Published : 04 Jul 2025 11:46 AM
Last Updated : 04 Jul 2025 11:46 AM
மண்புழுக்கள் மண்ணின் சுகாதாரத்திற்கும் விவசாயத்திற்கும் உதவுகின்றன. நீண்ட காலமாக அவை தனித்து வாழும் எளிய உயிரினங்கள் என்று கருதப்பட்டது. ஆனால், ஆய்வுகள் மூலம் அவை ஒன்றை மற்றொன்று தொடர்பு கொள்ளும் திறன் வாய்ந்த உயிரினங்கள் என்பது தெரியவந்துள்ளது. அவை தொடர்பு கொள்ள, தொடுதல் அடிப்படையிலான சமிக்ஞையைப் பயன்படுத்துகின்றன.
மண்புழுக்கள் மென்மையான உடலைக் கொண்ட முதுகெலும்பற்ற விலங்குகள். இவை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தசை மண்டலங்கள் மற்றும் நரம்பு கணுக்கள் இருக்கும். மூக்கு இல்லாத இந்த ஜீவராசிகள் தோல் வழியாக சுவாசிக்கின்றன.
தலைப் பகுதியில் இரண்டு நரம்பு கணுக்கள் இருக்கும். இருபால் இனப்பெருக்க முறையைக் கொண்டுள்ளன. மண்புழுக்களின் உடலில் சிறிய முட்கள் உண்டு. இவை நகர்வதற்கும் மண்ணில் பிடிப்பு ஏற்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன. அவற்றின் தோல் அதிக உணர்வுத் திறன் கொண்டது. இதன் மூலம் ஈரப்பதம், அதிர்வு, ஒளி போன்றவற்றைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளது.
கரிமப் பொருட்களை உடைத்து மண்ணின் ஊட்டச்சத்தை மேம்படுத்துகின்றன. மண்புழுக்கள் ஒரு நாளில் தங்கள் உடல் எடையில் மூன்றில் ஒரு பங்கு வரை உணவு உண்ணும். அதுமட்டுமன்றி, மண்ணில் சுரங்கங்களை உருவாக்கிக் காற்றோட்டத்தை மேம்படுத்துகின்றன.
லீஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் லாரா ஜிர்பேஸ் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில், மண்புழுக்கள் தொடுதல் மூலம் தொடர்பு கொள்வது கண்டறியப்பட்டது. அவர்கள் நாற்பது மண்புழுக்களை ஓர் அறையில் வைத்தனர். ஒரே மாதிரியான இரண்டு பாதைகளை அமைத்தனர். இருபத்து நான்கு மணி நேரமும் அவை கண்காணிக்கப்பட்டன. மண்புழுக்கள் ஒன்றாக இணைந்து ஒரே திசையில் நகர்வதைக் கண்டறிந்தனர். முப்பது முறைக்கும் மேல் இந்தச் சோதனையைச் செய்தாலும் ஒரே மாதிரியாக ஒன்றோடு மற்றொன்று தொட்டுக் கொண்டு நகர்வது தெரிந்தது.
இந்தக் கண்டறிதலின் மூலம் மண்புழுக்களில் சமூக நடத்தை இருப்பதை முதல்முறையாக அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்தனர். அவை, குழுவாக ஒன்றாக நகர்ந்து உணவு மூலங்களைக் கண்டறிகின்றன. ஆபத்தான சூழ்நிலைகளில் ஒவ்வொரு மண்புழுவும் தனித்தனியாகச் சுருண்டு, பாதுகாப்பு திரவத்தைச் சுரந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. தொடர்பின் மூலம் ஆன்டிபாக்டீரியல் திரவங்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
சார்லஸ் டார்வின் தனது ஆய்வுகளில் மண்புழுக்கள் ஒலிகளுக்குப் பதிலளிக்காவிட்டாலும், அதிர்வுகளை உணரும் திறனைக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.
மண்புழுக்கள் மிகவும் சக்திவாய்ந்த வாசனை உணர்வைக் கொண்டுள்ளன. அவை தங்களுக்குப் பிடித்த உணவின் நறுமணத்தைக் கண்டறிகின்றன. மண்புழுக்கள் காரட், முட்டைக்கோஸ் போன்றவற்றை விரும்புகின்றன என்கிறார் டார்வின்.
மண்புழுக்கள் சளி சுரப்பு மூலமாகவும் தொடர்பு கொள்கின்றன. இந்தச் சளியில் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உள்ளன. புழுக்கள் ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்ளும்போது, இந்தப் பாதுகாப்பு திரவங்கள் பரிமாறப்பட்டு, கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
மண்புழுக்களின் முழு உடலும் தொடு உணர்வு செல்களால் நிறைந்துள்ளது. இவை மண்ணின் அமைப்பு, ஈரப்பதம், வெப்பநிலை, அழுத்தம் போன்றவற்றைக் கண்டறிகின்றன.
மண்புழுக்களுக்குக் கண்கள் கிடையாது. ஆனால், ’ஹெஸ்ஸின் ஒளி செல்கள்’ எனப்படும் சிறப்பு ஒளி உணர்வு செல்களைக் கொண்டுள்ளன. இவை புழுவின் முதுகுப்புறத்திலும் பக்கவாட்டிலும் அதிகம் காணப்படுகின்றன. இந்த செல்கள் மூலம் அவற்றால் ஒளியின் திசையையும் தீவிரத்தையும் கண்டறிய முடிகிறது.
மண்புழுக்களின் வாய்ப்பகுதியில் ஏராளமான வேதியியல் உணர்வு செல்கள் உள்ளன. இதன் மூலம் உணவு, ஆபத்து போன்றவற்றைக் கண்டறிகின்றன.
வறட்சி, அதிக வெப்பம், தொற்று, ஆபத்து போன்ற சூழல்களில் மண்புழுக்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்கின்றன. அவை ஆழமாக மண்ணுக்குள் சென்று, குழுவாக ஒன்றாகக் கூடிப் பாதுகாப்பாக இருக்கின்றன.
இனப்பெருக்கக் காலத்தில் மண்புழுக்கள் மேற்பரப்பில் வந்து பாலியல் பேரோமோன்களை வெளியிடுகின்றன. இது மற்ற புழுக்களை ஈர்க்கும் சமிக்ஞையாகச் செயல்படுகிறது.
மண்புழுக்கள் கூட்டமாக நடமாடும்போது, அவை ஊட்டச்சத்துகளை மண்ணின் பல்வேறு அடுக்குகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இது மண்ணின் ஒட்டுமொத்த வளத்தை அதிகரிக்கிறது.
கட்டுரையாளர், எழுத்தாளர். - தொடர்புக்கு: writernaseema@gmail.com
முந்தைய அத்தியாயம் > சிங்கங்கள் ஏன் கர்ஜிக்கின்றன? | உயிரினங்களின் மொழி - 25
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT