

மரப்பாச்சி சொன்ன ரகசியம் l யெஸ். பாலபாரதி, வானம் வெளியீடு | தொடர்புக்கு: 91765 49991
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் இன்றைக்கு மிகப் பெரிய பிரச்சினை. ஆனால், இது குறித்துக் குழந்தைகளிடம் பேச முடியுமா? அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுத்த முடியுமா? முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது மரப்பாச்சி புத்தகம். கடந்த ஆண்டில் வெளியாகி, சிறார் எழுத்துக்கான முக்கிய விருதுகளையும் இந்நூல் பெற்றிருக்கிறது.
யானையோடு பேசுதல் - காடர்கள் சொன்ன கதைகள் l மனிஷ் சாண்டி-மாதுரி ரமேஷ், தமிழில்: வ. கீதா, தாரா வெளியீடு | தொடர்புக்கு: 044 2442 6696
தமிழகக் காடுகளில் காடர் எனும் பழங்குடிகள் வாழ்ந்துவருகிறார்கள். தங்களுடைய முன்னோர் காடுகளில் எப்படி வாழ்ந்தார்கள் என்பது குறித்து, தங்கள் பேரன், பேத்திகளுக்கு வயதான காடர்கள் சொன்ன கதைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்தாளர் வ. கீதாவின் மொழிபெயர்ப்பும் மேத்யு ஃப்ரேமின் ஓவியங்களும் இந்நூலை தனித்துவம் கொண்டதாக மாற்றியுள்ளன.
அண்டா மழை l உதயசங்கர், வானம் வெளியீடு | தொடர்புக்கு: 91765 49991
ராஜாக்கள் எல்லாம் அதிவீர பராக்கிரமசாலிகள் என்று சொல்லும் கதைகளுக்கு மாறாக, அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போடும் அரசர்கள் செய்யும் தவறுகளை நகைச்சுவையாகச் சொல்லும் கதைகள் அடங்கிய தொகுப்பு.
சர்க்யூட் தமிழன் l ஆயிஷா இரா. நடராசன் | புக்ஸ் ஃபார் சில்ரன் | தொடர்புக்கு: 044 - 24332924
அறிவியல் புனைகதைகள் தமிழில் குறைவு. அந்தக் குறையைப் போக்கும் வகையில் ஆயிஷா நடராசன் எழுதியுள்ள இந்த நூலில் 12 அறிவியல் புனைகதைகள் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் கற்பனையான எதிர்காலத்தில் நிகழ்பவை.
கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள் l நிகோலாய் நோசவ், தமிழில்: ரகுரு | வாசல் வெளியீடு | தொடர்புக்கு: 98421 02133
நிகோலாய் நோசவ், புகழ்பெற்ற ரஷ்ய சிறார் எழுத்தாளர். அவரது பல புத்தகங்கள் ஏற்கெனவே தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் சாகசங்கள், குறும்புகள், பரவசங்கள் நிறைந்த இந்த நூல், முதன்முறையாகத் தமிழில் வெளியாகியுள்ளது.
குழந்தைகளுக்கான ஆப்பிரிக்கப் பழங்கதைகள் l எஸ்.பி. ஸாக்ஸ், தமிழில்: எம். பாண்டியராஜன் | நெஸ்லிங் புக்ஸ் (என்.சி.பி.எச்.) வெளியீடு | தொடர்புக்கு: 044-26251968
ஆப்பிரிக்கப் பழங்கதைகள் எப்போதுமே சுவாரசியமானவை. அதிலும் உயிரினங்களை அடிப்படையாகக்கொண்டு சொல்லப்படும் கதைகள் தனித்தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட புகழ்பெற்ற கதைகளின் தொகுப்பு.
சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்? l எம்.எம். சசீந்திரன், தமிழில்: யூமா. வாசுகி | புக்ஸ் ஃபார் சில்ரன் | தொடர்புக்கு: 044-24332424
சிறார் புத்தகங்களில் வரலாறும் முக்கியம் இல்லையா? குழந்தைகளுக்கான பாடங்களில் காரண காரியத்தைத் தேடும், தர்க்கப்பூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் பாடங்கள் இடம்பெற வேண்டும். அந்த வகையில் இந்தப் புத்தகம் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸ் பற்றிப் பேசுகிறது.
வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் l எஸ். சிவதாஸ், தமிழில்: ப. ஜெயகிருஷ்ணன் | அறிவியல் வெளியீடு | தொடர்புக்கு: 99943 68501
மலையாளத்திலிருந்து பல ஆசிரியர்கள், பல சிறார் நூல்கள் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த நூல்களில் முதல் வரிசையில் வைக்கத்தக்க ஒன்று, இயற்கைப்பாதுகாப்பை சுவாரசியமாகவும் அழகாகவும் சொல்லும் இந்த நூல்.
காட்டில் இருந்து வீட்டுக்கு-விலங்குகள்–1,2 l சரவணன் பார்த்தசாரதி | புக்ஸ் ஃபார் சில்ரன் | தொடர்புக்கு: 044 - 24332924
நாடோடியாக அலைந்துகொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனித இனம் வீட்டுக்கு எப்படிக் கொண்டுவந்தது என்பதை அறிய இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த நூல் உதவும்.
யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்... l கமலா பாசின், தமிழில்: சாலை செல்வம் | குட்டி ஆகாயம் வெளியீடு | தொடர்புக்கு: 98434 72092
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நூல் ஒரு வகையில் அணுகுகிறது என்றால், புகழ்பெற்ற இந்தப் புத்தகம் வேறொரு வகையில் அதே சிக்கலை அணுகியுள்ளது. சற்றே பெரிய குழந்தைகள் வாசிக்கக்கூடிய இந்தப் புத்தகமும் அவசியம் வாசிக்க வேண்டியவற்றுள் ஒன்று.
தினுசு தினுசா விளையாடலாமா? l மு.முருகேஷ் | தி இந்து வெளியீடு | தொடர்புக்கு: 9843131323
தமிழகத்தில் குழந்தைகளுக்கான மரபு விளையாட்டுகள் ஏராளம் உண்டு. ஆனால், கிராமங்களில்கூட இன்றைக்கு அவை பெரிதாக விளையாடப்படாத நிலையில், மறக்கக்கூடாத முக்கிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.
உடல் எனும் இயந்திரம் l டாக்டர் கு. கணேசன் | இந்து தமிழ் திசை வெளியீடு | தொடர்புக்கு: 74012 96562
மருத்துவ எழுத்தாளரும் பொது மருத்துவருமான டாக்டர் கு. கணேசன், மருத்துவத் தகவல்களை எளிமையாகவும் நேர்த்தியாகவும் எழுதுவதற்குப் புகழ்பெற்றவர். ‘மாயா பஜார்’ இதழில் அவர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்ற இதே தலைப்பிலான தொடர், தற்போது புத்தகமாக வெளியாகியிருக்கிறது.