

விடுமுறையில் புதிதாக ஒரு விளையாட்டு தொடங்கிவிட்டது. அதாவது முதல் நாள் இரவில் கண்ட கனவுகளை மறுநாள் சொல்ல வேண்டும். அதற்காகவே நண்பர்கள் சீக்கிரம் கூடினார்கள். சிலருக்கு ஏராளமான கனவுகள் வந்தன. சிலருக்குக் கனவே வருவதில்லை. ஆனாலும் எல்லாரும் சேர்ந்து பேசி மகிழ்ந்தார்கள். அன்று ஆதித்யா தன் கனவைச் சொல்ல ஆரம்பித்தான்.
“நான் ஒரு குதிரையில் ஏறி, வேகமாகப் போய்க் கொண்டிருந்தேன். குதிரை ஒரு மலை மேல் ஏறி உச்சிக்குப் போனது. அங்கிருந்து பள்ளத்தை நோக்கிக் குதித்தது. எனக்கு உயிரே போய்விடும் போலிருந்தது.
திடீரென குதிரை பறக்க ஆரம்பித்தது. அடடா! பறக்கும் குதிரை மீதான பயணம் எப்படி இருந்தது தெரியுமா! சொல்ல வார்த்தைகளே இல்லை... அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியில் இருந்தபோது, சட்டென்று குதிரை கீழே இறங்கியது. அது என் அறிவியல் விடைத் தாளாக மாறவும் சட்டென்று விழித்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தான்.
எல்லாரும் சிரித்தனர். “ஆதித்யா, உண்மையிலேயே நீ பாவம்டா. நீ குதிரையில் பறந்ததோடு கனவு முடிஞ்சிருக்கலாம்” என்றாள் பிரகதி. “சந்திரசேகர் நீ சொல்லு” என்றான் விக்னேஷ். “நான் ஒரு காகத்தின் கூட்டில் உட்கார்ந்திருந்தேன். தாய் காகம் தன் குஞ்சுகளுக்குப் புழு, பூச்சி எல்லாம் கொண்டுவந்து கொடுத்தது. நானும் காகமாக இருந்ததால் என் வாயிலும் திணித்தது. ஐயோ, நான் காகம் இல்லை என்று சொல்வதை அது கேட்கவே இல்லை. எனக்குக் குமட்டிக்கொண்டு வந்ததால், கனவு கலைந்துவிட்டது விக்னேஷ்” என்றான் சந்திரசேகர்.
“உனக்கு இன்னும் நல்ல கனவு வந்திருக்கலாம் சந்திரசேகர்” என்றாள் அகல்யா. “கொஞ்சம் சகிச்சிக்கிட்டு காகத்தின் கூட்டில் இருந்திருந்தால், அதோட வாழ்க்கை முறையைத் தெரிஞ்சுக்கிட்டிருக்கலாம்” என்றான் விக்னேஷ். “அந்தக் கூட்டுக்கு உன்னை அனுப்பி வைக்கணும்” என்றான் சந்திரசேகர்.
அடுத்து ஜோசப் தன் கனவைச் சொல்ல ஆரம்பித்தான், “ஒரு பெரிய மாளிகை. அதில் ஒரு மேஜை மேல் விதவிதமான சாப்பாடு இருந்தது. பீட்சா, பர்கர், பார்பக்யு, கிரில்சிக்கன், பிரியாணி, புலவு, சாக்லெட், ஃபலூடா, பிரெட், ஐஸ்கிரீம் எல்லாவற்றையும் பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறியது. நான் ஆசையாகக் கையால் எடுத்துப் பார்த்தேன். கையில் பழைய சோறும் ஊறுகாயும் இருக்குதுடா” என்று சிரித்தான்.
“கனவில்கூட உனக்குப் பிடிச்சது எல்லாம் கிடைக்க மாட்டேங்குதே” என்று வருத்தப்பட்டான் ஆதித்யா. யூசூப் தன் கனவைச் சொல்ல ஆரம்பித்தான், “கும்மிருட்டு. நான் எங்கே இருக்கேன்னு எனக்குத் தெரியல. நான் மூச்சு வாங்க ஓடிக்கிட்டிருக்கேன். என்னை யாரோ துரத்திக்கிட்டு வந்தாங்க.எதுக்குத் துரத்தினாங்கன்னு தெரியல. அப்படியே ஒரு மலை மேலே ஏறுனேன். கடலைத் தாண்டினேன். வானத்தில் பறந்தேன். எங்கே போனாலும் துரத்தற சத்தம் கேட்குது. கடைசியா எங்கம்மா கிட்ட போய்ப் படுத்துக்கிட்டேன்.. அம்மா தாலாட்டுப் பாடினாங்க. நான் அப்படியே தூங்கிட்டேன்...”
“பிரமாதம் யூசுப்.” “சரி, எனக்கு ஏன் கனவே வரமாட்டேங்குதுடா” என்றான் அரவிந்த். “எல்லாருக்கும் கனவு வரும்டா. ஆனா, எல்லாருக்கும் அது நினைவில் இருக்காது” என்றான் சந்திரசேகர். “ஏன் சிலருக்குக் கனவு வர மாட்டேங்குது தெரியுமா? கனவு தேவதைதான் கனவுகளை நெய்து நாம் தூங்கும்போது நம் மீது போர்த்திவிடுவார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவை அவர் நெய்து கொடுப்பார். அவர் கிட்டே வேணா கேட்டுப் பாரேன்..” என்றாள் பிரகதி. அன்று இரவு அரவிந்த் கனவு தேவதையைக் கூப்பிட்டான். இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு கனவாக நெய்து போர்த்திக் கொண்டிருந்தார் அந்தத் தேவதை. அரவிந்தின் குரல் கேட்டு அவனுடைய படுக்கைக்கு வந்தார்.
“என்ன அரவிந்த்?” “எனக்கு ஏன் கனவே வரவில்லை?” “நீ எதற்காகவாவது ஆசைப்பட்டிருக்கிறாயா?” “இல்லை...” “உனக்கு வாழ்க்கையில் ஏதாவது லட்சியம் இருக்கிறதா?” “இல்லை...” “அப்புறம் எப்படி உனக்குக் கனவு வரும்?” அரவிந்த் யோசித்தான். அவனுக்குக் கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஓர் எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுக்குக் கனவுகள் வர ஆரம்பித்தன. கனவு தேவதை அவனுக்கு விதவிதமான வண்ண வண்ணக் கதைகளை நெய்து போர்த்திவிட்டுக் கொண்டிருந்தார். இப்போது யாரும் காணாத கனவுகளை அரவிந்த் கண்டான்!