அணில் எவ்வாறு தொடர்புகொள்கிறது? | உயிரினங்களின் மொழி - 16

அணில் எவ்வாறு தொடர்புகொள்கிறது? | உயிரினங்களின் மொழி - 16
Updated on
2 min read

அணில்கள் நம் சுற்றுச்சூழலில் அதிகம் காணப்படும் சிறிய உயிரினங்கள். அவை ஒலி, உடல் அசைவு, வேதியியல் சமிக்ஞை, தொடுதல் மூலம் தொடர்புகொள்கின்றன. அணில்களின் ஒலிதொடர்பு முறை பன்முகத்தன்மை கொண்டது. ‘குக்-குக்' என்கிற குரல்கள், தொடர்ச்சியான கீச்சொலிகள், உரத்த அலறல்கள், மென்மையான உறுமல்கள் இதில் அடக்கம்.

ஒவ்வோர் ஒலியும் ஒரு குறிப்பிட்ட செய்தியை வெளிப்படுத்துகிறது. உதாரணத்துக்கு, உரத்த, தொடர்ச்சியான கீச்சொலிகள் பொதுவாக எச்சரிக்கை சமிக்ஞைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆபத்து நெருங்கும்போது அணில்கள் இந்த ஒலிகளை எழுப்பி, சுற்றியுள்ள அணில்களுக்கு எச்சரிக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் இந்த எச்சரிக்கை ஒலிகள் ஆபத்தின் வகையைப் பொறுத்து மாறுபடுவதைக் கண்டறிந்துள்ளனர். பாம்பு, பூனை போன்ற விலங்குகளிடம் இருந்து ஆபத்து வரும் போது ஒரு மாதிரியான எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றன. அதுவே பருந்து, வல்லூறு போன்ற பறவைகளிடம் இருந்து ஆபத்து வரும் போது வேறு விதமான எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றன.

இனப்பெருக்கக் காலத்தில், ஆண் அணில்கள் தனித்துவமான 'மியாவ்' போன்ற ஒலியை எழுப்பி பெண் அணில்களைக் கவர்கின்றன. இந்த ஒலி பல நிமிடங்களுக்குத் தொடர்வது உண்டு. இது பெண் அணில்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான வழி. பெண் அணில்கள் அவற்றிற்குப் பதிலளிக்கும்போது, குறைவான அதிர்வெண் கொண்ட, மென்மையான ஒலிகளை எழுப்புகின்றன. இது ஆண் அணில்களுக்கு அவற்றின் ஆர்வத்தைத் தெரிவிக்கிறது.

அணில் குஞ்சு தன் அம்மாவை அடையாளம் காணவும், பசி அல்லது குளிர் போன்ற தேவைகளைத் தெரிவிக்கவும் உயர் அதிர்வெண் கீச்சொலிகளைப் பயன்படுத்துகின்றன. இந்த ஒலிகள் தாய் அணில்களுக்கு அவற்றின் குட்டிகளின் இருப்பிடத்தை அறிய உதவுகின்றன. மேலும் தாய் அணில்கள் தங்கள் குட்டிகளின் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்கின்றன.

அணில்களின் உடல்மொழி அவற்றின் தொடர்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவற்றின் வால் மிகவும் வெளிப்படையான தகவல்தொடர்புக் கருவியாக உள்ளது. அமைதியான நேரத்தில், அணில் தன் வாலைக் கொடி போலக் கொண்டு செல்கிறது. ஆனால், ஆபத்தை உணரும்போது, விறைப்பாக்கி, முதுகெலும்புக்கு மேல் வளைக்கிறது. சில நேரம், அணில் வாலை வேகமாகத் தட்டுவதன் மூலம் எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்புகிறது. இந்த வால் தட்டும்போது தரையில் அதிர்வுகளை உருவாக்கி, அருகிலுள்ள அணில்களுக்கு ஆபத்தைத் தெரிவிக்கிறது.

