

நிறைய அனுபவமும் வாழ்க்கைக் கதைகளும் கொண்ட தாத்தா, பாட்டிகள் நம்மிடம் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கும் நிறைய அனுபவங்களை, பட்டறிவை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடியும். பொதுவாக நமது தாத்தா, பாட்டிகள் பழைய புராணங்களை, பழைய கதைகளைப் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனால், இந்த நூலில் வரும் தாத்தா, பாட்டிகள் மாற்றுச் சிந்தனைகளை, புதிய பார்வைகளை, சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கருத்துகளைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்கள். இந்த நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அனுபவங்கள் குழந்தைகளுடன் தாத்தா, பாட்டிகளுக்கு ஏற்பட்டவை.
குழந்தைகளைச் சத்தம் போட அனுமதிக்கும் வீடு, அவர்களுக்குச் சோறு ஊட்டுவதில் உள்ள லாவகம், குழந்தைகளுக்கு நடித்தபடி கதை சொல்லுதல், மற்றவர் துன்பங்களைக் காது கொடுத்துக் கேட்டல், சக மனிதர்களை அரவணைத்தல், மூடநம்பிக்கையை எதிர்த்தல், விட்டுக்கொடுத்துச் செயல்படுதல், எப்போதும் நம்பிக்கையுடன் சக மனிதர்களுக்காக நிற்பது எனப் பல விஷயங்களை அனுபவப் பகிர்வாக இந்த நூல் சுவாரசியமான முறையில் தருகிறது. - அன்பு
கொட்டுவதா... அள்ளுவதா...
ச.மாடசாமி, வாசல் வெளியீடு, தொடர்புக்கு: 98421 02133