Published : 31 Oct 2018 10:33 AM
Last Updated : 31 Oct 2018 10:33 AM

கதை: தவளை இளவரசி!

வீரமார்த்தாண்டபுரத்தை ஆண்டு வந்த உத்தமசேனனுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்தான். அவரது தம்பி மகன் உபேந்திரன். உத்தமசேனனுக்கு வயதாகிவிட்டதால், மகேந்திரனிடம் நாட்டை ஒப்படைக்க விரும்பினார்.

இதை அறிந்த உபேந்திரனின் அம்மா கனகவல்லிக்குப் பொறாமையாக இருந்தது. தன் மகனே நாட்டை ஆள வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே ஒரு திட்டம் தீட்டினார்.

தலை வலிக்கிறது என்று அலற ஆரம்பித்தார். அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்தும் தலைவலி குணமாகவில்லை. நோய் இருந்தால்தானே குணமாவதற்கு?

ஒருநாள் கனகவல்லியால் ஏற்பாடு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். தான் நோயைத் தீர்ப்பதாக கூறினார். அரசரும் மகிழ்ந்து நோயைத் தீர்த்தால் என்ன வேண்டுமானாலும் தருவதாகக் கூறினார்.

“என்ன வேண்டுமானாலும் தருவீர்களா? வாக்குத் தவற மாட்டீர்களே?” என்று கேட்டார் அந்த வைத்தியர். மன்னர் உறுதியளித்தார்.

வைத்தியர் ஏதோ மூலிகையைக் கொடுத்தார். சிறிது நேரத்தில் கனகவல்லியின் நோய் குணமானது.

வைத்தியர் மன்னரிடம், “நோயைக் குணமாக்கிவிட்டேன்! நீங்கள் சொன்ன வாக்கை நிறைவேற்றுங்கள்!” என்றார்.

“வைத்தியரே, என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். பத்து ஊர் வேண்டுமா? பாதி நாடு வேண்டுமா? இல்லை கோடிப் பொன் வேண்டுமா?” என்றார் மன்னர்.

“வைத்தியனுக்கு எதற்கு இதெல்லாம்?”

“என்ன வேண்டும் சொல்லுங்கள்?”

“எனக்கு வயதாகிறது. ஒரு உதவியாள் தேவைப்படுகிறது. அதற்கு உங்கள் மூத்த மகனை அனுப்ப வேண்டும்.”

அதிர்ந்து போனார் மன்னர். “வைத்தியரே, வருங்கால மன்னன் அவன். யோசித்துதான் கேட்கிறீர்களா?”

“மன்னா, நன்றாக யோசித்துதான் கேட்கிறேன். வாக்குத் தவற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.”

“யாரையாவது உதவிக்கு அனுப்பி வைக்கிறேனே?”

“மன்னா, வேறு யாரையும் எனக்கு உதவிக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் மகன் மகேந்திரனை அனுப்பி வைப்பதானால் அனுப்புங்கள். இல்லை என்றால் கிளம்புகிறேன். வாக்குத் தவறிய மன்னர் என்று உங்களைப் பேசுவார்கள்” என்று இறுகிய முகத்துடன் கூறினார் வைத்தியர்.

அப்போது மகேந்திரன் அரசவைக்கு வந்தான். “அப்பா, நீங்கள் வாக்குத் தவற வேண்டாம். நான் வைத்தியருடன் செல்கிறேன்” என்றான்.

“மகேந்திரா, வருங்கால மன்னன் நீ!”

“கலங்க வேண்டாம். உபேந்திரனுக்குப் பட்டம் கட்டுங்கள். நான் வைத்தியருடன் செல்கிறேன்.”

“தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்ற துடிக்கும் உன்னை வாழ்த்துகிறேன்” என்றார் வைத்தியர்.

நாடே கண் கலங்க தாய், தந்தையிடம் விடைபெற்று வைத்தியருடன் கிளம்பினான் மகேந்திரன். கனகவல்லி தன் திட்டம் வெற்றி பெற்றதில் மகிழ்ந்தார். உபேந்திரன் இளவரசன் ஆனான்.

