

என் அப்பாவுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இன்சுலின் மருந்து போட்டுக் கொண்டிருக்கிறார். உணவுக் கட்டுப்பாடின் மூலம் இன்சுலின் போடுவதை நிறுத்த முடியுமா, டிங்கு? - சி. லாவண்யா, 9-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, கரூர்.
நீரிழிவு, தைராய்டு போன்றவை நோயல்ல, குறைபாடு. இந்தக் குறைபாட்டை மருந்துகள், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். நீரிழிவில் டைப் 1, டைப் 2 வகைகள் உள்ளன.
டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு, வாழ்க்கைமுறை மாற்றம், உணவுமுறை மாற்றம் மூலம் ஆரம்பத்தில் மருந்துகளின் தேவை இல்லாமலே ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், எல்லாருக்கும் இது பலனளிக்காது.
இப்போதைய நிலையில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் மருந்து எடுத்துக்கொள்வதே சிறந்தது. ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன, அதன் மூலம் எதிர்காலத்தில் மருந்து இல்லாமலே நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம், லாவண்யா.
முட்டைக்குள் இருக்கும் கரு ஏன் மஞ்சளாக இருக்கிறது, டிங்கு? - த. அக்ஷயா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
முட்டையில் உள்ள மஞ்சள் கருவின் நிறத்துக்குக் காரணம் கரோட்டினாய்டுகள் எனப்படும் நிறமிகள்தான். Xanthophylls எனும் இந்த நிறமிகள் பறவைகள் சாப்பிடும் உணவிலிருந்து பெறப்படுகின்றன. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறமுள்ள தாவரங்கள், தானியங்களில் இந்த நிறமிகள் அதிகமாக இருக்கின்றன. எனவே பறவை எந்த மாதிரி உணவு வகைகளை உண்ணுகிறதோ அதைப் பொறுத்து, கருவின் வண்ணம் ஆழ்ந்த மஞ்சளாகவோ வெளிர் மஞ்சளாகவோ இருக்கும், அக்ஷயா.