும் வராததுமாக ஆர்வம் பொங்கும் குரலில் அந்த ஆள் சத்தமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். “நண்பர்களே, எம் பேரு வாரன் டிமோ. உங்க பிரச்சினையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். கவலைப்படாதீங்க. உங்க பிரச்சினைக்கு என்கிட்ட தீர்வு இருக்கு. உலகத்துல இருக்கற எல்லாப் பிரச்சினைக்கும் என்கிட்ட தீர்வு இருக்கு. உங்களுக்கு உதவி செய்யறதுக்குத்தான் இங்க நான் வந்திருக்கேன். வாங்க, வாங்க, எங்கிட்ட வாங்க! கட்டணமெல்லாம் எங்கிட்ட ரொம்ப ரொம்பக் கம்மி. ஆனா, வேலை எல்லாம் ராக்கெட் வேகத்துல நடக்கும். நூறு சதவீதம் உத்தரவாதமா உங்களுக்குப் பலன் கெடைக்கும்” என்றார்.
ஓர் இயந்திரத்தைக் காட்டி திரும்பவும் அந்த ஆள் பேசினார்: “நண்பர்களே, நட்சத்திரமுள்ள ஸ்னீச்சஸ்போல நீங்களும் மாறணுமா? ஒருத்தர் மூணு ரூபா கொடுத்தா போதும். நீங்களும் வயித்துல நட்சத்திரத்தைப் பொறிச்சுக்கலாம். கைல காசு, வாயில தோச! வாங்க, வந்து இந்த மிஷினுக்குள்ள போங்க” என்று ஆசை வார்த்தை காட்டினார்.
நட்சத்திரமற்ற ஸ்னீச்சஸ் எல்லாம் அந்த இயந்திரத்துக்குள் போயின. அந்தப் பெரிய இயந்திரம் விசித்திரமாகச் செயல்பட்டாலும், நல்ல பலனைத் தந்தது. வெறும் வயிற்று ஸ்னீச்சஸ் இப்போது நட்சத்திரத்துடன் இருந்தன.
இயந்திரம் மூலமாக நட்சத்திரம் பொறிக்கப்பட்ட ஸ்னீச்சஸ், ஆரம்பத்தில் இருந்தே நட்சத்திரத்துடன் இருந்த ஸ்னீச்சஸைப் பார்த்து, “இப்போ நாங்களும் கச்சிதமா ஒங்களைப் போலவே இருக்கோம். இனிமே எங்களை நீங்க பிரிச்சு வைக்க முடியாது. உங்க வறுத்தகறி விருந்துக்கு, இனிமே நாங்களும் வருவமே” என்றன.
முதலில் இருந்தே நட்சத்திரத்துடன் இருந்த ஸ்னீச்சஸ் இதைப் பார்த்து அலறிவிட்டு, “என்ன இருந்தாலும் நாங்கதான மேலான ஸ்னீச்சஸ். நீங்க மோசம்தான்... ஆனா, இனிமே அதை எப்படிப் பிரிச்சுத் தெரிஞ்சுக்கறது? “ என்று குழப்பத்துடன் முகத்தைச் சுளித்தன.
அப்போது, கண்ணடித்துக்கொண்டே வாரன் டிமோ அங்கே வந்தார். “நீங்க நெனைக்கறது மாதிரி விஷயம் அப்பிடி ஒண்ணும் மோசமாகல. உங்க அடையாளமும் அவங்க அடையாளமும் கொஞ்சம் கொழம்பிப் போயிடுச்சு. எங்கிட்ட வாங்க நண்பர்களே... தனித்தன்மை கொண்ட சிறந்த ஸ்னீச்சஸா உங்க எல்லாரையும் திரும்ப நான் மாத்திடுவேன். அப்பிடி மாத்தறதுக்குச் செலவு அதிகம் இல்ல. ஒரு ஆளுக்கு வெறும் பத்து ரூபாதான்... இந்த மெஷின் உங்க நட்சத்திரங்களக் காணாம ஆக்கிடும்” என்றார் வாரன் டிமோ.
திறமையான அந்த இயந்திரம் கொஞ்சம்கூடப் பிசகில்லாமால் வேலை செய்தது. முதலில் இருந்தே நட்சத்திரத்துடன் இருந்த ஸ்னீச்சஸின் வயிற்றில் இருந்த நட்சத்திரங்களை அந்த இயந்திரம் கச்சிதமாக அழித்துவிட்டது.
