யானைக்கு இறக்கை இருந்தபோது...

யானைக்கு இறக்கை இருந்தபோது...
Updated on
1 min read

உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். சிரிக்கவும் கிண்டலடிக்கவும்கூடச் செய்வீர்கள். ஆனால், இங்கே சொல்லப் போகும் விஷயம், ஒரு காலத்தில் நடந்ததாக ஒரு கதை இருக்கிறது. அப்படி என்னதான் அது?

யானைகளுக்கு இறக்கைகள் இருந்தன தெரியுமா? நிச்சயமாக இருந்திருக்காது என்று நீங்கள் அடித்துச் சொல்லலாம். ஆனால், ஒடிஸாவில் உள்ள சாரோ இன மக்களைக் கேட்டால், ஒரு காலத்தில் யானைகளுக்கு இறக்கைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

அதுவும் இரண்டல்ல, நான்கு இறக்கைகளாம். உலகம் அப்போதுதான் உருவாகியிருந்தது. அந்த இறக்கைகளில் உட்கார்ந்து கடவுள் வருவதுதான் வழக்கம். கடவுளின் வாகனமாக யானைகள் இருந்தன. ஆனால், உலகம் உருவாகி, மனிதர்கள் வாழ ஆரம்பித்தபோது, யானைகளின் தேவை குறைந்துவிட்டது. அப்போது பறக்கும் யானைகளால் மனிதர்களுக்கு நிறைய கஷ்டங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

யானைகள் பறக்கும்போதே பிளிறின. வானில் ஜாலியாகப் பறந்து திரிந்தன. அலுத்துக் களைத்த நேரத்தில், கீழே இறங்கி, மனிதர்களின் வீட்டுக் கூரை மீது பறவைகளைப் போல அமர்ந்தன. யானையின் எடையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? எடை தாங்காமல் பல வீடுகளின் கூரைகள் உடைந்து சுக்குநூறாகின.

இதைக் கேள்விப்பட்ட கடவுளுக்குக் கோபம் வந்தது. இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவு கட்டினார். ஒரு நாள் யானைகளை விருந்துக்கு அழைத்து சாப்பிடச் சொன்னார். சாப்பாட்டின்போது வழங்கப்பட்ட பானம் ஒன்றை அருந்திய யானைகள் மயங்கிச் சரிந்தன. அப்போது தூங்கிக் கொண்டிருந்த யானைகளின் இறக்கைகளைக் கடவுள் வெட்டிவிட்டார்.

அதில் இரண்டு இறக்கைகளை மயிலிடம் தந்தார். அதன் மூலம்தான் மயிலுக்கு அழகு மிகுந்த தோகை கிடைத்தது. அடுத்த இரண்டு இறக்கைகளை வாழை மரத்துக்குத் தந்தார். அதனால்தான் வாழை மரம் இன்றும் நீளமான இலைகளுடன் காட்சி அளிக்கிறது.

மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்த யானைகள் தங்கள் இறக்கைகள் வெட்டப்பட்டதைக் கண்டு கோபமடைந்தன. வெட்டியது கடவுள் என்பதால் யானைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்குப் பிறகு நிலத்தில் நடந்து போக ஆரம்பித்துவிட்டன.

ஒடிஸா நாட்டுப்புறக் கதை
நன்றி:
மானிடவியல் ஆராய்ச்சியாளர் வெரியர் எல்வின் தொகுத்த உலகம் குழந்தையாக இருந்தபோது புத்தகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in