Last Updated : 24 Apr, 2019 12:01 PM

 

Published : 24 Apr 2019 12:01 PM
Last Updated : 24 Apr 2019 12:01 PM

திறந்திடு சீஸேம் 30: மெட்டல் டிடெக்டர் புதையல்கள்

வெவ்வேறு ஆண்டுகளில் கண்டெடுக்கப்பட்ட மூன்று புதையல்கள். வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவை. மூன்று புதையல்களுமே பிரிட்டனில் கண்டெடுக்கப் பட்டவை. மெட்டல் டிடெக்டர் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டவை.

மார்க் ஹாம்பிள்டன், ஜோ கனியா இருவரும் பொழுதுபோக வேண்டும் என்றால் மெட்டல் டிடெக்டரைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ஏதாவது ஒரு பகுதியைக் குறித்து வைத்துக்கொள்வார்கள்.

அந்த நிலப்பகுதியில் மெட்டல் டிடெக்டரைக்கொண்டு அலசுவார்கள். டிடெக்டர் ஏதாவது சமிக்ஞை கொடுக்கும் இடத்தில் தோண்டிப் பார்ப்பார்கள். பெரும்பாலும் ஏதாவது பழைய, வேண்டாத உலோகப் பொருட்கள் கிடைக்கும்.

2016, டிசம்பர். மார்க்கும் ஜோவும் இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷைரில் இருக்கும் லீக்ஃப்ரித் திருச்சபைக்குச் சொந்தமான நிலத்தில் மெட்டல் டிடெக்டருடன் அலைந்துகொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் டிடெக்டர் சிணுங்கியது.

நம்பிக்கையுடன் அந்த இடத்தைத் தோண்டினார்கள். அன்றைக்கு அவர்களுக்கு தங்க நகைகள் கிடைத்தன. மூன்று நெக்லஸ்,  பிரேஸ்லெட். ஆய்வாளர்கள் அந்த நகைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். கிடைத்த பதில் பிரிட்டனையே குதூகலம் கொள்ள  வைத்தது.

அவை இரும்பு யுகத்தைச் சேர்ந்தவை. அதாவது சுமார் 2,400 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 400-க்கும் கி.மு. 250-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஏதோ ஒரு பணக்காரப் பெண்ணின் நகைகள் என்று தெரியவந்தது.

யார் அந்தப் பெண், அவர் எப்படி இருந்திருப்பார், ஏன் இந்த நகைகளைப் புதைத்து வைத்தார், அல்லது தவறவிட்டு விட்டாரா என்பதற்கு எல்லாம் நம் கற்பனையில்தான் பதில்களைத் தேட வேண்டும்.

‘லீக்ஃப்ரித் இரும்பு யுக ஆபரணங்கள்’ என்று பெயரிடப்பட்ட அவை, இப்போது பிரிட்டனின் மிகப் பழமையான பொக்கிஷக் கண்டுபிடிப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவை ஹான்லே நகரத்தின் அருங்காட்சியகத்தில் (Potteries Museum & Art Gallery) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

2009 ஜூலை 5. அதே ஸ்டாஃபோர்ட்ஷைர், ஹாமர்விச் பகுதியில் ஒரு பண்ணை நிலத்தில் டெர்ரி ஹெர்பெர்ட் என்பவரும் ஏதாவது கிடைக்குமா என்று மெட்டல் டிடெக்டருடன் உலாவிக்கொண்டிருந்தார்.

அன்றைக்கு அவரது டிடெக்டர் சிணுங்கியது. அடுத்த ஐந்து நாட்களுக்குப் பலமுறை சிணுங்கிக்கொண்டே இருந்தது. அந்த நிலத்தில் டெர்ரி கண்டெடுத்தது 244 பொருட்கள். அத்தனையும் சிறுசிறு தங்க நகைகள், தங்கத்தாலான சிறிய பொருட்கள்.

டெர்ரி கொடுத்த தகவலின் அடிப் படையில் அப்போது தொடங்கி 2012 வரை அந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சுமார் 3,500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 5.1 கிலோ தங்கத்தாலானவை. 1.4 கிலோ வெள்ளியாலானவை. தவிர, கலைவேலைப்பாடுகள் கொண்ட பாத்திரங்களும் அதில் உண்டு. அந்தப் பொக்கிஷங்களின் பெயர், ‘ஸ்டாஃபோர்ட்ஷைர் புதையல்’.

அந்தப் பொருட்களை, நகைகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவை ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் பிரிட்டனை ஆண்ட ஆங்கிலோ-சாக்ஸன் ராஜ்யத்தைச் சேர்ந்தவை என்று கண்டறிந்தார்கள். அந்தச் சிறு தங்க நகைகளில் பெரும்பாலானவை, ஆயுதங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டவை. அந்தக் காலத்தில் போரிடப் பயன்படுத்தும் ஆயுதங்களைக்கூட, அவர்கள் எவ்வளவு கலைநயத்துடன் செய்திருக்கிறார்கள் என்று இவற்றின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

பிரிட்டனின் பர்மிங்ஹாம் அருங்காட்சியகம், இந்த ஆங்கிலோ-சாக்ஸன் பொக்கிஷங்களை  3.285 மில்லியன் யூரோ விலை கொடுத்து வாங்கியது. இப்போது அங்கே அவை காணக்கிடைக்கின்றன.

