Published : 17 Apr 2019 12:13 PM
Last Updated : 17 Apr 2019 12:13 PM

டிங்குவிடம் கேளுங்கள்: கொசுவின் ரத்தம் ஏன் சிவப்பாக இல்லை?

ஒரு கூடையில் 10 மாம்பழங்கள் இருக்கின்றன. உன் நண்பர்கள் 10 பேருக்கும் மாம்பழம் பிடிக்கும். ஆளுக்கு ஒரு மாம்பழம் கொடுத்துவிடுகிறாய். ஆனாலும் ஒரு மாம்பழம் கூடையில் இருக்கிறது எப்படி, டிங்கு?

- முகமது ஷஃபி 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுல்தான்பேட்டை, திருப்பூர்.

ஐயையோ… கணிதம் என்றாலே கொஞ்சம் பயம். என்னிடம் இப்படி ஒரு கடினமான புதிரைக் கேட்டால் என்ன செய்வது? சரி, முயற்சி செய்து பார்க்கிறேன். ம்… 9 நண்பர்களுக்கும் தலா ஒரு மாம்பழத்தைக் கொடுத்துவிட்டேன். கடைசியாக இருந்த ஒரு மாம்பழத்தை, என் நண்பரும் இந்தப் புதிரைக் கேட்டவருமான முகமது ஷஃபிக்குக் கூடையுடன் கொடுத்துவிட்டேன்! சரியான விடையா?

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து வருத்தம் தெரிவித்திருக்கிறது. இதனால் என்ன பயன், டிங்கு?

–ஆர். சுதர்சன், 11-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

பயன் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. இறந்தவர்கள் திரும்பி வரப் போவதில்லை. இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எதைக் கொண்டும் ஈடுசெய்துவிட முடியாது. ஆனால், அன்று ஆணவத்துடன் இந்தப் படுகொலையை நடத்திய ஆங்கிலேய அரசாங்கம், இன்று தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததன் மூலம் தாங்கள் தவறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு ஆவணப்படுத்தியிருக்கிறது. இந்த மன்னிப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இந்திய மக்களுக்கும் சிறிய ஆறுதல் சுதர்சன்.

tinku-2jpg100 

கொசுவை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருகிறது. எறும்பை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருவதில்லை. ஏன் டிங்கு?

ஐ. யாழ்மொழி, 4-ம் வகுப்பு, சென்னை பப்ளிக் பள்ளி, திருமழிசை, சென்னை.

கொசுவை அடித்தாலும் எறும்பை அடித்தாலும் சிவப்பாக ரத்தம் வராது. பூச்சிகளில் இருக்கும் உயிர்திரவத்துக்கு, ‘குருதிநிணம்’ (Hemolymph) என்று பெயர். இதில் பல்வேறு சத்துகளும் ஹார்மோன்களும் மற்றும் சில பொருட்களும் இருக்கின்றன. இந்தத் திரவத்தில் சிவப்பணுக்களோ ஹீமோகுளோபினோ கிடையாது. இதனால் நம் ரத்தத்தைப்போல் அது சிவப்பாக இருக்காது. சில நேரத்தில் பூச்சிகளின் ரத்தம் வெளிர் மஞ்சளாகவும் வெளிர் பச்சையாகவும் தெரியும். பூச்சிகள் அப்போது எந்தத் தாவர உணவைச் சாப்பிட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த நிறம் உண்டாகும். மற்றபடி பூச்சிகளின் ரத்தத்துக்கு நிறமில்லை. கொசு உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பிறகு, நீங்கள் அடித்திருப்பீர்கள். அதனால் சிவப்பாக ரத்தம் இருந்திருக்கிறது, யாழ்மொழி.

சமைக்காத இறைச்சியை உண்டு வந்த மனிதர்கள், எப்போது சமைக்க ஆரம்பித்தார்கள், டிங்கு?

–வி. சதிஷ்குமார், 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம், திருவள்ளூர்.

நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகே சமைக்க ஆரம்பித்திருக்க முடியும். தற்செயலாக இறைச்சி நெருப்பில் விழுந்து, அதை எடுத்து உண்டபோது சுவையாகவும் சாப்பிட எளிதாகவும் இருந்திருக்கும். அதிலிருந்துதான் சமைக்க ஆரம்பித்திருக்க வேண்டும். சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் சமைத்து உண்ண ஆரம்பித்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், உணவு எப்போது சமைக்க ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான தொல்லியல் ரீதியான ஆதாரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, சதிஷ்குமார்.

சிங்கத்தை ஏன் காட்டு ராஜா என்கிறார்கள், டிங்கு?

–சி. ஷார்மி, 4-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நாதன்கோவில்.

சிங்கங்கள் தங்களைக் காட்டு ராஜாவாக இதுவரை அறிவித்துக்கொண்டதில்லை. மற்ற விலங்குகளும் சிங்கத்தைக் காட்டு ராஜாவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. காட்டு ராஜா என்ற பட்டத்தைச் சூட்டியவர்கள் மனிதர்களே! சிங்கம் அடர்ந்த காட்டுக்குள் வாழ்வதில்லை. அடர்த்தி குறைந்தப் பகுதிகளில்தான் வாழ்கின்றன. சிங்கத்தின் உருவம் வசீகரிக்கக்கூடியதாகவும் அதன் நடை கம்பீரமாகவும் இருப்பதால், சிங்கத்தைக் காட்டு ராஜாவாக மாற்றிவிட்டார்கள். ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் சிங்கங்களே அதிகமாக இருந்தன. அதனால் அவர்கள் கதைகளில் சிங்கத்தை ராஜாவாகச் சித்தரித்து எழுத ஆரம்பித்துவிட்டனர். அது அப்படியே பிற நாடுகளுக்கும் பரவிவிட்டது. பூனைதான் காட்டு ராஜா என்று நீங்கள் சொன்னாலும், சிங்கம் வந்து சண்டை போடாது, ஷார்மி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x