நாட்கள் ஓடின. வைத்தியருடன் சென்ற மகேந்திரன்

வைத்திய சாஸ்திரங்களை அறிந்துகொண்டான். வைத்தியருக்குத் தன்னால் இயன்ற பணிவிடைகளைச் செய்து வந்தான். ஒருநாள் வைத்தியர் மகேந்திரனைக் காட்டுக்குச் சென்று மூலிகைகளைப் பறித்துவருமாறுக் கூறினார்.

மகேந்திரனும் காட்டில் வைத்தியர் கூறிய அரிய மூலிகைகளைத் தேட ஆரம்பித்தான். அப்போது ஏதோ சத்தம் வந்தது.

“காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…” என்ற குரல் ஒரு மரத்தின் பின்னாலிருந்து கேட்டது. ஆனால் அங்கு யாரும் இல்லை. மீண்டும் அந்தக் குரல். உற்றுப் பார்த்தபோது, ஒரு தவளைதான் கத்திக்கொண்டிருந்தது.

“என்ன இது? இந்தக் காட்டில் தவளை கூட மனிதர் மாதிரி பேசுகிறதே! உனக்கு என்ன ஆபத்து?” என்றபோதுதான் கவனித்தான், அருகில் மிகப் பெரிய பாம்பு ஒன்று தவளையை முழுங்கக் காத்திருந்தது.

மகேந்திரன் பாம்பை விரட்டினான். கொஞ்சமும் பயப்படாமல் கையில் இருந்த கத்தியை வீசினான். மறுகணம் பாம்பு அப்படியே சுருண்டு விழுந்தது. உடனே அதிலிருந்து கந்தர்வன் ஒருவன் வெளிப்பட்டான். அதேநேரம் தவளை தன் உருமாறி அழகான பெண்ணாக உருவெடுத்தது.

மகேந்திரன் வியப்புடன் நின்றான். உருமாறிய அந்தப் பெண், “இளவரசே, நீங்கள் காண்பது நிஜம்தான். நான் அவந்தி நாட்டு இளவரசி. ஒருமுறை கானகம் சென்றபோது, முனிவரின் மீது மோதி அவரது தூக்கத்தைக் கலைத்துவிட்டேன். அவர் என்னைத் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார். நான் அவர் காலில் விழுந்து மன்றாடி சாப விமோசனம் அளிக்கும்படிக் கேட்டேன். ஒரு இளவரசனால் உன் சாபம் நீங்கும் என்றார். நீங்கள் என்னைச் சுய உருவம் அடைய வைத்துவிட்டீர்கள், நன்றி” என்றாள்.

”நானும் தேவேந்திரனால் சபிக்கப்பட்டுப் பாம்பாக உருமாறி இங்கு சுற்றிவந்தேன். இன்று உங்களால் விமோசனம் கிடைத்தது. உங்கள் நாட்டை எதிரிகள் சூழ்ந்துகொண்டார்கள். உங்கள் தம்பியால் எதிரிகளை விரட்ட முடியவில்லை. உடனே சென்று நாட்டைக் காப்பாற்றுங்கள். இதோ என்னுடைய மந்திர வாளைப் பரிசாகத் தருகிறேன்” என்று வாளைக் கொடுத்தான் கந்தர்வன்.

இளவரசியை அழைத்துக்கொண்டு வைத்தியரிடம் வந்து நடந்ததைக் கூறிய மகேந்திரன், நாட்டைக் காப்பாற்ற அனுமதி வேண்டும் என்று கேட்டான்.

வைத்தியர், “மகேந்திரா, உன் சித்தி தன் மகன் நாடாள வேண்டும் என்று என்னை இவ்வாறு கேட்க வைத்தார். நானும் உங்கள் நாட்டின் ஒரு பிரஜை. நாடே முக்கியம். விரைவாகச் சென்று நாட்டை மீட்போம்” என்றார்.

எதிரிகளை வெற்றிகொண்ட மகேந்திரன், அவந்தி நாட்டு இளவரசியை மணந்துகொண்டு சிறப்பாக நாட்டை ஆண்டான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x