

ரஷ்யாவின் பேரரசராக இருந்த நான்காம் இவானைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், ‘உலகில் வாழ்ந்து மறைந்த மிக மிகக் கெட்டவர்களில் ஒருவர்!’. ஓர் உதாரணம் சொல்லலாம். சிறு வயதில் இவானுக்குப் பூனை, நாய்களை உயரத்திலிருந்து கீழே போட்டுக் கொல்வதுதான் பிடித்தமான விளையாட்டாக இருந்தது. இளவரசராக இருந்தபோது ஐந்தறிவு உயிரினங்கள். பேரரசராகப் பதவியேற்ற பின் ஆறறிவு உயிரினங்கள் அவரால் கணக்கு வழக்கின்றிக் கொல்லப்பட்டன.
இந்தக் கெட்டவருக்கும் ஒரே ஒரு நல்ல பழக்கம் இருந்தது. நான்காம் இவான், அரிய புத்தகங்கள் கொண்ட பெரிய நூலகம் ஒன்றைப் பாதுகாத்துவந்தார். எப்படி உருவானது அந்த நூலகம்? அதன் வரலாறு என்ன?
பதினைந்தாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டிநோபிளைத் துருக்கியர்கள் கைப்பற்றினார்கள். அதுவரை அதனை ஆண்ட பைசாந்தியர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கடைசி பைசாந்தியப் பேரரசரான பதினொன்றாம் கான்ஸ்டண்டைன், ரோமில் அடைக்கலம் புகுந்தார். அப்போது அவர், கான்ஸ்டாண்டிநோபிளின் நூலகத்தையே காலி செய்து தன்னுடன் எடுத்துச் சென்றார்.
பதினொன்றாம் கான்ஸ்டண்டைனின் உறவுக்காரப் பெண்ணான சோஃபியாவை, ரஷ்யப் பேரரசரான மூன்றாம் இவான் திருமணம் செய்துகொண்டார். அந்த நூல்களை எல்லாம் தனது திருமணச் சீராக மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்ல சோஃபியா முடிவெடுத்தார். ரோம் வழியாக மாஸ்கோவுக்குச் சுமார் நூறு வண்டிகளில் அந்த நூல்கள் பயணமாயின.
அவற்றில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியக் கண்டங்களில் சேகரிக்கப்பட்ட ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், எகிப்தியன், அரபு மொழிகளில் அமைந்த பல்வேறு நூல்கள் இடம்பெற்றிருந்தன. பண்டைய கிரேக்கக் கவிஞர்களான பிண்டர், கல்வோஸின் கவிதைகள் இருந்தன. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் பாலிபியஸின் நூல்கள் இருந்தன. பண்டைய ரோமானிய வரலாற்றாசிரியர் டாசிடெஸின் நூல்கள் இருந்தன. கல்வோஸின் கவிதைகள், ரோமானிய வரலாற்றாசிரியர் சியுடோனியஸின் Lives of the Twelve Caesars, ரோமானியக் கவிஞர் விர்ஜிலின் படைப்புகள் என்று எண்ணற்ற பொக்கிஷங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தச் சேகரிப்பில் பல நூல்கள் ஆசிரியர்களின் கைகளாலேயே எழுதப்பட்டவை. பல நூல்களின் அட்டைகளும் பக்கங்களும் விலையுயர்ந்த உலோகங்களாலும் கற்களாலும் இழைத்து இழைத்துச் செதுக்கப்பட்டவை. அந்த நூல்களின் இன்றைய மதிப்பு என்பது அளவிடவே முடியாதது.
அன்றைக்கு மாஸ்கோவில் தீவிபத்து மிகவும் சகஜமானது. மரத்தால் கட்டப்பட்ட கிரெம்ளின் அரண்மனை அடிக்கடி தீவிபத்தில் சிக்கிக்கொண்டிருந்தது. எனவே மூன்றாம் இவான் கிரெம்ளின் அரண்மனையைப் பிரம்மாண்ட கல் கட்டிடமாக மாற்றிக் கட்டும் பணிகளை மேற்கொண்டார். ‘நம்மிடம் இருக்கும் அரிய நூல்களைப் பாதுகாக்கும் விதமாக பலமான நூலகக் கட்டிடம் ஒன்றையும் கட்டித் தாருங்கள்’ என்று பேரரசி சோஃபியா கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட மூன்றாம் இவான், அடித்தளத்தில் கற்சுவர்களால் ஆன சுரங்க அறைகள் அமைத்தார். அந்த நூல்களைப் பத்திரமாகப் பாதுகாக்கும்படியான பெட்டகங்களை அமைத்தார்.
