கல் வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என்றால் என்ன? | டிங்குவிடம் கேளுங்கள்

கல் வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என்றால் என்ன? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

தலையில் இருக்கும் பேன்கள் காதுக்குள் போகாமல் இருப்பது ஏன், டிங்கு? - வெ. எழிலரசி, 7-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

பேன்கள் தலையில் வாழும் உயிரினம். மனித ரத்தத்தை உறிஞ்சி, முடிகளில் முட்டைகளை இடக்கூடியது. உச்சந்தலையிலும் பின்னந்தலையிலும் கழுத்திலும் காதுகளின் ஓரத்திலும் பேன்கள் வாழும். ஆனால், காதுகளுக்குள் பேன்கள் செல்லாது. காதுக்குள் ஊர்ந்து செல்லவோ வாழவோ அவை தகவமைப்பைப் பெறவில்லை.

அதனால் முடிகள் இருக்கும் தலைப்பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. அதோடு தலையைவிட்டு வெளியே ஊர்ந்து வந்தால், அதை உணர்ந்து பேனைக் கொன்றுவிடும் ஆபத்தும் இருப்பதால், பெரும்பாலும் பேன்கள் வெளியே வருவதில்லை எழிலரசி.

கல் வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என்கிறார்களே, அதில் கல் என்பது எதைக் குறிக்கிறது, டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடைப் பயன்படுத்துகிறார்கள். இந்த கால்சியம் கார்பைடை மாம்பழத்துடன் வைக்கும்போது, ஈரப்பதத்துடன் வினைபுரிந்து அசிட்டலீன் வாயுவை வெளியிடுகிறது. இந்த அசிட்டலீன் வாயு மாம்பழங்களைப் பழுக்க வைக்கும் காரணியாகச் செயல்படுகிறது.

இது இயற்கையாகப் பழுப்பதைவிட வேகமாக பழுக்க வைக்கிறது. ஆரோக்கியக் கேடு காரணமாக, கால்சியம் கார்பைடு பல நாடுகளில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களைச் சாப்பிட வேண்டாம் என்கிறார்கள், இனியா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in