தானாக முளைக்கும் பார்த்தீனியம் செடிகள் | டிங்குவிடம் கேளுங்கள்

தானாக முளைக்கும் பார்த்தீனியம் செடிகள் | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

பார்த்தீனியம் செடிகள் எல்லா இடங்களிலும் தானாகச் செழித்து வளர்கின்றன. இதுபோல நெல், கேழ்வரகு, கோதுமைப் பயிர்கள் ஏன் தானாக வளர்வதில்லை, டிங்கு? - ஜெப் ஈவான், 8-ம் வகுப்பு, புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.

பார்த்தீனியம் செடிகள் விரைவில் பரவக்கூடிய வகையைச் சேர்ந்தவை. பராமரிக்க அவசியமில்லாத களைச் செடிகள். ஒரு செடியிலிருந்தே ஆயிரக்கணக்கான விதைகள் உருவாகின்றன. கோடை, குளிர் போன்ற எல்லாக் காலங்களையும் தாக்குப்பிடித்து வாழக்கூடியவை.

தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லாதவை. இவற்றின் விதைகள் நீண்ட ஆண்டுகள் கழித்தும் முளைக்கக்கூடியவை. ஆனால், நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களைக் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட வெப்பநிலையில், தண்ணீர்ப் பாய்ச்சி, உரமிட்டு வளர்க்க வேண்டும்.

இப்படிப் பராமரித்தால்தான், நமக்குத் தேவையான அளவுக்கு நெல்லோ கோதுமையோ கேழ்வரகோ கிடைக்கும். விளையும் தானியங்கள் அனைத்தையும் நாம் அறுவடை செய்துவிடுவதால், தானாக முளைக்கவும் வாய்ப்பில்லை. அறுவடை செய்த தானியங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதியை எடுத்து மீண்டும் விதைத்து, பயிர்களை வளர்க்கிறோம். ஆனால், அந்நியச் செடியான பார்த்தீனியம் தானாக வளர்ந்தாலும் அவற்றால் நமக்குப் பலன் இல்லை; தீமைதான் அதிகம். அவை வளராமல் இருப்பதுதான் நல்லது, ஜெப் ஈவான்.

ஊருணியில் விழும் பொருள்கள் சில நாள்களில் பாசி பிடித்து விடுகின்றன. ஆனால், தண்ணீரிலேயே வாழும் மீன்களின் மீது ஏன் பாசி பிடிப்பதில்லை, டிங்கு? - ஆ. ஆதிஸ்குமார், 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.

பொருள்கள் உயிரற்றவை. ஒரே இடத்தில் விழுந்து கிடக்கும். தண்ணீரில் சூரிய வெளிச்சம் விழும்போது அவற்றின் மீது பாசி படர்கிறது. ஆனால், மீன்கள் உயிருள்ளவை. ஒரே இடத்தில் அவை இருப்பதில்லை. மீன்கள் தண்ணீரில் வாழ்வதற்கு ஏற்ப தகவமைப்பைப் பெற்றுள்ளன, ஆதிஸ்குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in