

சூரியனுக்கு மிக அருகில் புதன் கோள் இருந்தாலும் மிக வெப்பமான கோள் வெள்ளி என்கிறார்களே, ஏன் டிங்கு? - த. தன்யா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
சூரியக் குடும்பத்தின் இரண்டாவது கோள் வெள்ளி. இந்தக் கோளின் வளிமண்டலம் அடர்த்தியானது. இந்த வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகமாக இருக்கிறது. வெள்ளிக் கோளின் மேகங்கள் கந்தக அமிலத்தால் ஆனவை. எனவே வெள்ளிக் கோளில் இருந்து வெளியேறும் வெப்பத்தை ஈர்த்து வைத்துக்கொள்கின்றன.
ஆகவே வெள்ளிக் கோள் புதன் கோளைவிட வெப்பமாக இருக்கிறது. சரி, புதன் கோள் ஏன் வெப்பம் குறைவாக இருக்கிறது? சூரியனுக்கு அருகில் புதன் கோள் இருந்தாலும் அது மிகச் சிறியது. அதில் இருக்கும் வாயுக்களை வளிமண்டலமாக மாற்றி வைத்துக்கொள்ளும் ஈர்ப்பு சக்தி அதனிடம் இல்லை. அதனால் வெப்பம் விண்வெளிக்குச் சென்றுவிடுகிறது. எனவே புதன் கோளைவிட வெள்ளிக் கோள் வெப்பம் அதிகமாக இருக்கிறது, தன்யா.
நாம் கரண்டிகளைக் கொண்டு பயன்படுத்தும்போது கெட்டுப் போகாத உணவு, கையால் எடுக்கும்போது விரைவில் கெட்டு விடுகிறதே, ஏன் டிங்கு? - எம். சித்ரா தேவி, 6-ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்குடி.
நம் கைகளில் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நாம் ஒவ்வொரு முறையும் நன்றாக சோப்பு போட்டுக் கைகளைச் சுத்தம் செய்துகொண்டி ருப்பதில்லை. அதனால் உணவுப் பொருட்களைத் தொடும்போது பாக்டீரியாக்கள் கைகளில் இருந்து உணவுக்குச் சென்றுவிடுகின்றன. உணவை வேகமாகக் கெட்டுப் போக வைக்கின்றன, சித்ரா தேவி.