

‘எனக்குக் கூச்சம் அதிகம், யாருடனும் சேரமாட்டேன். புத்தகங்களும் பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள்’ என்று தனது 12 வயது குறித்து காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரேதான் பிற்காலத்தில் நாடு முழுக்க இருந்த தலைவர்களையும் தொண்டர்களையும் திரட்டி நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.
தேசத் தந்தை என்பதைத் தாண்டி, இப்படிப் பல வகைகளில் நம் மீதும் சமூகத்தின் மீதும் காந்தி தாக்கங்களைச் செலுத்திக்கொண்டிருக்கிறார். காந்தி தன் வாழ்க்கையைப் பற்றி சத்திய சோதனை (My experiments with Truth) என்ற நூலை எழுதியுள்ளார். உலகப் புகழ்பெற்ற அந்த நூல் தமிழிலும் வெளியாகியுள்ளது. குழந்தைகள்-சிறார் வாசிப்பதற்காக அந்த நூலின் சுருக்கம், ‘என் வாழ்க்கைக் கதை’ (The story of my life) என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
ஏன் அழகாக எழுத வேண்டும், ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஏன் காப்பி அடிக்கக் கூடாது, இரண்டு ஆண்டு படிப்பை ஒரே ஆண்டில் கஷ்டப்பட்டு படித்தது, சிறு வயதில் பார்த்த இரண்டு நாடகங்கள் தன் மனதில் ஏற்படுத்திய தாக்கம் எனத் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு முக்கியச் சம்பவங்களை இந்த நூலில் காந்தி விவரித்துள்ளார்.
அதேநேரம், நம்பிக்கையுடனும் உண்மையின் மீதான பற்றுடனும் தன்னைப் போலவே முயன்றால், யார் வேண்டுமானாலும் காந்தி ஆக முடியும். தான் சாதித்ததைச் சாதிக்க முடியும் என்றும் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள ‘நவஜீவன் வெளியீட்டகம்’ வெளியிட்டுள்ள இந்த நூலைச் சுருக்கித் தந்தவர் பரதன் குமரப்பா, தமிழாக்கியவர் ரா. வேங்கடராஜுலு. 25 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக வெளியான இந்த நூல், 3 லட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.
என் வாழ்க்கைக் கதை, மகாத்மா காந்தி,
நவஜீவன் வெளியீட்டம்,
தொடர்புக்கு: www.navajivantrust.org