பறவை எவ்வாறு தூங்கும்? | பறப்பதுவே 18

பறவை எவ்வாறு தூங்கும்? | பறப்பதுவே 18
Updated on
2 min read

பொதுவாகப் பறவைகளின் தூக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான பறவைகள் மரக்கிளைகளில் தூங்குகின்றன. அவை தங்கள் கால்களைக் கொண்டு கிளைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூங்குகின்றன. புறா, காகம், சிட்டுக்குருவி போன்ற பறவைகள் மரக்கிளைகள், கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்கின்றன. இவற்றின் கால்களில் உள்ள சிறப்புத் தசை நார்கள், அவை கீழே விழாமல் தடுக்கின்றன.

சில பறவைகள் தங்கள் கூடுகளில் தூங்குகின்றன, குறிப்பாகக் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பெற்றோர் பறவைகள். தூக்கணாங்குருவி, ஸ்விஃப்ட் (உழவாரன்) போன்ற பறவைகள் இப்படி உறங்குகின்றன. கடல் பறவைகளும் வாத்து போன்ற நீர்ப் பறவைகளும் தண்ணீரில் மிதந்துகொண்டே தூங்கும் முறையைக் கையாளுகின்றன.

நீர்ப்புகாத இறகுகள் தண்ணீரில் மிதந்துகொண்டே தூங்கும்போது குளிரிலிருந்து இவற்றைப் பாதுகாக்கின்றன. நீண்ட தூரத்துக்குப் பறந்து செல்லும் திறனுடைய அல்பட்ராஸ், காற்றோட்டங்களைப் பயன்படுத்தி, அதிக ஆற்றலைச் செலவிடாமல் பறந்துகொண்டே ஓய்வெடுக்கிறது.

ஆந்தை, புறா, கிளி ஆகியவை கட்டிடங்களின் இடுக்குகள், மரத்தில் இருக்கும் பொந்துகளில் ஓய்வெடுக்கின்றன. பறவைகள் தங்கள் மூளையின் ஒரு பகுதியை மட்டும் தூங்க வைத்து, மற்ற பகுதியை விழித்திருக்க வைத்திருக்கின்றன.இதனால் அவை ஒரு கண்ணைத் திறந்து வைத்து, சுற்றுப்புறத்தைக் கவனிக்க முடியும். இது வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. நீர்ப் பறவைகள் நீரில் மிதந்து கொண்டு தூங்கும்போது, ஒரு கண்ணைத் திறந்து, பாதுகாப்பைக் கண்காணிக்கின்றன.

சில பறவைகள் குறுகிய நேரம் மட்டுமே தூங்குகின்றன. அவை ஒரு நாளில் பல முறை, சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரை தூங்குகின்றன. வலசை போகும் பறவைகள் குறைவான நேரமே தூங்குகின்றன. சில பறவைகள் 5 முதல் 8 நாள்கள் வரை தொடர்ந்து நிற்காமல் பறந்துகொண்டே செல்கின்றன. அவை பறக்கும் போது சிறிது நேரம் தூக்கத்தை மேற்கொள்கின்றன.

காற்றில் மிதந்து கொண்டு செல்லும் பறவைகள் குறைவான நேரம்தான் சிறகடிக்கும். அப்படி வானத்தில் பறந்து கொண்டிருக்கும்போது கிடைக்கும் சிறிய இடைவெளியில் Swifts, Terns (ஆலா) போன்ற பறவைகள் ஓய்வெடுத்துக் கொள்கின்றன. பூநாரை போன்ற பறவைகள் தூங்கும்போது ஒரு காலில் நின்று கொண்டு தூங்குகின்றன.

இதன் மூலம் உடலில் இருந்து அதிகப்படியான வெப்ப இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடிகிறது. மரக்கிளையில் அமரும்போது அவற்றின் கால்கள் பிடித்துக்கொள்ள உதவுவது போல், தரையில் ஒற்றைக் காலில் நிற்கும் போதும் விழாமல் இருக்கும் திறனை இவை கொண்டுள்ளன.

காடைகள் போன்ற பறவைகள் தரையில் ஓய்வெடுத்துக் கொள்கின்றன. பெரும்பாலான பறவைகள் உறங்கும்போது தலையைத் திருப்பி, இறகுகளுக்கு அடியில் வைத்துக்கொள்கின்றன. அதனால் கழுத்துக்கு ஓய்வு கிடைக்கிறது. மேலும் வெப்ப இழப்பு கணிசமாகக் குறைகிறது. பறவைகளின் வாழ்க்கை முறையைப் பொறுத்து சில பறவைகள் பகலிலும் சில பறவைகள் இரவிலும் தூங்குகின்றன. பொதுவாகப் பல பறவைகள் இரவில் ஓய்வு எடுக்கின்றன. ஆந்தை போன்ற சில பறவைகள் பகலில் ஓய்வு எடுக்கின்றன.

பகல், இரவு எனப் பறவைகள் தினமும் 6 முதல் 12 மணி நேரம் வரை ஓய்வு எடுக்கின்றன. பகல் நேரப் பறவைகள் அந்தி வேளையில் தங்கள் கூடுகளுக்குத் திரும்பி விடியற்காலையில் இரை தேடப் புறப்படுகின்றன. கூட்டமாகத் தூங்கும் பழக்கத்தை Red-billed Quelea போன்ற சில பறவைகள் மேற்கொள்கின்றன. குளிர்ந்த சூழ்நிலையில் அவை நெருக்கமாக இருக்கும்போது, உடல் வெப்பத்தை இழக்காமல் இருப்பதற்கு இது உதவுகிறது. அதே நேரத்தில் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளவும் முடிகிறது.

உறக்க நிலை அல்லது ஓய்வு நிலைக்குப் பறவைகள் செல்லும்போது அவற்றின் உடல் நிலையில் வளர்சிதை மாற்றத்தின் அளவும் இதயத்துடிப்பின் வேகமும் குறைகிறது. Common Poorwil பறவை பல நாள்கள் ஓய்வு நிலையிலேயே இருக்கும். மற்ற உயிரினங்களைப் போலவே பறவைகள் குஞ்சுகளாக இருக்கும்போது அதிக நேரம் ஓய்வு எடுக்கின்றன.

சில பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவும் மேலும் சில காரணங்களுக்காகவும் பழைய இறகுகளை உதிர்த்து, புதிய இறகுகளை உருவாக்கிக் கொள்கின்றன. அப்போது அவை அதிக நேரம் பறப்பதில்லை. எல்லா உயிரினங்களைப் போலவும் தூக்கம் பறவைகளின் உடல் நலத்தைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

(பறப்போம்)

- writersasibooks@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in