

‘அறிவால் சொல்லாதீர்கள், மனதால் உணருங்கள்’ என்கிறார்கள். அறிவு என்பது மூளை என்று தெரியும். அப்படியானால் மனம் என்றால் என்ன, டிங்கு? - அ.கை. அஸீலா, 11-ம் வகுப்பு, அ.வே.ராமா.வே. அரசு மேல்நிலைப் பள்ளி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.
மனம் என்று இதயத்தைத்தான் காலம் காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதயத்தின் முக்கியமான பணி உடல் முழுவதும் ரத்தத்தை அனுப்ப வேண்டும், திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துகளையும் வழங்க வேண்டும். கார்பன் டை ஆக்சைடு போன்ற கழிவுப் பொருள்களை வெளியேற்ற வேண்டும்.
இதயத்தின் பணி மிக முக்கியமானதுதான், ஆனால் இதயத்தால் சிந்திக்க இயலாது. நம் உடலை இயக்குவது, சிந்திக்க வைப்பது, உணர வைப்பது எல்லாமே ‘மூளை’யின் பணி. அதனால்தான் இதயம் துடித்துக்கொண்டிருந்தாலும் மூளைச் சாவு அடைந்தவர்களைப் பிழைக்க வைக்க இயலாது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே மனதால் எதையும் உணர இயலாது, அறிவால் அதாவது, மூளையால் மட்டுமே உணர முடியும், அஸீலா.