Published : 24 Apr 2019 12:00 PM
Last Updated : 24 Apr 2019 12:00 PM

டிங்குவிடம் கேளுங்கள்: பனி எப்படி உருவாகிறது?

குளிர்காலத்தில் அதிகமான பனிப்புகை ஏற்படுகிறதே ஏன், டிங்கு?

– கருப்பாயி, 5-ம் வகுப்பு, வி.கே.ஜி. உண்டு உறைவிடப் பள்ளி, முல்லை நகர், தேனி.

சூடான தண்ணீர் ஆவியாக மாறி நிலத்தின் மேல் பகுதிக்கு வரும்போது, அங்கே குளிர்ச்சியான காற்றுடன் சேர்கிறது. அதனால் கண்ணுக்குத் தெரியாத நீராவி, கண்ணுக்குத் தெரியக்கூடிய பனியாக மாற்றம் அடைகிறது. இந்தப் பனியில் மிக மிகச் சிறிய நீர்த்துளிகள்  காற்றில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இதைத்தான் பனி (Mist) என்கிறோம். பனிக்கும் மூடுபனிக்கும் (Fog) என்ன வித்தியாசம் என்றால், பனியில் சற்றுத் தொலைவில் இருக்கும் பொருட்களை, மனிதர்களைப்  பார்க்க முடியும். மூடுபனியில் அப்படிப் பார்க்க முடியாது. பனியைவிட மூடுபனி அடர்த்தியானது, கருப்பாயி.

வைரத்தின் எடையை காரட் அளவில் சொல்கிறார்களே, ஒரு காரட் என்றால் எத்தனை கிராம்? தங்கத்தைக் குறிப்பிடும் காரட்டும் இதுவும் ஒன்றா, டிங்கு?

– மா.வே. சிபி, 12-ம் வகுப்பு, மா.வே. சுந்தர நிலவன், 8-ம் வகுப்பு, ஜி.பி. பப்ளிக் பள்ளி,மேல்மருவத்தூர்.

வைரத்தில் காரட் என்பது அதன் எடையைக் குறிக்கிறது. ஒரு காரட் என்றால் 200 மில்லி கிராம், அதாவது 0.2 கிராம் எடை. 5 காரட் வைரம் என்றால் 1 கிராம் எடையைக் குறிக்கும், சிபி. தங்கத்தில் காரட் என்பது அதன் சுத்தமான தன்மையைக் குறிக்கிறது. தங்கத்தால் மட்டும் அணிகலனைச் செய்துவிட முடியாது. தங்கம் மென்மையானது.

அதனால் தங்கத்துடன் தாமிரம் போன்ற உலோகத்தைச் சேர்த்துதான் அணிகலனைச் செய்வார்கள். சுத்தமான தங்கம் என்பதை 24 காரட் என்று குறிப்பிடுகிறார்கள். இதில் 18 பங்கு தங்கத்தை்யும் 6 பங்கு தாமிரத்தையும் கலந்து செய்கிறார்கள். பொதுவாகத் தங்க அணிகலன்கள் 18 கா்ரட்டில் செய்யப்படுகின்றன, சுந்தர நிலவன்.

உலகில் எத்தனை நாடுகள் உள்ளன, டிங்கு?

– ஐஸ்வர்யா, 8-ம் வகுப்பு, நியூ பிரின்ஸ் மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம், சென்னை.

தற்போது 197 நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து இருக்கிறது. இவற்றில் 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக இருக்கின்றன. ஹோலி சீ, பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளராக இருக்கின்றன.

தைவான் நாட்டை சீனக் குடியரசின் அங்கமாகக் கருதிவந்த ஐக்கிய நாடுகள் சபை, தற்போது தைவான், கொசோவோ நாடுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது, ஐஸ்வர்யா. இவை தவிர, தன்னிச்சையாக இயங்கும் பகுதிகளும் இருக்கின்றன.

நான் வளர்ந்துவிட்டதால் இந்தப் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட வேண்டாம் என்கிறார் அப்பா. நீ உட்பட எல்லோரும் கேக் வெட்டிதானே பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள்?  அப்பாவுக்கு எப்படிப் புரிய வைப்பது, டிங்கு?

– ஆர். கெளஷிக்,  8-ம் வகுப்பு, ஈரோடு.

அப்பாவுக்குப் புரிய வைக்க வேண்டியதில்லை, உங்களுக்குத்தான் புரிய வேண்டும். கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் எல்லாம் சமீபத்தில்தான் பரவலாகியிருக்கிறது. பிறந்தநாளை எல்லோரும் கொண்டாடுவதாக நீங்கள் நினைப்பதும் தவறு. அதிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவது எல்லாம் அவரவர் வசதியைப் பொறுத்ததுதான்.

இதுவரை கேக் வெட்டிக் கொண்டாடிய அப்பா, இப்போது ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். உங்களுக்குப் புரியவில்லை என்றால், அவரிடமே காரணம் கேளுங்கள். வேறு எந்தக் காரணமும் இல்லாமல், நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்று சொன்னாலும் அதுவும் சரியான காரணம்தான். இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் நீங்களே கேக் வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்கள்.

நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள், உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் உங்கள் அப்பா இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதுவரை கேக் வெட்டிக் கொண்டாடியதை எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ, கேக் வேண்டாம் என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உலகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவதில்லை.

அதனால் இந்த விஷயத்துக்கு வருத்தப்பட வேண்டியதில்லை. கேக் இல்லாமலும் அதே மகிழ்ச்சியோடு பிறந்தநாளைக் கொண்டாட முடியும். மகிழ்ச்சிக்கு கேக், துணி, பரிசு, விருந்து எதுவும் அவசியம் இல்லை. அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் கெளஷிக். எனக்குப் பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இல்லை. இதுவரை கேக் வெட்டி, பிறந்தநாளைக் கொண்டாடியதும் இல்லை.

முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. நான் நோஞ்சானாக இருப்பதால், முட்டை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார் தாத்தா. என்ன செய்வது, டிங்கு?

– எஸ். விகாஷ், 6-ம் வகுப்பு, வித்யாசாகர் குளோபல் பள்ளி, செங்கல்பட்டு.

தாத்தாவும் உங்கள் உடல் நலம் பற்றிய அக்கறையில்தான் முட்டையைச் சாப்பிடச் சொல்கிறார். வேக வைத்த முட்டை பிடிக்கவில்லை என்றால், பொரியல், ஆம்லெட் என்று வேறுவிதமாகச் செய்து சாப்பிடலாம். அதுவும் பிடிக்கவில்லை என்றால், முட்டைக்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்த காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள், பருப்புகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 பிடிக்காத உணவை வற்புறுத்தி சாப்பிட வைப்பதில் பலன் இல்லை என்பதைத் தாத்தாவிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள்,  புரிந்துகொள்வார். இந்த வயதில் நன்றாகச் சாப்பிட வேண்டும். நன்றாக விளையாட வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும், விகாஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x