காந்தி 150
1869-ம் ஆண்டு பிறந்த காந்திக்கு, உண்மை பேசும் அரிச்சந்திரன் கதையும் பெற்றோரை மதிக்கும் சிரவணன் கதையும் மிகவும் பிடிக்கும்.
9 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சுமாரான மாணவராகவும் கூச்ச சுபாவம் கொண்டவராகவும் இருந்தார். விளையாட்டிலும் ஆர்வம் இருந்ததில்லை.
1888-ம் ஆண்டு, 18 வயதில் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார். பட்டம் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பினார். நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக அவரால் வாதிட முடியவில்லை.
23 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கே ஒருமுறை ரயிலில் பயணம் செய்தபோது, ஆங்கிலேயர் அல்லாத காரணத்தால் வெளியே தள்ளிவிடப்பட்டார். இதன் மூலம் ஆப்பிரிக்கர்களும் இந்தியர்களும் அனுபவித்து வந்த இன பாகுபாட்டைப் புரிந்துகொண்டார்.
தென் ஆப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் வாழ்ந்தார். அங்குள்ள அரசியல் சூழல் அவரை ஒரு போராட்டக்காரராக மாற்றியது. தனக்கென அரசியல் கருத்துகளையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் உருவாக்கிக் கொண்டார். இவரது போராட்டங்களில் மனைவி கஸ்தூர்பாவும் கலந்துகொண்டார்.
1906-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் முதல் முறையாகச் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார். உண்ணாவிரதத்தை ஆயுதமாக மாற்றினார்.
காந்தியின் அரசியல் குரு கோபால கிருஷ்ண கோகலே. 1912-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் காந்தியைச் சந்தித்தபோது, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார்.
தமது எழுத்துகளில் அன்பையும் அமைதியையும் வலியுறுத்திய லியோ டால்ஸ்டாய், காந்திக்குப் பிடித்தமான எழுத்தாளர். அகிம்சையை விரும்பிய இருவரும் கடிதத் தொடர்பு வைத்திருந்தனர்.
1915-ம் ஆண்டு இந்தியா திரும்பிய காந்தி, சுதந்திரப் போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு இந்தியா முழுக்கச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவையும் இந்தியர்களையும் புரிந்துகொண்டால்தான் போராட முடியும் என்றார். அதற்குப் பிறகே போராட்டங்களை ஒன்றிணைத்தார்.
1920-ம் ஆண்டு அந்நியப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். அப்போது தானே கைராட்டை மூலம் தன் துணியை நெய்துகொண்டார்.
1921-ம் ஆண்டு மதுரை வந்தபோது, மேலாடை இன்றி மக்கள் இருந்ததைக் கண்ட காந்தி, தன்னுடைய மேலாடையைத் துறந்தார்.
1930-ம் ஆண்டு உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேய அரசை எதிர்த்து, 390 கி.மீ. தூரம் தண்டி யாத்திரையை மேற்கொண்டார். இறுதியில் வரி ரத்து செய்யப்பட்டது.
தன்னுடைய 52 ஆண்டு கால வாழ்க்கையைச் சுயசரிதையாக எழுதினார். 1940-ம் ஆண்டு ‘The Story of my Experiments with Truth’ வெளிவந்தது. ‘சத்திய சோதனை’ என்ற தலைப்பில் தமிழிலும் வந்திருக்கிறது. தன்னுடைய தவறுகளை நேர்மையாகவும் துணிச்சலாகவும் இதில் பதிவு செய்திருக்கிறார் காந்தி. கடிதம், கட்டுரை, உரை என்று இவருடைய எழுத்துகள் பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் வெளிவந்துள்ளன!
1942-ம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை ஆரம்பித்தார். காந்தியும் கஸ்தூர்பாவும் புனேயில் உள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். 18 மாதங்களுக்குப் பிறகு கஸ்தூர்பா அங்கேயே மறைந்தார்.
காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தை வழங்கியவர் ரவீந்திரநாத் தாகூர்.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட காந்தி, சுதந்திர விழாவில் கலந்துகொள்ளவில்லை. மதச் சண்டைகளைத் தீர்ப்பதற்காகப் பயணம் செய்துகொண்டிருந்தார்.
1948-ம் ஆண்டு ஜனவரி 30 அன்று, 78-வது வயதில் மதவாதி நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுதந்திரப் போராட்டம் தவிர, மத நல்லிணக்கத்துக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் மதுவிலக்கு வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி, ஏராளமான நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார்.
உண்மை, நேர்மை, எளிமையின் அடையாளம் காந்தி. நீதிமன்றத்தில் வழக்காட பயந்தவர், பின்னர் ஆங்கிலேயர்களையே அச்சமடைய வைத்தார். சாதாரண மனிதராக இருந்தவர், தம் போராட்டங்களாலும் கொள்கைகளாலும் மகாத்மாவாக மாறினார்.
தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டாலும் ரூபாய்த் தாள்களில் இடம்பெற்றிருந்தாலும் இறுதிவரை எந்த அரசுப் பதவியையும் வகிக்காதவர். இருந்தும் உலகம் முழுக்கப் பிரபலமானவர்.
நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங், பராக் ஒபாமா என்று பலரும் அவருடைய அகிம்சைக் கொள்கையால் உந்தப்பட்டவர்கள்.
‘நான் இங்கிலாந்து மக்களை வெறுக்கவில்லை. இந்தியாவை அடிமைப்படுத்திய இங்கிலாந்து அரசைத்தான் எதிர்க்கிறேன்’ என்றார். அவர் எதிர்த்த அதே இங்கிலாந்து பின்னர் காந்திக்குத் தபால் தலை வெளியிட்டு மரியாதை செலுத்தியது. இந்தியா தவிர்த்து, இதுவரை 100 நாடுகளிலிருந்து 300 தபால்தலைகள் காந்திக்காக வெளியிடப்பட்டிருக்கின்றன.
வன்முறைகள் அற்ற, அமைதியான உலகம் அமைய வேண்டும் என்று விரும்பும் உலக மக்களின் நாயகனாக இன்றும் என்றும் இருப்பார் காந்தி.
-சுஜாதா
