Published : 18 Jul 2018 10:53 AM
Last Updated : 18 Jul 2018 10:53 AM

டிங்குவிடம் கேளுங்கள்: குறிஞ்சி ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிறது?

‘டிக் டிக் டிக்’ திரைப்படம் பார்த்தேன். அதில் வருவதுபோல் ஓர் எரிகல் இந்தியாவைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா, டிங்கு? நான் விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்று ஆசை. இது சரியா?

– ஷைனி, 8-ம் வகுப்பு, வேலம்மாள் வித்யாஷ்ரம், படப்பை.

எரிகல் அல்லது விண்கற்கள் சூரிய மண்டலத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவை சில நேரம் பூமியின் ஈர்ப்புப் பகுதிக்குள் நுழைந்துவிடுவது உண்டு. அப்படி நுழையும் எரிகற்கள் பெரும்பாலும் கடலில்தான் விழுந்திருக்கின்றன. அரிசோனாவில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று எரிகல் விழுந்ததால் உண்டாகியிருக்கிறது. இதுவரை எரிகற்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதில்லை. அதனால் பயப்படாமல் இருங்கள், ஷைனி.

யார் வேண்டுமானாலும் என்னவாக வேண்டுமானாலும் வருவதற்கு ஆசைப்படலாம். இதில் என்ன தவறு இருக்கிறது? நிறையப் படிக்க வேண்டும். ஆர்வத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும், அவ்வளவுதான். 2033-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை நாசா அனுப்ப இருக்கிறது. இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிகளை முடித்து, முதல் பாஸ்போர்ட்டைப் பெற்றவர் அமெரிக்காவில் வசிக்கும் ஆலிஸா கார்சன்.

17 வயதான இவர், செவ்வாயில் கால் பதிக்கப் போகும் முதல் மனிதர். கார்ட்டூன் தொடர்களைப் பார்த்து, 3 வயதிலேயே செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல ஆசைப்பட்டிருக்கிறார். வளர வளர விண்வெளித் துறையைப் பற்றி அறிந்துகொண்டார். 12 வயதிலேயே விண்வெளி தொடர்பான பயிற்சிகளையும் பெற்றிருக்கிறார். இன்று செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்!

விலை உயர்ந்த நாகரத்தினக் கற்களைப் பாம்பு கக்கும் என்கிறார்களே, உண்மையா டிங்கு?

– எம். ஜோதி, 8-ம் வகுப்பு, அரசினர் பள்ளி, திருப்பத்தூர்.

நானும் இதுபோன்ற விஷயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். பாம்பு, தான் சாப்பிட்டை இரை ஜீரணிக்காவிட்டால் அப்படியே கக்கிவிடும். ஆனால் நாகரத்தினக் கற்களைக் கக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை, ஜோதி. பாம்பு கடிக்கும்போதுதான் நச்சுப் பற்களில் இருந்து நச்சு சுரக்கும். அதுவும் சில துளி விஷம்தான் வெளிவரும். நச்சு, பாம்பின் உடலுக்குள் கெட்டியாவது இல்லை.

குறிஞ்சி மலர் ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது, டிங்கு?

-அ. சுபிக்ஷா, ஒன்பதாம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்.

குறிஞ்சி மலர் ஆசியாவில் மட்டுமே காணப்படும் செடி இனம். இந்தியாவில் சுமார் 50 வகை குறிஞ்சிச் செடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் கொடைக்கானல், நீலகிரி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. Strobilanthes kunthiana என்ற இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூக்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. 7, 12, 16, 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய குறிஞ்சி வகைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே குறிஞ்சிச் செடிகள் பூக்கின்றன. உயிர் தப்பிப் பிழைப்பதற்கான வழியாக இவ்வாறு நீண்ட காலம் கழித்துப் பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

குறிஞ்சிப் பூக்களில் இருக்கும் பூந்தேன் மிகவும் சுவையானது. பூக்களை நாடி பூச்சிகள், பறவைகள், விலங்குகள் ஏராளமாக வருகின்றன. அதனால் அவற்றிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்கு இந்தத் தகவமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு விதைகளை மண்ணில் விட்டுவிட்டு, செடிகள் மடிந்துவிடுகின்றன. மீண்டும் விதைகளில் இருந்து புதுச் செடிகள் உருவாகி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பூக்கின்றன. பூக்கக்கூடிய காலண்டர் அதன் மரபணுவிலேயே அமைந்திருப்பதால், அவை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன, சுபிக்ஷா. தற்போது கேரளாவில் உள்ள மூணாறு மலையில் நீலக்குறிஞ்சி பூத்திருக்கிறது.

ஒரு பொருளைப் பார்த்ததும் அது எப்படி வேலை செய்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறேன். தேவையற்ற பொருட்களை வைத்து, இரண்டு கருவிகளை உருவாக்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள், ‘நீ பெரிய எடிசனா?’ என்று கிண்டல் செய்கிறார்கள். என்ன செய்வது, டிங்கு?

– எம். பரகத் அலி, காங்கேயம்.

உங்களது ஆராய்ச்சி ஆர்வத்துக்குப் பாராட்டுகள், பரகத் அலி! ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எடிசன், சிறுவனாக இருந்தபோது ஒருநாள் கோழி முட்டையின் மீது அமர்ந்திருந்தார். அவரது அம்மா எதற்காக இப்படி உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டார். கோழி அடைகாத்தால் குஞ்சு பொரிகிறதே, அதேபோல நானும் முட்டையை அடைகாத்தால் குஞ்சு பொரியுமா என்று பார்க்கிறேன் என்றார். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். ஆனால் எதிர்காலத்தில் உலகம் போற்றும் விஞ்ஞானியாக மாறினார் எடிசன். அதனால் இதுபோன்ற கிண்டலுக்காக ஆர்வத்தை விட்டுவிடாதீர்கள். வீட்டில் உள்ளவர்கள் பிற்காலத்தில் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x