Published : 06 Mar 2019 10:33 am

Updated : 06 Mar 2019 10:33 am

 

Published : 06 Mar 2019 10:33 AM
Last Updated : 06 Mar 2019 10:33 AM

அன்றாட வாழ்வில் வேதியியல் 22: தண்ணீரில் போட்டால் வெடிக்கும்

22

பிப்பெட்: போர், போர்னு சண்டை போடுறது பத்தின பேச்சுதான், இப்ப அதிகமா இருக்கு.

பியூரெட்: ஆமா, இப்படி நாடு முழுக்கப் பார்க்கிறவங்க எல்லாம் போர்ப் பிரகடனம் செய்யுறது, எனக்கு ‘போர்’ அடிக்குது.


பிப்.: போர்னு கையைத் தூக்கி சத்தமா கத்துற எல்லோரும், நிஜத்துல ஒரு தடவகூட போரைப் பார்த்திருக்க மாட்டாங்க.

பியூ.: ஆமா, இப்படிப் பேசுறவங் களுக்கு எளிமையான ஒரு வேதியியல் பரிசோதனையை நான் பரிந்துரைக்கிறேன்.

பிப்.: அது என்ன?

பியூ.: பொட்டாசியம் தனிமத்தை ஒரு துளி எடுத்துத் தண்ணில போட்டா என்ன ஆகும்னு, அவங்கள செஞ்சு பார்க்கச் சொல்லணும்.

பிப்.: ஏதாவது பயங்கரமா நடந்திடுமா?

பியூ.: பட்டுனு வெடிச்சிடும். பரிசோதனை செஞ்சவங்க ஓடிடுவாங்க.

பிப்.: வெடிக்குமா? வழக்கமா தீயை அணைக்கத்தானே தண்ணி ஊத்துவோம்?

பியூ.: ஆமா, இதுல தண்ணி ஊத்துனா வெடிக்கும். பொட்டாசியம் எளிதுல வினைபுரியக் கூடியது. காத்துல இருக்கிற ஆக்சிஜனோடவும் வினைபுரியும் தண்ணில இருக்கிற ஹைட்ரஜனோடவும் வினைபுரியும்.

பிப்.: அதுதான் வெடிப்புக்குக் காரணமா?

பியூ.: தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து வெப்பத்தை உருவாக்கி, ஹைட்ரஜனைத் தீப்பிடிக்க வைச்சிடும். அப்படி எரியும்போது உருவாகும் தீச்சுடர் கத்தரிப்பூ நிறத்துல இருக்கும்.

பிப்.: சரி, அதுனால நமக்கு என்ன பிரயோசனம்?

பியூ.: நேரடிப் பலன் எதுவும் கிடையாது. அப்புறம், பொட்டாசியம்னா ஏதோ நமக்கு அந்நியமான பொருள்னு நினைச்சுக்க வேண்டாம்.

பிப்.: நமக்கு நெருக்கமான பொருளா என்ன?

பியூ.: பொட்டாஷ் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?

பிப்.: விவசாயிங்க இதைப் பத்திப் பேசுறத கேட்டிருக்கேன்.

பியூ.: விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் உரங்கள்ல ஒண்ணு பொட்டாஷ். இது வேறொண்ணுமில்ல, சாம்பல் சத்துதான். பயிர் வளர அவசியமான இந்தச் சத்து பல நூற்றாண்டுகளாப் பயன்படுத்தப்பட்டு வருது. தொடக்கக் காலத்துல ஃபிர் எனப்படும் ஊசியிலை மரத்தோட சாம்பல், பொட்டாஷ் உரமா பயன்பட்டிருக்கு.

பிப்.: எப்ப பொட்டாஷ் உரத்தை தொழில்முறைல உற்பத்தி பண்ண ஆரம்பிச்சாங்க?

பியூ.: 1840-ல ஜெர்மானிய வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக், தாவர வளர்ச்சிக்குப் பொட்டாசியம் அவசியம், பல மண் வகைகள்ல பொட்டாசியக் குறைபாடு இருக்குன்னு கண்டறிஞ்சார். அதன் பிறகு பொட்டாசிய உப்புகளுக்கான தேவை அதிகரிச்சது.

பிப்.: ஜெர்மானியர்கள் நவீன அறிவியல் கண்டுபிடிப்பாளர் களாச்சே?

பியூ.: ஆமா, 1868-ல ஜெர்மனில உள்ள ஸ்டாபர்ட் பகுதில பொட்டாசியம் குளோரைடு கனிமச் சுரங்கம் கண்டறியப்பட்டுச்சு. அதுக்கு அப்புறம் தொழிற்சாலைகள்ல பொட்டாஷ் உரத்தை உற்பத்தி பண்ண ஆரம்பிச்சாங்க. உலக பொட்டாசிய உற்பத்தியில் 95 சதவீதம் பொட்டாஷ் உர உற்பத்திக்காகவே பயன்படுது.