1992. நவம்பர் 16. பிரிட்டனின் சஃபோல்க் கவுண்டியிலிருக்கும் ஹாக்ஸ்னா கிராமம். அங்கே தன் பண்ணை நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த பீட்டர் வாட்லிங், தனது சுத்தியலைத் தொலைத்துவிட்டார்.

அந்தச் சுத்தியல் இல்லாமல் அவருக்கு வேலையே ஓடாது என்பதால் தன் நண்பரான எரிக் லாவெஸ் என்பவரை அழைத்தார். எரிக்கிடம் மெட்டல் டிடெக்டர் இருந்தது. அதைக்கொண்டு சுத்தியலைக் கண்டுபிடித்துவிடலாமே.

எரிக்கின் டிடெக்டர் வயலை, கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்குமாக வலம்வந்தது. சுத்தியல் அகப்படவில்லை. ஆனால், ஓரிடத்தில் சற்று பலமாகவே சமிக்ஞை வந்தது. எரிக் சுத்தியல் தேடுவதை விட்டுவிட்டு, அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அங்கே சில மரப்பெட்டிகள் புதைத்து வைக்கப் பட்டிருந்தன. ஓக் மரத்தினாலான பழைய பெட்டிகள். திறந்தார்கள். புதையலேதான். உரிய அதிகாரி களுக்குத் தகவல் சொல்லப்பட்டது.

அந்தப் புதையலில் அதிகம் கண்டெடுக்கப் பட்டவை நாணயங்கள். மொத்தம் 14,865  தங்கம், வெள்ளி, வெண்கல நாணயங்கள். எல்லாம் கி.பி. 407 காலத்துக்குப் பிறகான நாணயங்கள்.

பெரும்பாலும் ஐந்தாம் நூற்றாண் டைச் சேர்ந்தவை. ரோமானியப் பேரரசின் நாண யங்கள். அவை போக 200 பொருட்களும் அந்தப் பெட்டிகளில் இருந்தன. அவை வெள்ளியாலான கலைப்பொருட்கள், தங்க நகைகள்.

ஐந்தாம் நூற்றாண்டு என்பது பிரிட்டன் பகுதியில் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக் காலம். ரோமானியர்களின் ஆதிக்கம் அப்போது அங்கே முடிவுக்கு வந்திருந்தது. அந்த நேரத்தில் ஏதோ ஒரு குடும்பம், இந்தச் செல்வத்தை எல்லாம் சில பெட்டிகளில் போட்டு புதைத்து வைத்திருக்கிறது. யார் அந்தக் குடும்பம்? என்ன சூழலில் அவர்கள் இந்தச் செல்வங்களை இங்கே புதைத்தார்கள்? இவை எல்லாம் விடை கண்டறிய முடியாத கேள்விகள்.

ரோமானியர்கள் மிளகை விலைமதிப்பு மிகுந்த பொருளாகக் கருதினார்கள். எனவே மிளகை, கலைவேலைப்பாடுகள் கொண்ட பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைத்தார்கள். இந்தப் புதையலிலும் மிளகுப் பாத்திரங்கள் சில கிடைத்தன.

அதில் வெள்ளியாலான ராணியின் உருவம்கொண்ட மிளகுப் பாத்திரம் ஒன்று இருந்தது. இந்தப் பாத்திரத்தின் அடிப்பாகத்தைத் திருகித் திருகி மிளகைப் பொடி செய்துகொள்ள வசதியும் இருந்தது.

பல பாத்திரங்களில், கலைப்பொருட்களில் பெண் புலியின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. ஒரு பாத்திரத்தின் கைப்பிடியாகவே பாயும் பெண் புலி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கரண்டிகள், பாத்திரங்கள் பலவற்றிலும் ரோமானியப் பேரரசைக் குறிக்கும் சிலுவையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. உடலின் குறுக்காக அணியும் கற்கள் பதிக்கப்பட்ட தங்கச் சங்கிலி இந்தப் புதையலில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான ஆபரணம்.

‘ஹாக்ஸ்னா புதையல்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் பொக்கிஷங்களின் இன்றைய மதிப்பு தோரயமாக சுமார்  3.5 மில்லியன் யூரோ. லண்டன், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் அறை எண் 49-ல் இந்தப் பொக்கிஷங்கள் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

சரி, இறுதியில் எரிக் தன் நண்பர் பீட்டருடைய அந்தச் சுத்தியலைக் கண்டுபிடித்தாரா? ஆம். அந்தச் சுத்தியலும் இந்தப் புதையலைக் கண்டுபிடிக்க உதவியதன் நினைவாக அதே அருட்காட்சியத்தில்தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x