உப்பளத்துக்கு வந்த வெள்ளை யானை!

உப்பளத்துக்கு வந்த வெள்ளை யானை!
Updated on
2 min read

டொமினிக் அவசர அவசரமாக நடந்தான். சீக்கிரம் உப்பளப் பாத்திகளைச் சென்றடைய வேண்டும். அம்மா, அப்பா இருவரும் பசியோடு காத்திருப்பார்கள். பாட்டி கொடுத்த கஞ்சியை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மரங்களே வளராத பொட்டல் வெளியில் வெயில் சுட்டெரித்து. மணல் பாதையில் நடந்து, கால்கள் பொசுங்கின. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை, உப்பள வயல்கள் தெரிந்தன.

அலையூர் ஒரு கடலோரக் கிராமம். கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி, உப்பைப் பிரித்தெடுக்கும் உப்பளங்கள் அதிகமுள்ள ஊர். மேகத்தை வழிய விட்டதுபோல, ஊர் முழுவதும் உப்பளங்கள். கடற்கரையை ஒட்டிய பகுதியாதலால் அலைகளின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது.

டொமினிக் பொறுப்புடன் நடந்துகொள்வான். பாடங்களைப் படித்துவிட்டு, வீட்டு வேலைகளையும் செய்வான். அட்டை, பனையோலை, சாக்பீஸ் துண்டு போன்றவற்றில் அழகாக பொம்மைகள் செய்வான்.

பாத்திகள் ஓரமாக நடந்து சென்ற டொமினிக், சட்டென்று கீழே இறங்கினான். இடது கையில், ஒரு கைப்பிடி உப்பை அள்ளினான். உள்ளங்கையில் பிடித்து உருட்டினான். யானை செய்ய ஆசைப்பட்டான். பந்துபோல உருட்ட முடிந்ததே தவிர, பயனில்லாமல் போனது. வேகமாக நடந்துகொண்டே பாட ஆரம்பித்தான் டொமினிக்.

“ஆயிரம் தங்கக் காசிருந்தால்

யானை ஒன்று வாங்குவேன்

அதில் ஊரைச் சுற்றிப் பார்ப்பேன்

நானே ராஜா, நானே மந்திரி

யானை வாங்க தங்கக் காசில்லையே…”

அப்பாவுடன் சேர்ந்து பலர் உப்பு அள்ளிக்கொண்டிருந்தார்கள். ஆளுக்கோர் உப்புவாரிப் பலகையைப் பிடித்து, சிறுசிறு குவியலாகச் சேகரித்தார்கள். அம்மா உப்பைக் கூடையில் எடுத்து, வரப்பில் கொட்டி வைத்தார். உப்புக் குன்று உருவானது.

சட்டென்று டொமினிக் முன் வித்தியாசமான காட்சித் தெரிந்தது. கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தான். என்ன ஆச்சரியம்!

கடல் அலைகளை விலக்கிக்கொண்டு, ஒரு வெள்ளை யானை வந்தது. டொமினிக் பிரமிப்போடு நின்றான். உப்பள வயலை நோக்கி வந்தது அந்த வெள்ளை யானை. அவன் அம்மா, அப்பா உட்பட பாத்திகளில் வேலை செய்யும் மனிதர்கள் யாரும் இதைக் கவனிக்கவில்லை.

யானை பிளிறும் சத்தம், டொமினிக் காதுகளுக்கு மட்டுமே கேட்டது. அது, பாட்டியின் பாடலைப்போல அவ்வளவு இனிமையாக இருந்தது.

"டொமினிக், ஏறிக்கொள். உனக்கு ஊர் சுற்றிக் காண்பிக்கிறேன்" என்றது அந்த வெள்ளை யானை.

நடப்பது நிஜமா! காட்டு யானையைப் பற்றிப் படித்திருக்கிறான். கடல் யானை பற்றித் தெரியாதே. யோசனையில் ஆழ்ந்தவனை இடைமறித்தது வெள்ளை யானை.

"என்ன யோசிக்கிறே?” சட்டென்று யானை மீது தாவி ஏறினான் டொமினிக்.

வெள்ளை யானை பறக்க ஆரம்பித்தது. டொமினிக்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

”எனக்குப் பெயர் வை” என்று கேட்டது வெள்ளை யானை.

"உன் பெயர் அலாய். பிடிச்சிருக்கா?" மெல்லிய குரலில் கேட்டான் டொமினிக்.

தலையாட்டியது வெள்ளை யானை. முன்னங்கால்கள் இரண்டையும் மடித்து வைத்து, வரப்பில் உட்கார்ந்தது. டொமினிக் மெதுவாகக் கீழே இறங்கினான். அது கொம்பன் யானையும் இல்லை. கும்கி யானையும் இல்லை. சொன்னதை எல்லாம் செய்தது. திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உப்பளப் பாத்திகளில் மழை நீர் புகாமல் தடுக்கப் போராடினார்கள்.

கனமழை ஆரம்பித்தது. மழையில் நனைந்த அலாய், கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது. உப்பு யானை முழுவதுமாகக் கரைந்து கடலுக்குள் ஓடியது.

அழுகையுடன் கடற்கரையில் நின்றான் டொமினிக். அவன் கால்களை அலைகள் தொட்டுச் சென்றபோது, ஒரு சங்கு இருந்தது. சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டான் டொமினிக். வெள்ளை யானையின் பிளிறல் சத்தம் கேட்டது. பாட்டியின் பாடல்போல் மிகவும் இனிமையாக இருந்தது!    கதை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in