மூன்றாம் இவானின் காலத்துக்குப் பிறகு நான்காம் இவான் என்ற Ivan the terrible ஆட்சிக்கு வந்தார். அவர் அந்த நூலகத்தை நன்றாகவே பராமரித்தார். பல்வேறு மொழிகளில் இருந்த நூல்களை, அறிஞர்களைக் கொண்டு ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யும் பெரும்பணியை மேற்கொண்டார். இவானின் காலத்தில்தாம், ரஷ்யாவின் முதல் அச்சுப் புத்தகம், The Apostle வெளியானது. எதிரிகள் யாரும் பாதாள நூலகத்தை நெருங்கிவிடாதபடி அதற்குக் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
சொல்லப்போனால், பிரம்மாண்ட கிரெம்ளின் அரண்மனையில், அந்தப் பாதாள நூலகம் இருந்த இடமே வெகு சிலருக்குத்தான் தெரியும் என்றும் செய்தி உண்டு. யாராவது எதிரிகள் அந்த நூலகத்தைக் கண்டுபிடித்து நெருங்கினால் அவர்களது கண் பார்வை பறிபோய்விடும்படி நான்காம் இவான் ஏற்பாடு செய்திருந்தார் என்றும் கதைகள் உண்டு.
கி.பி.1547-ல், அதாவது நான்காம் இவான் ஆட்சிக்கு வந்த வருடத்தில், கிரெம்ளினின் அருகே மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டது. ஒரு தேவாலயம், பல நூறு வீடுகள், கருவூலம், நூலகம், ஆயுதக்கிடங்கு போன்றவை அதில் நாசமாகின. வெடிமருந்துக் கிடங்கு ஒன்று பலத்தச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் சேதாரம் அதிகம். அதில் அந்தப் பாதாள நூலகமும் அழிந்துவிட்டது என்கிறார்கள். இல்லை, நான்காம் இவான் தனது இறுதிக் காலம்வரை அந்த நூலகத்தைப் பாதுகாத்தார் என்றும் சொல்கிறார்கள். சிலரோ, அப்படி ஒரு பாதாள நூலகம் இருந்ததற்கு ஆதாரமே கிடையாது என்கிறார்கள்.
ஓர் உறுதியான ஆதாரம் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எஸ்டோனியாவின் டோர்பட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேப்லோவ் என்பவர், பார்னு நகரத்தின் ஆவணக் காப்பகத்தில் ‘Manuscripts Held by the Tsar’ என்ற ஆவணத்தைக் கண்டெடுத்தார். அதாவது ரஷ்ய மன்னர்கள் அந்த நூலகத்தில் வைத்திருந்த புத்தகங்களின் பட்டியலைச் சொல்லும் ஆவணம் அது.
அதை அங்கேயே பத்திரமாக வைத்த டேப்லோவ், வெளியே சென்று வேறு சில ஆய்வாளர்களை அழைத்து வந்தார். மீண்டும் வந்து பார்த்தபோது அந்த ஆவணம் மர்மமாகக் காணாமல் போயிருந்தது. திரும்பக் கிடைக்கவே இல்லை. முதல் முறை அந்த ஆவணத்தைப் பார்த்தபோது, டேப்லோவ் அதிலிருந்து எடுத்த சில குறிப்புகள் மட்டுமே அந்த நூலகம் இருந்ததற்கான ஒரே சான்று.
பதினேழாம் நூற்றாண்டில் ரஷ்யப் பேரரசராகத் திகழ்ந்த பீட்டர் தி கிரேட், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவின் மீது படையெடுத்த நெப்போலியன் உள்ளிட்ட பலரும் அந்தப் பாதாள நூலகத்தைத் தேடி அலைந்தது வரலாறு. சென்ற நூற்றாண்டில் ரஷ்ய அதிபராகப் பொறுப்பேற்ற ஸ்டாலினும் அந்த நூலகத்தின் ரகசிய இடத்தைக் கண்டுபிடிக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் என்று செய்திகள் உண்டு. இந்த நூற்றாண்டுவரை அந்த முயற்சிகள் தொடர்கின்றன.
நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆட்சியாளர்கள் பாதாள நூலகத்தைத் தேடியபடியே இருக்கிறார்கள். அப்படி ஒருவேளை நூலகம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் நூல்கள் எல்லாம் சிதையாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியே.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com