அணில்களின் முகபாவனைகளும் முக்கியமான தகவல்களை வழங்குகின்றன. கோபமான அல்லது அச்சுறுத்தப்பட்ட அணில்கள் தங்கள் பற்களைக் காட்டி, காதுகளைப் பின்னோக்கிச் செலுத்துகின்றன. அமைதியான நேரத்தில், அவற்றின் காதுகள் நிமிர்ந்து, கண்கள் சாதாரணமாக இருக்கும். அணில்கள் ஒன்றை மற்றொன்று சந்திக்கும்போது, அவை முகர்ந்து பார்த்து,சில நேரம் மூக்குகளைத் தேய்த்து தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.

அணில்கள் தங்கள் கன்னங்களில் உள்ள சுரப்பிகள் மற்றும் உடலின் பிற பகுதிகளிலிருந்து வெளியாகும் மணத்தின் மூலம் பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. பெண் அணில்கள் இனப்பெருக்கக் காலத்தில் தனித்துவமான மணத்தை வெளியிடுகின்றன. இது ஆண் அணில்களைக் கவர்கிறது. அணில்கள் தங்கள் வாழ்விடத்தின் எல்லைகளைக் குறிக்க மரங்களில் தங்கள் மணத்தைத் தேய்க்கின்றன. இந்த மணம் மற்ற அணில்களுக்கு அந்தப் பகுதி ஏற்கெனவே ஓர் அணிலுக்குச் சொந்தமானது என்பதைத் தெரியப்படுத்துகிறது.

அணில்களின் தொடுதல்தொடர்பு முக்கியமாக அவற்றின் சமூக உறவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அணில்கள் ஒன்றை மற்றொன்று தடவிக்கொள்வதன் மூலம் தங்கள் மணத்தைப் பரிமாறிக் கொள்வதோடு, உறவையும் வலுப்படுத்துகின்றன. குறிப்பாக, தாய் அணில்கள் தங்கள் குட்டிகளை அடிக்கடி தடவிச் சுத்தம் செய்வதோடு, அதன் மூலம் அன்பையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகின்றன.

அணில்களின் தகவல்தொடர்பு அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபடுகிறது. மரங்களில் வாழும் அணில்கள் அதிக ஒலி சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன. ஏனெனில் அவற்றிற்குத் தூரத்திலிருந்து தொடர்புகொள்ள வேண்டிய தேவை அதிகம். நிலத்தில் வாழும் அணில்கள் மணம், நிலத்தில் எழுப்பப்படும் அதிர்வுகளை அதிகம் நம்புகின்றன.

இரைதேடும் போதும், இரையாக மாறாமல் இருக்கும் போதும், இனப்பெருக்கம் செய்யும் போதும், குட்டிகளை வளர்க்கும் போதும் ஒலி மூலம், உடல் அசைவு மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கின்றன.

நகர்ப்புற அணில்கள் அதிகச் சத்தமான ஒலிகளை உருவாக்குகின்றன, ஏனெனில் அவை நகர்ப்புற இரைச்சலை மீறிக் கேட்க வேண்டும்.
அணில்களின் தகவல் தொடர்பின் மற்றோர் அம்சம் அவற்றின் நினைவகம். அணில்கள் தங்கள் உணவை மறைக்கும் இடங்களை நினைவில் வைத்திருக்கின்றன. மேலும் அவை தங்கள் உணவு மறைத்த இடத்தை அடையாளம் காண மன வரைபடங்களை உருவாக்குகின்றன. இந்த நினைவகத் திறன் அவற்றின் தகவல்தொடர்பின் ஒரு முக்கியப் பகுதி.

அணில்களின் தகவல் தொடர்பு முறைகளை ஆராய்வதன் மூலம், இந்தச் சிறிய உயிரினங்களின் சிக்கலான வாழ்க்கை முறை குறித்த ஆழமான புரிதலைப் பெறலாம். அவற்றின் ஒலிகள், உடல் மொழி,வேதியியல் சமிக்ஞைகள், தொடுதல் அவற்றின் சமூக உறவுகளை வடிவமைக்கிறது. அவற்றின் உயிர்வாழ்வுக்கு உதவுகிறது.

கட்டுரையாளர், எழுத்தாளர் | தொடர்புக்கு : writernaseema@gmail.com

முந்தைய அத்தியாயம் > முதலைகளின் மொழி | உயிரினங்களின் மொழி - 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in