பறவைகள் வலசை செல்வது ஏன்? | பறப்பதுவே 19

பறவைகள் வலசை செல்வது ஏன்? | பறப்பதுவே 19
Updated on
2 min read

பறவைகள் பல காரணங்களுக்காகத் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நெடுந்தூரத்துக்குப் பயணத்தை மேற்கொள்கின்றன. இந்தப் பயணத்தை ‘வலசை’ என்கிறோம். பறவைகளின் வலசையைக் குறைந்த தூரம், இடைப்பட்ட தூரம், நெடுந்தூரம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகள் 100 - 500 கி.மீ. தூரத்துக்குள் இடம் மாறுகின்றன. மற்ற பறவைகள் 5,000 - 10,000 கி.மீ. வரை வலசை செல்கின்றன. ஆலா போன்ற சில பறவைகள் 70,000 கி.மீ. வரை வலசையை மேற்கொள்கின்றன.

உலகில் உள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான பறவை இனங்களில் 15 – 20 சதவீதப் பறவைகள் வலசை செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் இரண்டு இடங்கள், வெவ்வேறு வெப்பநிலையில் இருக்கின்றன. இவற்றைப் பறவைகள் கணக்கில் கொண்டு வலசை செல்கின்றன.

பொதுவாக இந்த நெடுந்தூரப் பயணத்துக்கு 4 காரணங்கள் இருக்கின்றன. முதல் முக்கியமான காரணம், தட்பவெப்ப நிலை. அதீத குளிருக்குச் சூழ்நிலை மாறும்போது பறவைகளால் தாக்குப்பிடிக்க முடியாது. அதனால் குளிரிலிருந்து வெப்பமான பகுதியை நோக்கிச் செல்கின்றன.

இந்தியாவில் டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர்காலமாக இருக்கும் போது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பகுதிகளில் கோடைக்காலமாக இருக்கும். இதை அறிந்து பறவைகள் குளிரிலிருந்து, வெப்பமான பகுதியை நோக்கி வலசை செல்கின்றன. இரண்டாவது, உணவுக்காக வலசை செல் கின்றன.

குளிர்காலத்தில் பகல் பொழுது குறை வாகவும் இரவுப் பொழுது அதிகமாகவும் இருக்கும். அதனால் உணவைத் தேடி உண்பதில் பறவைகளுக்குச் சிரமம் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் பூச்சிகளை உண்ணும் பறவைகளுக்குப் போதிய இரை கிடைப்பதில்லை. தேவையான உணவு ஒரு குறிப்பிட்ட பருவக்காலத்தில் கிடைக்கும்போது, கிடைக்கும் இடத்தை நோக்கிப் பறவைகள் வலசை செல்கின்றன.

மூன்றாவது, இனப்பெருக்கத்துக்காக வலசை மேற்கொள்கின்றன. இனப்பெருக்கத்துக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை தேவைப்படும். அங்கே சிறிது காலம் ஓய்வெடுத்து, நெடுந்தூரம் அலையாமல் உணவு கிடைக்கும் இடமாகவும், தங்குவதற்கு வசதியாகவும் இருக்கும் இடத்தை நோக்கி இடம்பெயர்தல் நடைபெறுகிறது.

நான்காவது, வேட்டையாடும் விலங்குகள், பறவைகளிடம் இருந்து தப்பிப்பதற்கும் இந்த வலசை சில பறவைகளுக்கு உதவுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் வலசை நடைபெறு வதற்குக் காரணம், அதீதக் குளிரின் காரணமாக உணவு பற்றாக்குறை எல்லா உயிரினங்களுக்கும் ஏற்படுகிறது. அதனால் வேட்டையாடும் விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில்லை. அவை உணவு கிடைக்காதபோது பறவை களை வேட்டையாடுகின்றன. அதனால் அவற்றிடமிருந்து தப்பிக்க பறவை வலசை தேவைப்படுகிறது.

சுடலைக் குயில் (Clamator jacobinus) மே, ஜுன் மாதங்களில் ஆப்ரிக்காவின் சூடான் பகுதியில் இருந்து இந்தியாவை நோக்கி வலசை வருகிறது. 5 ஆயிரம் கி.மீ. பயணப்பட்டு, அது வாழும் இடத்தை விட 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக உள்ள இடத்துக்கு வருகிறது.

இமயமலையில் வசிக்கும் நீல சீகாரப் பூங்குருவி (Blue Whistling Thrush) குளிர்காலத்தின்போது, அது தங்கி இருக்கும் உயரத்தை மாற்றிக்கொள்கிறது. உயரம் அதிகமாக அதிகமாகக் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் உயரத்தை மாற்றித் தனக்குத் தேவையான தட்பவெட்ப நிலையைப் பெற்றுக்கொள்கிறது.

தமிழ்நாட்டுக்கு வரும் நீர்நிலைப் பறவைகளான பட்டைத்தலை வாத்துகளின் (Bar-headed Geese) வலசை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இவை குளிர்காலத்தில் ஏரிகள், குட்டைகளில் தஞ்சம் அடைகின்றன. ஆனால், கோடைக்காலம் ஆரம்பிக்கும்போது, திபெத்திய சமவெளி, மங்கோலியா போன்ற பகுதிகளுக்குச் செல்கின்றன. இவை வெப்பத்துக்காக இந்த இடங்களுக்குச் செல்வது இல்லை. மாறாகப் பாதுகாப்பான இனப்பெருக்கம், உணவு ஆகியவற்றுக்காகச் செல்கின்றன. அதுவே இவற்றின் தாய்நிலம்.

மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு இவற்றுக்குச் சவாலாக இருக்கும். அதிலிருந்து தப்பிப்பதற்கு இந்த வலசை உதவுகிறது. இவை 7 – 8 கி.மீ. உயரமாக இருக்கும் இமயமலைத் தொடர்களை எளிதாகக் கடந்துவிடும். கனடா, அலாஸ்கா போன்ற இடங்களில் உள்ள பறவைகள், குளிர்காலத்தில் மெக்சிகோ, பிரேசில் போன்ற வெப்ப நாடுகளுக்குச் செல்கின்றன. சைபீரியப் பறவைகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெப்பநிலை பூஜ்ய டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்கும்போது இந்தியாவை நோக்கி வலசை வருகின்றன. 3 – 8 ஆயிரம் கி.மீ. வரை பயணப்பட்டு ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் தங்குகின்றன.

பறவைகள் வலசை செல்லும்போது அவை உண்ணும் விதைகள், அவற்றின் கழிவுகள் மூலம் புதிய இடங்களுக்குப் பரவுகின்றன. இதன் மூலம் தாவரங்களின் பெருக்கத்துக்கும் அவை உதவுகின்றன. குறிப்பாக, தீவுகள், பாலைவனங்கள் போன்றவற்றில் பறவைகள் மிக முக்கியமான விதைப் பரப்பிகளாகச் செயல்படுகின்றன.

மிகவும் சிறிய பூச்சிகள் அணுக முடியாத உயரமான, ஆழமான மலர்களுக்குப் பறவைகள் முக்கியமான மகரந்தச் சேர்க்கை யாளராக இருக்கின்றன. சில செடிகளும் மரங்களும் பறவைகளின் உதவியின்றி இனப்பெருக்கம் செய்ய முடியாது. விதைகள், மகரந்தங்களைப் பரப்புவதன் மூலம் காடுகளின் பன்முகத்தன்மையைப் பறவைகள் மேம்படுத்து கின்றன.

(பறப்போம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in