

எல்லா நிறங்களையும் கொண்டுள்ள சூரிய ஒளி, வளிமண்டலத்தில் நுழையும் போது, வாயு மூலக் கூறுகளில் மோதிச் சிதறல் அடைகிறது. குறுகிய அலைநீளம் கொண்ட நீல ஒளி அனைத்துத் திசைகளிலும் அதிகமாகச் சிதறடிக்கப் படுவதால், வானம் நீலமாகக் காணப்படுகிறது.
இந்த வானம் எவ்வளவு உயரம் கொண்டது? எங்கே முடியும்? முடியும் இடத்திலிருந்து விண்வெளி தொடங்குமா? இந்தக் கேள்விகள், 1957 அக்டோபர் 4 அன்று சோவியத் ஒன்றியத்தால் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் I பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநின்ற உடன் முக்கியத்துவம் பெற்றன. உலகின் பல நாடுகளின் மேலே ஸ்புட்னிக் பறந்து சென்றது. எங்கே ஒரு நாட்டின் வான் எல்லை முடிவுக்கு வரும், விண்வெளி தொடங்கும் என்கிற கேள்வி சர்வதேச அரசியல் கேள்வியாக மாறியது.
பலரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். பூமியின் தரையி லிருந்து 3,26,400 கி.மீ. தொலைவில் உள்ள L 1 லாக்ராஞ்ச் புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சமமாகும். இதற்கு அப்பால் நிலவின் ஈர்ப்பு விசை ஓங்கும். எனவே, இந்த உயரத்துக்கு அப்பால் விண்வெளி எனக் கருத வேண்டும் என்றார்கள் சிலர்.
இதை ஏற்றுக்கொண்டால், தாழ் விண்வெளிப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவது சிக்கலாகும். அனுமதி இன்றி என் வான் எல்லைக்குள் பறக்கிறது என வேறு நாடு அந்தச் செயற்கைக்கோளைச் சுட்டு வீழ்த்திவிட முடியும். பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக, மேலே எறிந்த கல் கீழே விழுகிறது.
ஆனால், விடுபடு வேகத்தில் கல்லை வீசி எறிந்தால், அதே கல் ஈர்ப்பு விசையின் தளையிலிருந்து விடுபட்டு விண்வெளியில் செல்லும். பூமியின் தரைப் பரப்பிலிருந்து சுமார் 600 முதல் 10,000 கி.மீ. வரை விரிந்துள்ள எக்ஸோஸ்பியர் எனும் புற வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள், அவற்றின் இயக்கம் காரணமாகப் பூமியின் ஈர்ப்புத் தளையிலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் சென்றுவிடும்.
எனவே, புற வளிமண்டல எல்லை, அதாவது 10,000 கி.மீ. உயரம்வரை வானம் எனக் கொள்ள வேண்டும் என்றார்கள் சிலர். வேறு சிலரோ காற்று - வெற்றிடம் என வேறுபாடு ஏற்படும் உயரத்தை வானம் - விண்வெளி எனக் கொள்ள வேண்டும் என்றனர். சுமார் 85-90 கி.மீ. உயரத்தில் மீசோஸ்பியர் எனும் அடுக்கை எல்லையாகக் கொள்ள வேண்டும் என்றார்கள் சிலர். இந்த அடுக்கில் நுழையும்போதுதான் பெரும்பாலான விண்கற்கள் எரிந்து சாம்பலாகும்.
விண்கலம் பறந்து செல்வதி லிருந்துதானே இந்தக் கேள்வி சர்ச்சையானது. எனவே ஆகாய விமானம் - விண்கலம் பறந்து செல்ல முடிகிற பகுதியை இனம் கண்டு வானம் - விண்வெளி என எல்லை வகுக்கலாம் என்றார் தியடோர் வான் கார்மன். பெர்னோலி தத்துவத்தின் அடிப்படையில் இறக்கையின் மேலும் கீழும் காற்றழுத்த வேறுபாட்டை நிறுவி, காற்றைவிட அதிக எடை கொண்ட விமானம் பறக்கிறது. ஆனால், கெப்ளர் விதிகளின் அடிப்படையில் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன.
பூமியின் வளிமண்டலத்தில் சுமார் 99.99 சதவீதக் காற்று 100 கி.மீ.க்குக் கீழ் உள்ளது. எனவே, இந்த உயரத்துக்கு மேலே காற்று உராய்வு மிகக் குறைவு. ஆகவே கெப்ளரின் விதிகளின் அடிப்படையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தி, பூமியைச் சுற்றிவரச் செய்யலாம்.
அதேபோல இந்த உயரத்துக்கு மேலே காற்றின் அடர்த்தி மிகக் குறைவு. எனவே, இந்த உயரத்துக்கு மேலே பெர்னோலி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் விமானம் பறக்க முடியாது. அதனால் 100 கி.மீ. என்பதை வானத்துக்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லைக் கோடு எனக் கொள்ளலாம் என்றார் தியடோர் வான் கார்மன்.
இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை உள்பட, பலர் 100 கி.மீ. உயரம் வரை வானம், அதற்கு அப்பால் விண்வெளி எனும் கார்மன் எல்லைக் கோட்டை ஏற்றுக்கொள்கின்றனர். விண்வெளியைப் போருக்குப் பயன்படுத்தக் கூடாது எனச் சர்வதேசச் சட்டங்கள் கூறுகின்றன.
இதன் அடிப்படையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் 100 கி.மீ. உயரத்துக்கு மேலே பறந்து செல்லக் கூடாது என்பதை அமெரிக்காவைத் தவிர, அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன. 80 கி.மீ. உயரத்துக்கு மேலே பறந்தாலே விண்வெளி வீரர் என அங்கீகரித்தாலும் வானத்தின் முடிவு எது, விண்வெளியின் தொடக்கம் எது என வரையறை செய்ய அமெரிக்கா ஒப்புதல் தர மறுத்து வருகிறது.
(அறிவோம்)
- tvv123@gmail.com