Last Updated : 24 Apr, 2019 12:00 PM

 

Published : 24 Apr 2019 12:00 PM
Last Updated : 24 Apr 2019 12:00 PM

கதை: கலாவின் நிலா

கலாவுக்கு நிலா முகம் என்கிறார்கள். அவளது அம்மாவோ, நிலாவுக்குத்தான் கலாவின் முகம் என்கிறார். கலாவுக்கு, நிலாவைப் பார்த்துக்கொண்டே இருக்கப் பிடிக்கும்.

நிலாவைப் பார்த்தபடிச் சாப்பிடுவாள். அப்போது மட்டும் வழக்கமாகச் சாப்பிடுவதைவிடச் சற்று அதிகமாகச் சாப்பிடுவாள். நிலாவின் மீது அவள் ஆர்வம் இருப்பதால், கலாவுக்குப் பிடிக்காத காய்களையும் ஊட்டி விட்டுவிடுவார் அம்மா. ருசி அறியாமல் அப்படியே கொடுப்பதை எல்லாம் சாப்பிட்டுக்கொண்டிருப்பாள் கலா.

அது என்ன, இது என்ன என்று கேள்விகள் கலாவின் வாயிலிருந்து வந்துகொண்டே இருக்கும். யாராவது பொறுப்பாகப் பதில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவளது கேள்விகளில் பெரும்பாலும் நிலாதான் இடம்பிடித்திருக்கும்.

தேய்பிறையின்போது, “என்னோட நிலாவை யாரோ பிச்சிடறாங்க” என்று சொல்லி, பெற்றோரை ஆச்சரியத்தில் ஆழ்த்துவாள். தாத்தாவிடம், “வெண்ணிலா ஐஸ்கிரீம் நிலாவிலிருந்து உருகி வந்தது” என்று கதை சொல்வாள்.

அமாவாசையின்போது நிலாவை யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று பாட்டியிடம் புகார் வாசிப்பாள். கலாவின் கற்பனைத் திறனை நினைத்து எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

ஒருநாள் நிலாவை, அம்மா சுடும் ‘ஆப்பம்’ என்பாள். இன்னொரு நாள் அண்ணா விளையாடும் கேரம் போர்டு ‘ஸ்ட்ரைக்கர்’ என்பாள். இப்படிப் பல விதங்களில் உருவகப்படுத்திக்கொண்டே இருப்பாள்.

வெளிநாட்டிலிருந்து அத்தை, கலாவுக்கு ஓர் அழகான பொம்மை வாங்கிவந்திருந்தார். உடனே அதுக்கு ‘நிலா’ என்று பெயர் வைத்துவிட்டாள் கலா.

இப்போதெல்லாம் நிலா மீது அவளுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் அதிகமாகிவிட்டது. நிலா போன்று வெள்ளை வட்டப் புள்ளிகளுடைய உடைகளைத்தான் வாங்குகிறாள். வட்ட வடிவத் தலையணையைத்தான் பயன்படுத்துகிறாள்.

பாட்டி சாப்பிடும் மாத்திரைக்கு, ‘நிலா மாத்திரை’ என்று பெயர். கலா, நிலாவை முத்தமிடுவதுபோல ஒரு படம் எடுத்து வீட்டில் மாட்டி வைத்தார்கள். மறுநாள் நிலைக்கண்ணாடிக்குள் இறங்கி வந்த நிலாவைப் பார்த்து, “போட்டோவைப் பார்க்க வந்திருக்கு நிலா” என்றாளே பார்க்கலாம்!

அன்று கலாவின் இரு கைகளிலும் மருதாணியை வைத்துவிட்டார் அம்மா. மறுநாள் காலை சிவந்த கைகளை அப்பாவிடம் காட்டினாள்.

“அடடா! கலாவுக்கு நல்லா சிவந்திருக்கே!” என்றார் அப்பா.

“சிவப்பு நிலா” என்று கலா சிரித்தவுடன் அப்பா திகைத்துவிட்டார்.

இரவு முற்றத்தில் வைக்கப்பட்ட வாளி நீரைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் கலா. எங்கிருந்தோ ஓடிவந்த அவளது அண்ணனின் கால் வாளி மீது பட்டு, தண்ணீர் கீழே கொட்டிவிட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்தார் அம்மா.

‘ஓ’ வென்று அழுதுகொண்டிருந்தாள் கலா.

“வாளியில் இடித்தவனே சும்மா இருக்கான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நீ ஏன் அழறே?” என்று கேட்டார் அம்மா. பதில் எதுவும் சொல்லாமல் அழுகையை இன்னும் அதிகப்படுத்தினாள் கலா.

உடனே ஒரு குடம் நிறையத் தண்ணீரைக் கொண்டுவந்து, காலியான வாளியில் ஊற்றினான், அவளது அண்ணன்.

சட்டென்று அழுகையை நிறுத்தினாள் கலா. அவள் முகம் மலர்ந்தது. அண்ணனைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

“என்னடா பண்ணினே? எப்படிக் கலா சிரிக்கிறா?” என்று கேட்டார் அம்மா.

“வாளித் தண்ணில நிலாவைப் பார்த்துட்டு உட்கார்ந்திருந்திருக்கா. நான் வாளியைத் தள்ளிவிட்டதும் நிலாவைக் காணாமல் அழ ஆரம்பிஞ்ச்சிட்டா. அதான் மறுபடியும் தண்ணி ஊத்தினேன். இப்போ நிலா வந்துருச்சு. கலா சிரிக்கிறா” என்றான் புத்திசாலி அண்ணன்.

உடனே அண்ணனிடம் ஒரு தாளையும் பென்சிலையும் வாங்கி, அழகான நிலாவை முதல் முறை வரைய ஆரம்பித்தாள் கலா. நீங்களும் பூமிக்கு ஒளி கொடுக்கும் நிலாவைத்தானே முதலில் வரைய ஆரம்பித்தீர்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x