

ரகசியக் கோழி 001
சின்னமாரி என்ற சிறுவனுடைய வீட்டில் நிறைய கோழிகள் வளர்கின்றன. அவற்றில் அனைத்துக் கோழிகளும் காலையில் முட்டையிட்டுவிட்டு வெளியே இரை தேடிப் போனால், மாலையில் அடையும் நேரத்தில் சரியாக வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுகின்றன. இவற்றில் செவலைக்கோழி (சிவப்பு நிறமும் பழுப்பு நிறமும் கலந்தது) மட்டும் முட்டையும் இடுவதில்லை.
பகலில் மற்ற கோழிகள் இரை தேடும் இடங்களில் இருந்தும் காணாமல் போகிறது. இப்படி முட்டையும் இடாமல் இரையும் தேடாமல் அந்தக் கோழி எங்கேதான் போகிறது? அதைத் தேடிப் போய் உளவுபார்க்கும் சின்னமாரிக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது. அந்த 'ரகசியக் கோழி 001' பற்றிய கதையைப் போலவே, நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களைப் பற்றிய சிறார் கதைகளைச் சுவைபட எழுதியிருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர்.
வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991
காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் 1, 2
உங்களில் பலரும் ஆசை ஆசையாக வீட்டிலேயே செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்கள் தானே? காட்டில் வாழ்ந்துவந்த விலங்குகளை, மனிதர்கள் தங்கள் வீட்டுக்கு எப்படி அழைத்து வந்தார்கள்?; அவற்றைப் பழக்கப்படுத்தி எப்போது அவற்றுடன் வாழ ஆரம்பித்தார்கள் என்பதை அறிந்துகொள்வது எப்போதுமே சுவாரசியமானதுதான். பூனை, நாய், ஆடு, மாடு, பன்றி, கழுதை, எருமை, ஒட்டகம் ஆகியவை காட்டிலிருந்து எப்படி வீட்டுக்கு வந்தன?
பிரபல ஆராய்ச்சியாளர் விஞ்ஞானி வீராச்சாமி என்ற கதாபாத்திரம் வழியாக இவற்றை விவரித்துள்ளார் எழுத்தாளர் ஜி. சரண். தன்னுடைய பண்ணை வீட்டையே ஆய்வுக்கூடமாக மாற்றிக்கொண்டு ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும் வீராச்சாமி, அவற்றை விளக்கியுள்ள முறை குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924
பல கோடி வருடங்களுக்கு முன்னர்
டைனோசர், ஆர்கியாப் டெரிக்ஸ் எனும் பழம் பறவை, மமோத் கம்பளி யானைகள் போன்ற பிரம்மாண்டத்தொல் உயிரினங்களின் படங்கள், பொம்மைகளைப் பார்த்து வியக்காத குழந்தைகள் இருக்க முடியாது. இதுபோன்று வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த தொல் உயிரினங்களில் பலவற்றைப் பற்றி தொல்லியல் ஆராய்ச்சிகளால் புதிய புதிய விஷயங்கள் நமக்குத் தெரியவந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிச் சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதியுள்ளார் சோவியத் அறிஞர் இரினா யாகோவ்லெவா. படங்கள் நிறைந்த இந்த ரஷ்யப் புத்தகத்தை மூத்த மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
என்.சி.பி.எச். வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906
கதைப் புதையல் 3-வது தொகுதி
உலகப் புகழ்பெற்ற சிறார் எழுத்தாளர்களின் படைப்புகளை, 'கதைப் புதையல்' தொகுதிகளாகத் தமிழில் தந்துவருகிறார் எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ. அந்த வகையில் எட்டு புகழ்பெற்ற சிறார் புத்தகங்கள் அடங்கிய மூன்றாவது தொகுதி இது. 'நீங்கள் என்னோட அம்மாவா?', 'ஆர்தரின் சூரியன்' உள்ளிட்ட புகழ்பெற்ற புத்தகங்களும் இதில் அடக்கம்.
சின்னச் சின்னப் பத்திகளில் கதை, பெரிய பெரிய ஓவியங்கள் எனப் பெற்றோர் வாசித்துக் காட்டுவதற்கும் புதிதாக வாசிக்க ஆரம்பித்திருக்கும் குழந்தைகளுக்கும் பிடித்தமான வகையில் இந்தக் கதை வரிசை அமைந்துள்ளது. தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் கதைகள் கொடுக்கப்பட்டிருப்பதால், மொழிகளைப் பயிற்றுவிக்கவும் இந்தப் புத்தகங்கள் பெரிதும் உதவும்.
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924
ரோபோ
பரவலான மக்கள் கவனத்துக்கு அறிவியலை எடுத்துச் சென்றதில், அமெரிக்க எழுத்தாளர் ஐசக் அசிமோவ் செய்தது மிகப் பெரிய சாதனை. இன்றைக்கு கணினி, மைக்ரோசிப், தானியங்கிக் கருவிகள் என உலகமே அதிநவீனமயமாகிவிட்டது. எதிர்காலத்தில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் துறையும் ரோபாட்களும் உலகை ஆளும் என்று கணிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ரோபாட் துறையில் பெரும் ஆராய்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பே ரோபாட் உலகத்தைக் குறித்து தீர்மானகரமான கருத்துகளை முன்வைத்தவர் அசிமோவ். ரோபோ புத்தகம் மட்டுமல்லாமல் மரபணு, விண்வெளி, ஒளியின் வேகம் குறித்து அசிமோவின் சிறுநூல்களைத் தூறல் புக்ஸ் வெளியிட்டுள்ளது.
தூறல் புக்ஸ், தொடர்புக்கு: 044 24892018