Last Updated : 28 Aug, 2018 06:31 PM

 

Published : 28 Aug 2018 06:31 PM
Last Updated : 28 Aug 2018 06:31 PM

உடல் எனும் இயந்திரம் 38: அறிவு தரும் அமைச்சகம்!

மனித மூளையைத் ‘தலைமைச் செயலகம்’ என்று சொன்னோம். ஒரு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிகளைக் கவனிப்பதற்குத் தனித்தனியாகப் பல்வேறு அமைச்சகங்கள் இருப்பதைப்போல், உடலில் நிகழும் பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கவனிக்கவும் கட்டுப்படுத்தவும் மூளையில் தனித்தனி அமைப்புகள் இருக்கின்றன.

அப்படி, மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ‘ஆறாம் அறிவு’ உள்ளிட்ட உடலின் மேம்பட்ட இயக்கங்களைக் கவனிப்பதற்கு ஓர் ‘அமைச்சகம்’ உள்ளது. அதுதான் ‘முன் மூளை’ (Forebrain) என்று அழைக்கப்படும் பெருமூளை (Cerebrum). இதுவே மூளையில் 85% இடத்தை அடைத்துக்கொண்டுள்ள மிகப் பெரிய பகுதி. தலாமஸ் (Thalamus), ஹைப்போதலாமஸ் (Hypothalamus) என இன்னும் இரண்டு பகுதிகளும் இதில் உண்டு.

ஒரு பெரிய பப்பாளிப் பழத்தை இரண்டாக வெட்டியதுபோல், பெருமூளையானது வலது பக்கம் ஒன்று, இடது பக்கம் ஒன்று என இரண்டு அரைக்கோளங்களாக உள்ளது. மூளையின் அடிப்புறத்தில், நான்கு அங்குல நீளத்தில் இருக்கும் ஒரு நரம்புப் பட்டை (Corpus callosum) இந்த இரண்டையும் இணைக்கிறது.

இதன் வழியாகவே வலது மூளையிலிருந்து கிளம்பும் நரம்புகள் உடலின் இடது பக்கத்துக்கும், இடது மூளையிலிருந்து கிளம்பும் நரம்புகள் உடலின் வலது பக்கத்துக்கும் தடம் மாறிச் செல்கின்றன, இதன் பலனால், உடலின் இடது பக்கத்தைப் பெருமூளையின் வலது அரைக்கோளமும், வலது பக்கத்தை இடது அரைக்கோளமும் கட்டுப்படுத்துகின்றன.

அதுபோல், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது அரைக்கோளமும், வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது அரைக்கோளமும் முன்னின்று பணி செய்கின்றன. இடது மூளை எந்த ஒரு செயலையும் பகுப்பாய்வு செய்து பார்க்கிறது. கற்பனை வளத்தைப் பயன்படுத்திப் படைப்பாக்கத்தை ஊக்கப்படுத்துகிறது, வலது மூளை.

பெருமூளையின் ஒவ்வோர் அரைக்கோளமும் முன் மடல் (Frontal lobe), பின் மடல் (Occipital lobe), பக்க மடல் (Parietal lobe), பொட்டு மடல் (Temporal lobe) என நான்கு சுளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெருமூளையைக் குறுக்காகப் பார்த்தால், மரத்துக்குப் பட்டை இருப்பதுபோல் ‘பெருமூளைப் புறணி’ (Cerebral cortex) எனும் வெளிப்பகுதி இருக்கிறது. கால் அங்குலத்துக்கும் குறைவாகவே இதன் கனம் இருக்கும்; பார்ப்பதற்கு மடிப்பு மடிப்பாக இருக்கும்.

இந்த மடிப்புக்கு ‘மூளை மடிப்புச் சுருள்’ (Gyrus) என்றும், மடிப்புகளுக்கு இடையில் இருக்கிற குழிக்கு ‘மூளைப் பள்ளம்’ (Sulcus) என்றும் பெயர். இந்த மடிப்புகளால் மூளைக்குள் செயல்படக்கூடிய பகுதியின் பரப்பு அதிகரிக்கிறது. இந்த மெல்லிய வெளிப்பகுதிக்குக் கீழே உள்ளது ‘பெருமூளை அகணி’ (Cerebral medulla).

பெருமூளையில் சாம்பல் பொருள் (Gray matter), வெண் பொருள் (White matter) என இரண்டு வகை நரம்புத் திசுக்கள் உள்ளன. சாம்பல் பொருள் புறணியிலும், வெண் பொருள் அகணியிலும் காணப்படுகின்றன. இவை தண்டுவடத்திலும் இருக்கின்றன. மேலும், நரம்பணுக்களில் நரம்புறை உள்ள வேரிழைகளில் (Axons), வெண் பொருளும், நரம்புறை இல்லாதவற்றில் சாம்பல் பொருளும் உள்ளன.

பெருமூளைக்குள் ஆயிரம் கோடி நரம்பணுக்களும் 16,000 கி.மீ. நரம்பு நூல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இங்குள்ள நரம்பணுக்களைச் சுற்றி ஐந்து வகை ‘கோந்து அணுக்கள்’ (Glial cells) உள்ளன. இவற்றின் எண்ணிக்கை நரம்பணுக்களைவிடப் பல மடங்கு அதிகம். இவை நரம்பணுக்களுக்குத் தேவையான உணவைத் தருவதோடு பாதுகாப்பையும் தருகின்றன.

