Published : 04 Jun 2025 07:11 AM
Last Updated : 04 Jun 2025 07:11 AM

பறவைகள் வழி அறிவது எப்படி? | பறப்பதுவே 20

பறவைகள் நீண்ட தூரம் பயணிக்கும்போது, நிறைய ஆற்றல் செலவாகும். அதற்காகப் பறவைகள் பலவிதங்களில் தங்களைத் தயார் செய்துகொள்கின்றன. குளிர்காலம் நெருங்குகிறது, பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே கொழுப்பு நிறைந்த சிறு பூச்சிகளையும் கொட்டைகளையும் கண்டறிந்து, சாப்பிட ஆரம்பிக்கின்றன. கார்போஹைட்ரேட், புரத உணவு வகைகளைவிடக் கொழுப்பு உள்ள உணவு வகைகள் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளன. இவற்றை உண்டு எடையை அதிகரித்துக் கொள்கின்றன.

சில பறவைகள் தங்கள் எடையை இரண்டு மடங்கு வரை அதிகரித்துக் கொள்கின்றன. 10 ஆயிரம் கி.மீ. தூரம் வலசை செல்லும் பட்டைவால் மூக்கன் (Bar-tailed Godwits), பயணத்துக்கு முன்பாக கணிசமாகத் தன் உடல் எடையை அதிகரித்துக்கொள்கிறது. இப்படி உடலில் சேகரிக்கப்படும் ஆற்றலை உபயோகித்து, உணவு இல்லாமல் பறவைகளால் நீண்ட தூரம் பறக்க முடியும். நிற்காமல் பறப்பதால் எடை குறைந்துகொண்டே வந்து, சேர வேண்டிய இடத்தை அடையும் போது முதலில் இருந்த எடைக்கு மாறிவிடும். இது போன்ற பறவைகளுக்கு வலசைக்கு முன் 30 - 100 சதவீதம்வரை உடல் எடை அதிகரிக்கும்.

வேறு சில பறவைகள் இடையிடையே உணவு கிடைக்கும் இடங்களில் சிறிது ஓய்வெடுத்து, உணவை உட்கொண்டு பயணத்தை மேற்கொள்கின்றன. நீண்ட தொலைவு பறக்கும் ஆலா (Arctic Tern) இந்த முறையைப் பயன்படுத்துகிறது. இது பெரும்பாலும் கடல் பகுதிகளைத் தாண்டிச் செல்லும்போது, தண்ணீரின் மேற்பரப்பில் நீந்தும் சிறு மீன்கள், சிறிய கடல்புழுக்கள் ஆகியவற்றை உண்கிறது. சில நேரம் மீன்பிடிப் படகுகளுக்கு அருகில் பறந்து, மீனவர்கள் வலைகளிலிருந்து வெளிவரும் மீன்களை உணவாக எடுத்துக்கொள்கிறது. இதனால், மிக நீண்ட பயணத்திலும் அதிக அளவில் கொழுப்பு உடலில் சேர்க்கத் தேவை இல்லாமல், வழியிலேயே தேவையான ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.

பகலில் பறக்கும் பறவைகள், இரவில் பறக்கும் பறவைகள், இரவு-பகல் பறக்கும் பறவைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாகச் சிறிய பறவைகள் தரையில் இருந்து 800 - 1,500 அடி உயரம் வரை இரவில் பறக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. பட்டைத்தலை வாத்து போன்ற பெரிய பறவைகள் 15 – 25 ஆயிரம் அடி உயரம் வரை பகலில் பறக்கும். பகலில் பறக்கும் பறவைகள் இரவில் ஓய்வெடுக்கும். இரவில் பறக்கும் பறவைகள் பகலில் ஓய்வு எடுக்கும்.

செயற்கைக்கோளின் உதவியுடன் பறவை எவ்வளவு தூரம் நிற்காமல் பறக்கிறது என்று ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில், 2022ஆம் ஆண்டு பட்டை வால் மூக்கன் பறவை அமெரிக்காவின் அலாஸ்காவிலிருந்து நியூசிலாந்து வரை 13,560 கி.மீ. தொலைவை இரவு, பகல்

பறந்து 11 நாள்களில் வந்தடைந்ததைக் கண்டறிந்தார்கள். இந்தப் பறவை தனது வலசையின் போது எந்த இடத்திலும் இறங்காமலும், உணவு, தண்ணீர், ஓய்வு ஏதும் இல்லாமலும் பறந்தது! இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு கொழுப்புள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு, தனது உடல் எடையை அதிகரித்திருந்தது.

100 கிராம் எடை மட்டுமே இருக்கும் ஆலா ஒவ்வோர் ஆண்டும் ஒரே வருடத்தில் நீண்ட தொலைவுப் பயணத்தை மேற்கொள்கிற பறவையாக இருக்கிறது. இது ஆர்க்டிக் பகுதியில் இருந்து அண்டார்க்டிக் வரை பறந்து சென்று திரும்பும்போது 70 ஆயிரம் கி.மீ. வரை பயணிக்கிறது. குறைந்த ஆற்றல் செலவில் பறக்கக்கூடிய திறமையை இந்தப் பறவைகள் பெற்றுள்ளன.

பறவை தான் செல்ல வேண்டிய இடத்தைப் பல வழிகளில் கண்டறிகிறது. சில பறவைகள் கடற்கரை ஓரமாகவே பயணிக்கும் வழிமுறையைப் பயன்படுத்துகின்றன. அதேபோல் மலைப் பகுதிகளைக் கணக்கில் வைத்துப் பறக்கும் பறவைகளும் உள்ளன.
இரவில் பறக்கும் பறவைகள் நிலவின் வெளிச்சத்தைக் கொண்டு திசையை அறிந்து கொள்கின்றன.

இதனால், கடல் மீது பறக்கும்போது திசை மாறாமல் தொடர்ந்து பயணிக்க முடிகிறது. பகலில் பறக்கும் பறவைகள், சூரியனின் கோணங்களைக் கவனித்துத் தங்கள் பயணத்தைத் திட்டமிடுகின்றன. காற்று வீசும் திசையை வைத்து வழியைக் கண்டறிந்து செல்லும் பறவைகளும் உள்ளன. பறவைகளின் உடலில் இயற்கை யாகவே பூமியின் காந்தப் புலத்தை உணரும் திறன் உள்ளது, இது அவற்றுக்குத் திசை கண்டறிய உதவு கிறது.

பறவையின் கண்களில் உள்ள கிரிப்டோகுரோம் புரதமும், மூக்கு அல்லது மூளையில் உள்ள இரும்புத் துகள்களும் (magnetite) காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்கின்றன. இது ஒரு காந்த திசைகாட்டி போல் செயல்பட்டு, பறவைகளின் பயணத்தைத் துல்லியமாக்குகிறது என்று கருதப்படுகிறது. இருப்பினும், பறவைகளின் இந்தக் காந்தப்புலம் உணர்திறன் குறித்து இன்னும் முழுமையாக அறியப் படவில்லை.

(பறப்போம்)

- writersasibooks@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x