பாபா வாங்கா சொல்வது சரியா? | டிங்குவிடம் கேளுங்கள்
தொல்லியல் அகழாய்வில் கிடைக்கும் சில பொருட்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறதே, அந்தக் காலம் எவ்வாறு கண்டறியப்படுகிறது, டிங்கு? - ஜெப் ஈவான், 9-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
உயினங்களில் இருக்கும் கார்பன் - 14 என்கிற ஐசோடோப்பு, உயிரிழந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைய ஆரம்பிக்கும். எலும்புகளில் இருக்கும் இந்த கார்பன் -14 பாதி அளவு சிதைவடைய 5,730 ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும். அதனால் தொல்லியல் அகழாய்வில் கிடைக்கும் பொருள்களை கார்பன் காலக்கணிப்பான் (கார்பன் டேட்டிங்) முறையில் காலம் கண்டறியப்படுகிறது.
இந்த முறை மூலம் மிகத் துல்லியமாக ஆண்டைச் சொல்ல முடியாது. ஆனால், தோராயமாகச் சொல்லிவிட முடியும். கற்களை Thermoluminescence, மண்பாண்டங்களை Rehydroxylation, மரங்களை Dendrochronology மூலம் காலக்கணிப்பைச் செய்கிறார்கள். சமீபத்தில் Accelerator Mass Spectrometry மூலம் மேம்பட்ட காலக்கணிப்பைச் செய்கிறார்கள், ஜெப் ஈவான்.
பாபா வாங்கா என்பவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் உலகில் இதுவரை நிகழ்ந்த பேரழிவுகள் அவரது கணிப்பின்படியே நிகழ்ந்துள்ளன எனவும் 2025 ஜூலை 5ஆம் தேதி ஜப்பானில் ஒரு பேரழிவு நிகழும் என்று கணித்துள்ளதாகவும் சொல்கிறார்களே, இது உண்மையா டிங்கு? - ர. தக்ஷ்ணா, 7-ம் வகுப்பு, நாச்சியார் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.
ஒரு மனிதரால் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதற்கு அறிவியல் அடிப்படையிலான சான்று எதுவும் இல்லை. பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் போன்றவர்கள் சொல்லிச் சென்றதில் சில விஷயங்கள் யதார்த்தமாக நடந்திருக்கலாம். பல விஷயங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், நாம் அவர்கள் சொல்லி நடக்காத விஷயங்கள் குறித்துக் கண்டுகொள்வதில்லை.
அவர்கள் சொன்னதில் ஏதோ ஒன்றிரண்டு விஷயங்களைப் பொருத்திப் பார்த்து, வியாந்துகொண்டிருக்கிறோம். குறிப்பாக ஊடகங்கள் இந்தச் செய்திகளைப் பரபரப்பாக்கி, மக்களை நம்பவைத்துக்கொண்டிருக்கின்றன. ஜூலை 5 அன்று எந்த நிகழ்வும் ஜப்பானில் நடைபெறவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதைக் கண்டுகொள்ளாமல், அடுத்து அவர் என்ன சொன்னார் என்று சென்றுவிடுவார்கள். இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தவிர்ப்பதே நல்லது, தக்ஷ்ணா.
சில தாவரங்களில் முட்கள் இருப்பது ஏன், டிங்கு? - ரா. உமாமகேஸ்வரி, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.
ரோஜா போன்ற தாவரங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பரிணாமத்தில் முட்களைப் பெற்றுள்ளன. இந்த முட்கள் எளிதில் பிற உயிரினங்கள் தாவரங்களைச் சாப்பிட விடாமல் காப்பாற்றுகின்றன. பாலைவனத் தாவரங்களில் உள்ள முட்கள், இலைகளில் உள்ள நீர்ச்சத்து எளிதில் ஆவியாவதைத் தடுக்கும் விதத்தில் அமைந்துள்ளன. அதேநேரம் விலங்குகளோ பறவைகளோ எளிதில் நீர்ச்சத்து நிறைந்த இலைகளையும் தண்டுகளையும் சாப்பிட விடாமலும் தடுக்கின்றன, உமாமகேஸ்வரி.
