

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உயிருடன் உலவிய டைனோசர் ஒன்றைக் கடித்த கொசு, மரத்தில் உட்காரும். அதன் மேல் மரப்பிசின் படியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பிசின் உருண்டையை ஒரு சுரங்கத்திலிருந்து தோண்டி எடுப்பார்கள். ஆய்வாளர்கள், அந்தப் பிசின் உருண்டைக்குள் இருக்கும் கொசுவின் ரத்தத்தில் படிந்திருக்கும் டைனோசரின் டிஎன்ஏ-வைச் சேகரிப்பார்கள். அதைக் கொண்டு தவளையிலிருந்து மீண்டும் டைனோசரை உருவாக்குவார்கள். 1993-ல் வெளிவந்த ‘தி ஜூராசிக் பார்க்’ திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம்பெற்றிருக்கும்.
அதில் ஒரு மரப்பிசின் வருகிறதல்லவா. அதன் பெயர் அம்பர் (Amber). பல நூற்றாண்டுகளாக ஆபரணங்கள், கலைப் பொருட்கள் செய்யப் பயன்படும் தங்க நிறத்தினாலான பிசின். இதைக் கொண்டுதான் உலகின் எட்டாவது அதிசயம் உருவாக்கப்பட்டது. அந்த வரலாற்றைப் பார்ப்போம்.
கி.பி.1701-ல் ஜெர்மானியப் பேரரசின் முதன்மை ராஜ்ஜியமாக இருந்தது பிரஷ்யா. அதன் பேரரசர் முதலாம் பிரடெரிக். அவரது சார்லோட்டன்பெர்க் அரண்மனையில் அரசி சோபி ஆசைப்பட்டபடி, அழகு மிகுந்த அறை ஒன்று உருவாக்கப் பட்டது. கலைநயம் மிகுந்த சிற்பங்களும் அலங்காரங்களும் வடிவங்களும் அறை முழுக்கச் சுவர்களில் பொருத்தப்படும் விதமாக அம்பர் பிசினில் செதுக்கப்பட்டன.
ஜெர்மானிய சிற்பி அண்ட்ரீஸ் ஸ்கல்டர், டென்மார்க்கைச் சேர்ந்த அம்பர் சிற்பி காட்ஃப்ரைட் உல்ஃப்ரம் ஆகியோர் கூட்டணியில் இவை உருவாக்கப்பட்டன. பின் இவை சார்லோட்டன்பெர்க் அரண்மனைக்குப் பதிலாக, பெர்லின் நகர அரண்மனையில் பொருத்தப்பட்டன. எழில் கொஞ்சும் அம்பர் அறை முதலில் அங்கே உருவாக்கப்பட்டது.
1716-ல் ரஷ்யாவின் அரசர் பீட்டர், பிரஷ்யாவுக்கு வந்தார். அம்பர் அறையின் பேரழகில் அசந்து நின்றார். அப்போது பிரஷ்யாவின் அரசராக இருந்தவர் பிரடெரிக் வில்லியம். ஸ்வீடன் ராஜ்ஜியத்துக்கு எதிராக ரஷ்யாவும் பிரஷ்யாவும் கைகோத்திருந்தன. அந்த இணைப்பின் அடையாளமாக பிரடெரிக் வில்லியம், பீட்டருக்கு அம்பர் அறையைப் பரிசாகக் கொடுத்தார். அம்பர் அறையின் சிற்பங்களும் பாகங்களும் கழற்றப்பட்டன.
அவை 18 மாபெரும் பெட்டிகளில் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கே அரசக் குடும்பத்தின் கோடைகால வசிப்பிடமான கேத்தரின் அரண்மனையில் அம்பர் அறை மறுபடியும் கட்டப்பட்டது. சில வருடங்களில் ரஷ்ய மற்றும் ஜெர்மானிய சிற்பிகள் இணைந்து அம்பர் அறையை மேலும் விரிவுபடுத்தினர். ரஷ்யப் பேரரசின் போர் வெற்றிகளைக் குறிக்கும் புதிய சிற்பங்களுடன், தங்க முலாம் பூசப்பட்ட புதிய அலங்காரங்களுடன், கண்ணாடிகளும் பொருத்தி மேம்படுத்தப்பட்ட அந்த அறை, 590 சதுரஅடியில் மிளிர்ந்தது.
