கதை: தங்க இடம் கிடைக்குமா?

கதை: தங்க இடம் கிடைக்குமா?
Updated on
2 min read

மரகதபுரி எல்லையில் அடர்ந்த காடு. மரங்கொத்தி ஒன்று உயரமான மரத்தில் அமர்ந்து எச்சமிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியே வந்த நரியின் தலையில் எச்சம் விழுந்துவிட்டது.

உடனே நரிக்குக் கோபம் தலைக் கேறியது. ”யார்டா அவன்? என் மேல எச்சம் கழித்தது?” என்று சத்தமாக ஊளையிட்டுக் காட்டையே அதிரவைத்தது.

மரங்கொத்திக்குப் பயம் வந்துவிட்டது. ”நரியே, தவறுதலாகப் பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்” என்று வருத்தத்துடன் கூறியது.

”மன்னிப்பெல்லாம் கிடக்கட்டும். நீ மரக்கிளையில் இருப்பதால்தானே எச்சத்தைக் கீழே கழிக்க வேண்டியிருக்கிறது? அது அந்த வழியே வருகிறவர்களின் தலை மீதும் விழுகிறது. அதனால் உனக்குப் பாதுகாப்பான, விசாலமான ஒரு இருப்பிடத்தைக் காட்டுகிறேன். அங்கே போய் சந்தோஷமாக நீ வசிக்கலாம்” என்று ஆசை காட்டியது நரி.

”அப்படியா? எத்தனை நாளைக்குத்தான் நானும் மழையிலும் குளிரிலும் நடுங்குவது? நீ சொல்லும் இடத்துக்கு நான் வரத் தயாராக இருக்கிறேன்” என்றது மரங்கொத்தி.

“சற்று நேரத்தில் திரும்பி வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன். இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டு, நரி ஓடிவிட்டது.

மரங்கொத்தியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புது இடத்துக்குச் செல்லத் தயாரானது. அப்போது காகம் அங்கே வந்தது. நடந்த சம்பவத்தைக் காகத்திடம் விளக்கியது மரங்கொத்தி.

“மரங்கொத்தியே, நரியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இப்படித்தான் ஒரு நாள் நான் வடையை வாயில் வைத்திருக்கும்போது நீ அழகாக இருக்கிறாய், உன் குரலும்  இனிமையாக இருக்கிறது. ஒரு பாட்டுப் பாடு என்றது. நானும்  பாட்டுப் பாட, வடை கீழே விழ, அதைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டது. அதனால் நரியிடம் உஷாராக இரு” என்று சொல்லிவிட்டுச் சென்றது காகம்.

“இந்தப் பொல்லாத காகத்துக்கு எனக்கு ஒரு நல்ல இடம் கிடைப்பதில் விருப்பம் இல்லை போலிருக்கு.  இதை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது மரங்கொத்தி.

அப்போது ஜோடி புறாக்கள் மரத்தில் வந்து அமர்ந்தன. ”மரங்கொத்தியே, எங்கேயோ கிளம்பற மாதிரி இருக்கே?” என்று கேட்டன.

“நரி, எனக்கு ஒரு புது இடம் காட்டுவதாகச் சொல்லியிருக்கு. அதான் காத்துக்கிட்டிருக்கேன்.”

”மரங்கொத்தியே, இந்தக் காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் நேரடியாகச் செயலில் இறங்கும். ஆனால் நரி மட்டும் தந்திரமாத்தான் ஒரு செயலைச் செய்யும். எங்கள் அனுபவத்தில் நரி மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. அதனால் யோசித்து முடிவெடு. நாங்கள் வருகிறோம்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றன.

”இந்தக் காட்டில் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு பொறாமை? இவங்களும் நல்லது செய்ய மாட்டாங்க. செய்கிறவர்களையும் தப்பு சொல்வாங்க. என்ன உலகமப்பா” என்று அலுத்துக்கொண்டது மரங்கொத்தி.

அப்போது அங்கு வந்த நரி, ”தயாரா, போகலாமா?” என்று கேட்டது.

மகிழ்ச்சியோடு கிளம்பியது மரங்கொத்தி. அரை மணி நேரப் பயணத்தில் ஓர் குகை அருகே வந்த நரி, ”இதுதான் அந்த வசதியான இருப்பிடம். உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. உன்னுடைய எச்சத்தை மேலிருந்து கழித்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள்” என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டது.

குகைக்குள் நுழைந்த மரங் கொத்திக்கு அதிர்ச்சி. எங்கும் இருள். ஓர் ஓரமாக ஒதுங்கிக்கொண்டது. குகை சற்று வெதுவெதுப்பாக இருந்தது. ’அட, நரி நமக்கு நல்ல இடத்தைத்தான் காண்பித்திருக்கிறது, நன்றி சொல்லணும்’ என்று  நினைத்துக்கொண்டது.

திடீரென்று ஏதோ சத்தம். மரங்கொத்திக்கு வயிறு கலங்கியது. சட்டென்று எச்சம் இட்டுவிட்டது. அவ்வளவுதான், “யாரது? எவ்வளவு தைரியம்?” என்ற குரல் கேட்டது.

’ஐயோ… எங்கு எச்சம் கழித்தா லும் பிரச்சினையாக இருக்கிறேதே’ என்று வருத்தத்துடன் கண்களை மூடிக்கொண்டது மரங்கொத்தி.

அதிகாலை பறவைகளின் சத்தம் கேட்டுக் கண் விழித்தது மரங்கொத்தி. அங்கே கண்ட காட்சியால் மரங்கொத்தியின் உடல் நடுங்கியது. சிங்கராஜா கர்ஜனையோடு நடை போட, அருகே அதன் குட்டிகளும் மனைவியும் அமர்ந்திருந்தன.

’ஐயோ, நரி என்னை ஏமாற்றிவிட்டது. காகமும் புறாக்களும் சொன்னதை நான் கண்டுகொள்ளவில்லை.  இப்போது வசமாக மாட்டிக்கொண்டேனே’ என்று வருத்தப்பட்டது மரங்கொத்தி.

சற்று நேரத்தில் சிங்கராஜாவின் குடும்பம் வெளியே சென்றது. ’எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய குகை? மரத்தில் ஒரு கூடு போதும்’ என்று நினைத்துக்கொண்டு, வேகமாக வெளியே பறந்து சென்றது மரங்கொத்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in