எல்லா ஸ்னீச்சஸுக்கும் நட்சத்திரத்தை அழித்த பிறகு, அவை எல்லாம் இணைந்து அணிவகுப்புப்போல நடந்து போயின. “இப்போ ஒரு சின்னச் சந்தேகம்கூட இல்லாம நீங்க யாரு, நாங்க யாருன்னு பிரிச்சுத் தெரிஞ்சுக்க எங்களால முடியும். ஒசந்த ஸ்னீச்சஸ் யாரு, தாழ்ந்த ஸ்னீச்சஸ் யாருன்னு இப்ப நாங்க தெளிவாச் சொல்லுவோம்” என்று அவை சத்தமாகக் கத்தின.
அதற்கு அப்புறம் வயிற்றில் நட்சத்திரம் பொறித்திருந்த ஸ்னீச்சஸ் கிலியடைந்து, பித்துப் பிடித்ததுபோல ஆகிவிட்டன. அப்புறம் என்ன? வாரன் டிமோ அவர்களிடமும் போனார். நட்சத்திரத்தை அழிக்கிற இயந்திரத்துக்குள்ளே வரச் சொன்னார்.
அதன் பிறகு அந்தக் கடற்கரையில் நாள் முழுவதும் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. இரண்டு வகை ஸ்னீச்சஸின் பிரச்சினைகளையும் வாரன் டிமோ மாற்றி மாற்றித் தீர்த்து வைத்துக்கொண்டே இருந்தார்.
நட்சத்திரம் அழிக்கப்பட்டது. நட்சத்திரம் பொறிக்கப்பட்டது.
சில உள்ளே போயின; சில வெளிய வந்தன.
ஓர் இயந்திரத்துக்குள் போன ஸ்னீச்சஸ் வெளியே வந்து, இன்னோர் இயந்திரத்துக்குள்ளே போவதற்கு வரிசையில் நிற்க ஆரம்பித்தன.
எல்லா ஸ்னீச்சஸும் ஒவ்வொரு முறையும் வாரன் டிமோவுக்குப் பணம் கொடுத்தன. விடாமல் ஓடிக்கொண்டும் இருந்தன.
நிமிடத்துக்கு ஒருமுறை அவை நட்சத்திரத்தை வயிற்றில் பொறித்துக்கொண்டன. இல்லை என்றால், அழித்துக்கொண்டன.
இப்போது என்ன ஆனது என்றால், நட்சத்திரம் உள்ள ஸ்னீச்சஸ் யாரு, நட்சத்திரம் இல்லாத ஸ்னீச்சஸ் யாரு என்று பிரித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. முதலில் நட்சத்திரம் இருந்ததற்கு இப்போது நட்சத்திரம் இல்லையா? இல்லை, முதலில் நட்சத்திரம் இல்லாமல் இருந்ததுதான் இப்போது நட்சத்திரத்துடன் இருக்கிறதா? அதுதான் இதுவா, இல்ல இதுதான் அதுவா?
ஒவ்வொரு முறையும் ஸ்னீச்சஸின் கையில் இருந்த காசு தீர்ந்துவிட்ட பிறகு வாரன் டிமோ, கடையைச் சாத்திவிட்டு நடையைக் கட்டிக்கொண்டே இருந்தார். கடற்கரையைத் தாண்டி தன்னுடைய வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது, உல்லாசமாக ஒரு பாட்டை அவர் பாடிக்கொண்டே போவார்: “என்ன நடந்தாலும் அவை மாறாது. தங்களோட வாழ்க்கையில இருந்து ஸ்னீச்சஸ் எதையுமே கத்துக்காது.”
ஆனால், வாரன் டிமோவின் நினைப்பில் மண்ணை வாரிப் போடும் ஒரு நாளும் வந்தது. திடீரென்று ஒரு நாள், தங்களோட அடிப்படைப் பிரச்சினை என்ன என்பதைப் புரிந்துகொண்ட புத்திசாலிகளாக ஸ்னீச்சஸ் மாறிவிட்டன. அந்த நாளில், அவை எல்லாம் ஒன்றாகக் கூடி, முக்கியமான ஒரு முடிவை எடுத்தன. அந்த முடிவுதான் என்ன?
ஸ்னீச்சஸ் என்றால், எல்லாமே ஸ்னீச்சஸ்தான்; அதில் உயர்ந்தது- தாழ்ந்தது என்று எந்த வேறுபாடும் கிடையாது. அந்த நாளுக்குப் பிறகு நட்சத்திர அடையாளத்தைப் பற்றி ஸ்னீச்சஸ் கவலையே படவில்லை. தங்களின் வயிற்றில் நட்சத்திரம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; எல்லாமே ஒரே மாதிரியானவைதான் என்று தங்களோட தனிச்சிறப்பை அவை உணர்ந்துவிட்ட பிறகு, வாரன் டிமோவுக்கு அங்கே எப்படி வேலை இருக்கும்?
- கதை, ஓவியம்: டாக்டர் சூஸ் | சுருக்கமாகத் தமிழில் : ஆதி