சாதனை: தங்கம் வென்ற இர்ஃபான்!

சாதனை: தங்கம் வென்ற இர்ஃபான்!
Updated on
1 min read

இர்ஃபானுக்கு ஸ்கேட்டிங் என்றால் விருப்பம் அதிகம். 7 வயதில் முறையாக ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். 5 ஆண்டுகளில் தேசிய அளவில் தங்கம் பெற்று, சாதனை படைத்திருக்கிறார்!

சென்னை யூனியன் கிறிஸ்டியன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவரும் இர்ஃபான், “என் அப்பாவுக்கும் ஸ்கேட்டிங் மீது ஆர்வம் இருந்தது. என் விருப்பத்தைச் சொன்னவுடன், அவரே பயிற்சியாளராக எனக்குப் பயிற்சியளிக்க ஆரம்பித்தார். முதல் 6 மாதங்கள் தொடக்க நிலை ஸ்கேட்டராக இருந்தேன். பின்னர் ரோலர் ஸ்கேட்டராக மாறினேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இன்லைன் ஸ்கேட்டராக இருக்கிறேன். 2013-ம் ஆண்டிலிருந்தே மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்” என்கிறார்.

‘ஸ்கூல் கேம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ தேசிய அளவில் நடத்திய 4 போட்டிகள், ‘ரோலர் ஸ்கேட்டிங் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா’ நடத்திய தேசிய அளவிலான 2 போட்டிகளில் இதுவரை பங்கேற்று இருக்கிறார். 2018-ல் சென்னையில் நடைபெற்ற மாவட்ட, மாநில  அளவிலான போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துடன் 4 தங்கப் பதக்கங்களைப் பெற்று, தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார்.

ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 56-வது தேசியப் போட்டியில் பங்கேற்று 500 மீட்டர் பிரிவில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். புள்ளிகள் அடிப்படையில் மேலும் ஒரு தங்கத்தை வென்ற இர்ஃபான், 2 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

”அப்பா டிராவல் ஏஜென்சி நடத்திவந்தாலும் காலையிலும் மாலையிலும் எனக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதுவரை 6 மாவட்ட அளவிலான போட்டிகளிலும் 4 மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று இருக்கிறேன். என்னுடைய இந்த வெற்றிக்கு என் உழைப்பு மட்டும் காரணமில்லை, என் விருப்பத்தைப் புரிந்துகொண்டு, இந்தத் துறையில் ஊக்குவிக்கும் பெற்றோரும் ஒரு காரணம்.

ஸ்கேட்டிங் மூலம் உடலும் மனமும் உறுதியாகிறது. வெற்றியையும் தோல்வியையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவமும் வந்திருக்கிறது. ஸ்கேட்டிங்கில் சிறந்த வீரராகவும் எதிர்காலத்தில் பயிற்சியாளராகவும் வருவதே இலக்கு” என்கிறார் இர்ஃபான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in