1755-ல் புஸ்கின் என்ற அரண்மனைக்கு (பழைய பெயர் ஜார்ஸ்கோயே செலோ) மீண்டும் அம்பர் அறை இடம் மாற்றப்பட்டது. இந்த முறை அலங்காரங்கள் அனைத்தும் கைகளாலேயே தூக்கிக்கொண்டு செல்லப்பட்டன. 1770-ல் அரசி இரண்டாம் கேத்தரின் காலத்தில் அம்பர் அறையில் கூடுதல் அலங்காரங்கள் செய்து முடிக்கப்பட்டன. 565 மெழுகுவர்த்திகளின் ஒளியில், தகதகக்கும் பொன்மஞ்சள் நிறத்தில் அம்பர் அறை அனைவரையும் மயக்கியது. அதன் இன்றைய மதிப்பு சுமார் 142 மில்லியன் டாலர்கள். அம்பர் அறையே உலகின் எட்டாவது உலக அதிசயம் என்று பலராலும் புகழப்பட்டது.
1917-ல் ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின், புஸ்கின் அரண்மனை அருங்காட்சியகமாக மாறியிருந் தது. இரண்டாம் உலகப்போர் நேரம். ஹிட்லரின் நாஜிப்படைகள் சோவியத் ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறின. அம்பர் அறையிலுள்ள பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், அம்பர் வேலைப்பாடுகளைப் பத்திரமாகக் கழற்றி எடுத்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைக்க வேண்டிய நிலை.
ஆனால், அதற்கான அவகாசம் இருக்கவில்லை. அம்பர் சிற்பங்கள் அதிகம் காய்ந்து போயிருந்ததால் அவசரமாக அகற்றும்போது உடைந்து போகும் நிலையில் இருந்தன. எனவே, பொறுப்பாளர்கள் மிகப் பெரிய வண்ணக் காகிதங்களை ஒட்டி, அம்பர் அறையை வேறொரு அறையாக மாற்றிக் காட்ட நினைத்தனர். புஸ்கின் அரண்மனை நாஜிப்படைகள் வசம் சென்றது. நாஜிப்படையினர் எளிதில் அம்பர் அறையை அடையாளம் கண்டுகொண்டனர்.
காகிதங்கள் கிழிக்கப்பட்டன. ‘அம்பர் அறை ஜெர்மானிய சிற்பிகள் பலராலும் உருவாக்கப் பட்டது. எனவே அது ஜெர்மானியர்களுக்கே சொந்தம்’ என்று நாஜிக்கள் நினைத்தனர். அந்த அறையிலுள்ள அம்பர் சிற்பங்கள், அலங்காரங்கள் அனைத்தும் 36 மணி நேரத்தில் கவனமாக அகற்றப்பட்டன. நாஜிப்படையினர் அவற்றை பத்திரமாக ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தனர். ஜெர்மனியின் கோனிக்ஸ்பெர்க் கோட்டையில் கொஞ்ச காலத்துக்கு அந்த அம்பர் பொக்கிஷங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில், கோனிக்ஸ்பெர்க் கோட்டை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பே அம்பர் அறை பொக்கிஷங்கள் எல்லாம் ஹிட்லரின் கட்டளைப்படி வேறொரு ரகசிய இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகத் தகவல் உண்டு.
1979. சோவியத் அரசு, அம்பர் அறையை புஸ்கின் கோட்டையில் மீண்டும் உருவாக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்தது. நாற்பது பேர் அடங்கிய ரஷ்ய, ஜெர்மானிய சிற்பக் கலைஞர்கள் இந்த வேலையில் சுமார் 24 ஆண்டுகள் ஈடுபட்டு அம்பர் அறையை மறுகட்டுமானம் செய்தனர். 2003-ல் இந்த வேலை முடிவுக்கு வந்தது. புதிய அம்பர் அறையில் மிக நுட்பமான வேலைப்பாடுகளில் சிறு குறைகள் உண்டு. இருந்தாலும் இது இன்றைக்கு ரஷ்யாவின் பெருமையாக விளங்குகிறது.
நாஜிப் படையினர் கொள்ளையடித்துச் சென்ற, பின் ஹிட்லரின் கட்டளைப்படி மறைத்து வைக்கப்பட்ட அசல் அம்பர் அறை பொக்கிஷங்கள் மீண்டும் கிடைத்தனவா? இல்லை. இன்றைக்கும் தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com