Last Updated : 06 Feb, 2019 10:47 AM

 

Published : 06 Feb 2019 10:47 AM
Last Updated : 06 Feb 2019 10:47 AM

கதை: எங்கிருந்து வந்தாய்?

பள்ளியில் இருந்து வந்த குமுதாவுக்குப் பசி எடுத்தது. சுண்டல் செய்து வைத்துவிட்டு அம்மா வெளியே சென்றிருந்தார். ஒரு கிண்ணத்தில் சுண்டலைப் போட்டுக்கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

திடீரென்று இவள் பெயரைச் சொல்லி யாரோ அழைப்பதுபோல் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரும் இல்லை. மீண்டும் சுண்டலைச் சாப்பிட ஆரம்பித்தாள்.

“குமுதா… குமுதா…”

வாசலில் இருந்து குரல் வந்ததால் வேகமாக ஓடினாள். அங்கே அழகான ஒரு புள்ளிமான் குட்டி நின்றுகொண்டிருந்தது.

”ஆஹா! நீ எப்படி இங்கே வந்தே? என்னை யார் கூப்பிட்டது?” என்றபடி புள்ளிமானின் அருகில் குனிந்தாள் குமுதா.

“நான்தான் கூப்பிட்டேன்.”

”அட! புள்ளிமான் பேசி இதுவரை நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை. அதான் ஆச்சரியமாக இருக்கிறது” என்றாள் குமுதா.

“விருந்தினரை இப்படித்தான் நிற்க வைப்பியா? ரொம்பப் பசிக்கிது. கொஞ்சம் பால் கொடுக்க மாட்டியா?”

”பாலா! இதோ அம்மா எனக்காக வைத்திருக்கும் பாலைக் கொண்டு வரேன்” என்று ஓடிய குமுதா, ஒரு தட்டில் பாலை ஊற்றி வைத்தாள்.

வேகமாக இரண்டே நிமிடங்களில் குடித்து முடித்தது புள்ளிமான்.

”சரி, நீ எப்படி இங்கே வந்தே?”

புள்ளிமான் பதில் சொல்லாமல் குமுதாவையே பார்த்துக்கொண்டிருந்தது.

“காட்டிலிருந்து வழி தவறி வந்துட்டியா?”

“காடா? அப்படின்னா என்ன?”

“கிண்டலா?”

“நீ சாப்பிட்டுக்கொண்டிருந்த பொருள்தானே சுண்டல்? கிண்டல் எப்படி இருக்கும்?” என்று கேட்டது புள்ளிமான்.

”ஒண்ணுமே புரியலையே… நீ எப்படி இங்கே வந்தே? எப்படிப் பேசறே?”

”நீ என் தோழி. உன்னைக் குழப்புவதில் எனக்கு விருப்பமில்லை. சரி, நேற்று காலை எங்கிருந்தே?”

“நான் ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்லாதே. நீ கேட்டதும் நான் பதில் சொல்லிடணுமா?”

“பதில் சொல் குமுதா. உன் பதிலுக்குள், நீ கேட்ட கேள்விக்கான விடை ஒளிந்திருக்கிறது” என்ற புள்ளிமான் திண்ணையில் ஏறி அமர்ந்துகொண்டது.

“நீயே ஒரு புதிரா இருக்கே, இதில் நீ கேட்கறதும் புதிரா இருக்கு. விடுமுறைக்கு அமுதா வந்திருந்தாள். அவளுடன் சேர்ந்து தோட்டத்தில் விளையாடிக்கிட்டிருந்தேன்”.

“வேறு என்ன நடந்தது?”

“எனக்கு நினைவில்லை. நீ எப்படிக் காட்டிலிருந்து இங்கே வந்தே?” என்று மீண்டும் அந்தக் கேள்விக்கு வந்தாள் குமுதா.

“காடு காடு என்கிறாயே, அது எப்படி இருக்கும்?” என்று கேட்டது புள்ளிமான்.

”நானும் காட்டுக்குப் போனதில்லை. புத்தகத்தில் படிச்சிருக்கேன். டிவியில் பார்த்திருக்கேன். அடர்த்தியான உயரமான மரம், செடி, கொடிகள் இருக்கும். மான், முயல், யானை போன்ற தாவரங்களைச் சாப்பிடும் விலங்கினங்கள் இருக்கும். சிங்கம், புலி, சிறுத்தை போன்ற இறைச்சி சாப்பிடும் விலங்கினங்களும் இருக்கும். பறவைகள், பூச்சிகள், வண்டுகள் இருக்கும். ஒரு பக்கம் நீர்வீழ்ச்சி கொட்டும். ஆங்காங்கே ஓடை ஓடும். அங்கே என்னுடையது உன்னுடையது என்று எதுவும் இல்லை. எல்லாமே எல்லோருக்குமானது. இந்த நாட்டைவிட காடு அற்புதமான உலகமாக இருக்கும்” என்று குமுதா சொல்வதை வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தது

புள்ளிமான்.

“என்ன ஒண்ணுமே பதில் சொல்ல மாட்டேங்கிற?” என்று கேட்டாள் குமுதா.

“அந்த அற்புத உலகத்தைக் கற்பனை செய்து பார்த்தேன். இங்கே நான் மட்டும் தனியா இருக்கேன். அடுத்த முறை அமுதா வந்தால் என்னைக் காட்டில் விடச் சொல். அப்படியே சில நண்பர்களையும் கொடுக்கச் சொல்” என்றது புள்ளிமான்.

“நீ சொல்றது ஒண்ணும் புரியலை. உனக்கு நண்பன் தானே வேணும்? என்னுடன் வா.”

“எங்கே அழைச்சிட்டுப் போறே?”

“அமுதா உன்னைப்போல் ஒரு மான் குட்டியை நேற்று சுவரில் வரைந்து வைத்திருக்காள். அதை உனக்குக் காட்டறேன்” என்று புள்ளிமானைச் சுவர் பக்கம் அழைத்துச் சென்றாள் குமுதா.

அங்கே சுவர் மட்டும் இருந்தது. புள்ளிமானைக் காணவில்லை.

“ஐயோ… இங்கேதானே அழகாக அமுதா வரைஞ்சிருந்தாள். அந்த மான் எங்கே போனது? அடுத்த தடவை வந்தால் கேட்பாளே… நான் என்ன சொல்வேன்?” என்று பதற்றமானாள் குமுதா.

புள்ளிமான் சிரித்தது.

“நான் பதறுவது உனக்குச் சிரிப்பா இருக்கா?” என்று கோபப்பட்டாள் குமுதா.

”சிரிக்கிற மாதிரி நடந்து கொண்டால் சிரிப்பு வராதா?

”எனக்கு இப்ப அமுதா வரைஞ்ச ஓவியம் வேணும். உனக்குக் காட்டணும்.”

“ஏதாவது ஒண்ணுதான் நடக்கும்.”

“என்ன சொல்றே?”

“இவ்வளவு நேரம் சுவாரசியமா பேசிட்டிருந்ததுக்கும் பால் கொடுத்ததுக்கும் நன்றி. கண்ணை மூடு குமுதா” என்றது புள்ளிமான்.

குமுதா கண்களை மூடித் திறந்தபோது அங்கே புள்ளிமான் இல்லை.

”இது என்ன மாயம்? எங்கே போனே?” என்று கேட்டுக்கொண்டே சுவர் பக்கம் திரும்பினாள் குமுதா.

அங்கே அமுதா வரைந்த புள்ளிமான் அழகாக அமர்ந்திருந்தது.

ஓவியம்: தமிழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x