பிப்.: இந்த பொட்டாஷ் பயிர்கள்ல அப்படி என்னதான் பண்ணுது?

பியூ.: உயிருள்ள செல்கள் செயல்படுற துக்கு பொட்டாசிய அயனிகள் உதவுது.

பிப்.: ஓ, அப்படியா! இந்த பொட்டாஷ்ல இருந்துதான் பொட்டாசியம்கற பேரு வந்துச்சா?

பியூ.: ஆமா.

பிப்.: உயிருள்ள செல்களுக்கு பொட்டாசியம் உதவுதுன்னா, மனுசங்களுக்கு...

பியூ.: மனுசங்களின் இயல்பான நரம்புத் தூண்டலுக்கு, நரம்பு செல் சவ்வுகளில் பொட்டாசியம் அயனிகள் கடத்தப்படணும். பல்வேறு உடல் செயல்பாடுகள் நிகழ பொட்டாசியம்தான் காரணமா இருக்கு.

பிப்.: ஒருவேளை மனுசங்களுக்கு பொட்டாசியம் கிடைக்கலேன்னா?

பியூ.: அதிக ரத்தஅழுத்தம், பொட்டாசியக் குறைபாடு போன்றவை ஏற்படலாம். இதன் தொடர்ச்சியா வழக்கத்துக்கு மாறான இதயத் துடிப்பு, இதயத் துடிப்புத் தூண்டல் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

பிப்.: இதைச் சரி பண்ண என்ன செய்யணும்?

பியூ.: வாழைப்பழம், இளநீர், பால், பாதாம், பிஸ்தா, உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சோயா மொச்சை போன்றவற்றுல பொட்டாசியம் அதிகமிருக்கு. இதையெல்லாம் சாப்பிடலாம்.

பிப்.: அப்ப வயிற்றுப்போக்கு ஏற்பட்டா இளநீர் குடிக்கிறதும், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் வாழைப்பழம் சாப்பிடறதும் பொட்டாசியத்துக்காகத்தானா?

பியூ.: ஆமா, உடனடி ஆற்றலுக்கு பொட்டாசியம் உத்தரவாதம்.

 

chemistry-2jpg

இந்த வாரத் தனிமம்: பொட்டாசியம்

குறியீடு: K

அணு எண்: 19

லத்தீன் மொழியில் காலியம் என்று பொட்டாசியம் அழைக்கப்படுவதால், K என்பதே இதன் குறியீடு. காலியம் என்றால் பொட்டாஷ் என்று அர்த்தம்.

கார உலோகங்கள் (Alkali Metal) வகையில் வரும் இது, மிகவும் மிருதுவானது. கத்தியைக்கொண்டே வெட்டிவிடலாம். பூமியின் மேலோட்டில் அதிகம் கிடைக்கும் ஏழாவது தனிமம்.

எளிதில் வினைபுரிவதன் காரணமாக, பொட்டாசியம் இயற்கையாகத் தனியாகக் கிடைப்பதில்லை, அயனி உப்புகளாகவே கிடைக்கிறது. தனி பொட்டாசியம் வெள்ளி நிறத்தில் இருக்கும். வெறும் காற்றிலேயே ஆக்சிஜ னேற்றம் அடையும். கடல் நீரிலும் பல கனிமங்களிலும் பொட்டாசியம் உள்ளது.

பொட்டாசியம் பண்டைக் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டுவந்தாலும், அது சோடியம் கனிமங்களில் இருந்து வேறுபட்டது என்பது புரிந்துகொள்ளப்படாமலே இருந்துவந்தது. பொட்டாசியம், சோடியம் இடையிலான அடிப்படை வேறுபாட்டை ஜார்ஜ் ஏர்னஸ்ட் ஸ்டால் பொ.ஆ. 1702-ல் முதன்முதலில் முன்வைக்கிறார். இந்த வேறுபாட்டை பொ.ஆ. 1736-ல் ஹென்றி மான்கேயு நிரூபித்தார்.

மின்பகுப்பு மூலம் பிரித்தெடுக்கப்பட்ட முதல் உலோகம் பொட்டாசியம். சர் ஹம்ப்ரி டேவி பொ.ஆ. 1807-ல் இதை முதன்முதலில் பிரித்தெடுத்தார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
அன்றாட வாழ்வில் வேதியியல்அறிவியல் தொடர்அறிவியல் தகவல்கள்பொது அறிவுத் தகவல்Chemistry factsDaily life scienceDaily life chemistryபொட்டாஷியம் தகவல்கள்Potassium facts

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x