

1768, ஆகஸ்ட் 26. இங்கிலாந்திலிருந்து எண்டெவர் (Endeavour என்கிற கப்பல் புறப்படத் தயாராக இருந்தது. கேப்டன் ஜேம்ஸ் குக், அந்தப் பயணத்துக்குத் தலைமை வகித்தார். பயணத்தின் முதன்மை நோக்கம், வானில் தெரியும் வெள்ளிக் கோளைப் பின்தொடர்ந்து, அதற்கும் பூமிக்குமான தொலைவைக் கண்டறிவது. பூமியின் தென் கோளத்தில் புதிய பகுதிகளைக் கண்டறிவது.
கப்பலில் இருந்த ஒரு பெண் ஆடுதான், ஜேம்ஸ் குக்கைக் காட்டிலும் கடல் பயணத்தில் அதிக அனுபவம் வாய்ந்தது. அது இதற்கு முன்பாகவே கடல் வழியாக உலகம் சுற்றி வந்து புகழ் பெற்றிருந்தது. பிரிட்டன் ராஜ்ஜியத்தில் கடற்படையில் இருந்தவர் சாமுவேல் வாலிஸ். அவரின் தலைமையில் 1764 ஜுனில் டால்பின் என்கிற கப்பல் உலகைக் கடல் வழியாக வலம் வரப் புறப்பட்டது. அதில் அந்தப் பெண் ஆடும் இருந்தது. தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தாஹிதி (Tahiti) தீவை அடைந்தார்கள்.
அங்கே கால் பதித்த முதல் ஐரோப்பியர் சாமுவேல் வாலிஸ். அந்தத் தீவில் முதன் முதலாகப் புல்லைத் தின்ற ஐரோப்பிய ஆடு, அந்தப் பெண் ஆடு. வாலிஸ் பயணம் முழுக்க அந்த ஆட்டின் பாலைப் பருகிக்கொண்டார். 1766 மே மாதத்தில் வாலிஸ் வெற்றிகரமாக உலகை வலம்வந்து இங்கிலாந்தை அடைந்தார். இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்தில் கடல் வழியே உலகை வலம்வந்தவர்கள் என்கிற பெருமையை வாலிஸ் குழுவினருடன், அந்த ஆடும் ஏற்றுக்கொண்டது.
வாலிஸை தனது முதல் பயணத்துக்கு முன்பாகச் சந்தித்தார் ஜேம்ஸ் குக். அந்த ஆடு குறித்து வாலிஸ் புகழ்ந்து தள்ளினார். ஜேம்ஸ் குக்கும் எண்டெவரில் அந்த ஆட்டை ஏற்றிக்கொண்டார். நீண்ட தூரக் கடல் பயணம் மேற்கொள்ளும்போது வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்கர்வி என்ற பாதிப்பு உண்டாகும். ஆட்டுப்பாலில் வைட்டமின் சி உண்டு. ஸ்கர்வி பாதிப்பிலிருந்து தப்பிக்க ஜேம்ஸ் குக், அடிக்கடி ஆட்டுப்பால் குடித்துக்கொண்டார்.
எண்டெவர், 1769, ஏப்ரலில் தாஹித்தி தீவை அடைந்தது. புதிய கப்பல் ஒன்று வந்திருக்கிறது என்றதும் தீவுவாசிகள், கப்பலை நோக்கி நீந்தினர். கப்பலுக்குள் புகுந்து கிடைப்பதை எடுத்துக்கொண்டு போவது அவர்களின் நோக்கம். முதலில் இளைஞர் ஒருவர் கப்பலினுள் ஏறிக் குதித்தார்.
அவருக்குச் சில அடிகள் முன்னால் அந்த ஆடு நின்றிருந்தது. வேற்று மனிதர் உள்ளே புகுந்துவிட்டார் என்று அடையாளம் கண்டுகொண்டு, அவரை முட்டித் தள்ளியது. அவர் சில அடிகள் தள்ளி விழுந்தார். இன்னும் சிலர் கப்பலில் ஏறிக் கொண்டிருந்தார்கள். ஆடு, முதலாமவரை நோக்கி மீண்டும் சீறிப்பாய்ந்து வர, அவர் பயத்தில் கடலில் குதித்தார்.
மற்றவர்களும் ஆபத்து என்று கடலில் குதித்தார்கள். அன்றைக்குத் திருட்டு நிகழாமல் தடுத்தது அந்த ஆடுதான்! ஜேம்ஸ் குக், ஆராய்ச்சி நோக்கத் திற்காகத் தாஹிதியில் சில காலம் தங்கினார். அப்போது செம்மறி ஆடு ஒன்றும், அவரின் பிரியத்துக்குரிய அந்தப் பெண் ஆடும் திருடு போயின. ‘ஆடுகள் உடனே என்னிடம் வந்தாக வேண்டும்’ என்று தீவின் பழங்குடித் தலைவருக்குச் செய்தி அனுப்பினார். ஆனால், பதில் வரவில்லை. கப்பலில் இருந்து குண்டுகள் வீச ஆரம்பித்ததும் ஆடுகள் திருப்பி அளிக்கப்பட்டன.
தாஹிதியிலிருந்து எண்டெவரின் பயணம் தொடர்ந்தது. நியூசிலாந்தை அடைந்த முதல் ஐரோப்பியர் என்கிற பெருமையை குக் ஏற்றுக்கொள்ள, முதல் ஐரோப்பிய ஆடு என்கிற பெருமையை அது ஏற்றுக்கொண்டது. அதேபோல, ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை எல்லையை முதன் முதலாகத் தொட்ட பெருமையையும் அந்த ஆடே ஏந்திக்கொண்டது. அந்தப் பயணத்தில் ஆட்டுக்குச் சில முறை உடல்நிலை சரியில்லாமல் போனது. விபத்தில் சிக்கியது. மரணத்தின் விளிம்புக்குச் சென்று திரும்பியது.
இப்படிப் பல அசாதாரணமான சூழ்நிலைகளைக் கடந்த ஆடும் எண்டெவர் கப்பலும் 1771, ஜுலை 12 அன்று இங்கிலாந்தை வெற்றிகரமாக அடைந்தன. இரண்டு முறை கடல்வழியே உலகை வலம்வந்த ஆடு என்று அதன் பெருமை ராஜ்ஜியம் எங்கும் பேசப்பட்டது.
ராயல் சொசைட்டியினர், அந்த ஆட்டுக்கு வெள்ளிப்பட்டை ஒன்றை அணிவித்து, கௌரவித்தனர். 1772ஆம் ஆண்டு அந்த ஆடு இறந்தது. வரலாற்றில் இடம்பெற்ற அந்த ஆட்டுக்கு வாலிஸோ குக்கோ பெயர் வைத்ததாகக் குறிப்புகள் இல்லை. பெயரில்லா அந்த ஆடு, மிகப் பொருத்தமான சொற்களால் இப்போதும் குறிப்பிடப்படுகிறது. The Well-Travelled Goat.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com