

வாண்டுமாமாவை உங்களுக்குத் தெரியுமா? அவருடைய கதைகள், சித்திரக் கதைகளை வாசித்திருக்கிறீர்களா? உங்கள் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியிடம் வாண்டுமாமாவைப் பற்றிக் கேட்டீர்கள் என்றால் உற்சாகமாகப் பேசுவார்கள். ஏனென்றால் உங்களைப் போன்று சிறார்களாக அவர்கள் இருந்தபோது, அவர்களின் வாழ்க்கையைச் சுவாரசியமாகவும் வண்ணமயமாகவும் மாற்றியவர்களில் முக்கியமானவர் வாண்டுமாமா!
ஓவியராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்த வாண்டுமாமா, பல வேலைகளைச் செய்துவிட்டு, தன் திறமையால் மிகச் சிறந்த எழுத்தாளராகவும் பத்திரிகை ஆசிரிய ராகவும் உயர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், படக்கதைகள், புராணக் கதைகள், துப்பறியும் கதைகள், சாகசக் கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் என்று அவர் எழுதாத விஷயங்களே இல்லை! கதை அல்லாத அறிவியல், வரலாறு, வாழ்க்கை போன்ற நூல்களையும் வாண்டுமாமா எழுதியிருக்கிறார்.
வாண்டுமாமா எழுதிய 190க்கும் மேற்பட்ட நூல்கள், காலம் கடந்தும் ரசிக்கும் விதத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. வாண்டுமாமாவின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் இந்த விடுமுறையில் பலே பாலு, பலே பாலுவும் பறக்கும் டிராயரும், சமத்து சாரு, ரத்தினபுரி ரகசியம், வீர விஜயன், மலைக்குகை மர்மம், அரசகுமாரி ஆயிஷா, புலி வளர்த்த பிள்ளை, மாயச் சுவர், தவளை இளவரசி, கண்ணாடி மனிதன் போன்ற அவருடைய புத்தகங்களை வாங்கிப் படித்துப் பாருங்கள். பிறகு நீங்களே வாண்டுமாமாவின் ரசிகராகிவிடுவீர்கள்!