மூளைக்குள் நரம்பணுக்கள் இல்லாத இடங்களும் உண்டு. அவை ‘மூளை உட்குழிகள்’ (Ventricles). ஒன்றுக்கொன்று தொடர்புடைய 4 குழிப்பகுதிகள் இவை. இவற்றில் முதன்மையான இரண்டு குழிகள் பெருமூளையிலும், மூன்றாவது தலாமஸிலும், நான்காவது பின் மூளையிலும் அமைந்துள்ளன.

இவற்றின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தக் குழிகளில் காணப்படும் ‘கோராய்டு பின்னல் அணுக்க’ளில் (Choroid plexus) தினமும் சராசரியாக 550 மி.லி. தண்டுவடத் திரவம் (CSF) சுரக்கிறது. இதில் 150 மி.லி. மட்டும் நம் நரம்பு மண்டலத்தில் எப்போதும் நிலையாக இருக்கிறது; தண்ணீரில் மிதக்கும் பந்துபோல மூளை இதில் மிதந்துகொண்டிருப்பதால், திடீர் அதிர்வுகள் மூளையைப் பாதிப்பதைத் தடுத்துப் பாதுகாப்பு தருகிறது.

ஓர் அமைச்சகத்தில் செயலர், உதவிச் செயலர், இயக்குநர், இணை இயக்குநர் எனப் பலரும் பணிகளைப் பிரித்துப் பார்ப்பதைப்போல, பெருமூளை எனும் அமைச்சகத்திலும் பார்வைக்கு, பேச்சுக்கு, மூச்சுக்கு, வாசனைக்கு, செவிஉணர்வுக்கு, நடையோட்டத்துக்கு என ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தனித்தனிப் பணிமையம் உள்ளது. அவை ஒவ்வொன்றும் தனக்குரிய பணிகளை மட்டும் செய்கின்றன.

idam 2jpg

பெருமூளையின் முன் மடலில் புத்திசாலித்தனத்துக்கான பணிமையம் உள்ளது. சிந்தனா சக்தி, பகுத்தறிதல், ஆராய்ச்சி உள்ளிட்ட ‘ஆறாம் அறிவு’ தரும் பணிமையம் இது. தனிமனித நடத்தையும் ஆளுமையும் இதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.

நாம் உணர்ந்து செய்யும் கை, கால் அசைவுகள் போன்ற தசை இயக்கங்களைக் கவனிக்க ‘பிராட்மேன் பகுதி’ (Brodmann area) உள்ளது. ஒரு செயலைச் செய்ய முடிவெடுத்தல், திட்டமிடுதல், அதில் கவனம் செலுத்துதல், பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியவையும் முன் மடலின் கட்டளைப்படியே நிகழ்கின்றன. பேச்சை உருவாக்குவதற்கு என்றே ’புரோக்கா பகுதி’ (Broca’s area) உள்ளது.

தொடுதல், வெப்பம், வலி ஆகிய உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்குப் பக்க மடல் உதவுகிறது. பார்க்கும் பொருள்களின் பிம்பங்களையும் வண்ணங்களையும் தெரிந்துகொள்வதற்குப் பின் மடல் தேவைப்படுகிறது. ஒலிகளைக் கேட்டு உணர்வதற்கும், மொழி மற்றும் வார்த்தைகளைப் புரிந்து கொள்வதற்கும் பொட்டு மடலில் உள்ள ‘வெர்னிக் பகுதி’ (Wernicke’s area) துணை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நம் நினைவாற்றலுக்கு ஆதாரமாக இருப்பதும் பொட்டு மடல்தான்.

பொதுவாக, நாம் ஒரு பிரச்சினையை அமைச்சரிடம் தெரிவிக்க வேண்டுமானால், முதலில் அவரது உதவியாளரிடம் அனுமதி பெற வேண்டும். நாம் யார், எதற்காக வந்திருக்கிறோம் என்பது போன்ற விவரங்களை உதவியாளர் தெரிந்துகொண்ட பின்னரே அமைச்சரைச் சந்திக்க அனுமதிப்பார். இந்த மாதிரியான ஓர் ஏற்பாடு நம் மூளையிலும் உள்ளது.

பார்வை, செவி உணர்வு, தொடுஉணர்வு போன்ற முக்கியத் தகவல்கள் நேரடியாக அவற்றின் முதன்மைப் பணிமையங்களுக்குச் (Primary areas) செல்லாது. மாறாக, அவற்றுக்குரிய இணைமையங்களுக்குச் (Associated areas) செல்லும். அவை அந்தத் தகவல்களைப் பிரித்து, ஆராய்ந்து, பழைய நினைவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, திருப்தி அடைந்தால் மட்டுமே முதன்மைப் பணிமையத்துக்கு அனுப்பி பதில் பெறும்.

இதன் பலனால், தேவையற்ற தகவல்களுக்குப் பெருமூளை பதில் கொடுப்பது தவிர்க்கப்படும். மூளையின் வேலைப்பளு குறையும்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x