வாண்டுமாமா நூற்றாண்டு: நாள் முழுவதும் கொண்டாட்டம்!

வாண்டுமாமா நூற்றாண்டு: நாள் முழுவதும் கொண்டாட்டம்!
Updated on
1 min read

தமிழ் சிறுவர் இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமையான வாண்டுமாமாவின் நூற்றாண்டு விழா, தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஓவியர்கள், திரைக் கலைஞர்கள், பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்படுகிறது. காமிக்ஸ் ஆர்வலர் கிங் விஸ்வாவின் முயற்சியில் ஏப்ரல் 14இல், சென்னையில் ஒரு நாள் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை அருகில் உள்ள அரிமளம் கிராமத்தில் 1925 ஏப்ரல் 21இல் பிறந்த வாண்டுமாமாவின் இயற்பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி.திருச்சி லால்குடி அருகே உள்ள திண்ணியம் கிராமத்தில் வளர்ந்த இவர்,ஓவியர், வடிவமைப்பாளர், கையெழுத்துப் பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முகத்துடன் இயங்கி ‘சிவாஜி’, ‘வானவில்’ போன்ற இதழ்களில் பணியாற்றத் தொடங்கினார். சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வானவில்’ இதழில் வாண்டுமாமா என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். அதுவே அவரது அடையாளமானது. ‘கல்கி’, ‘கோகுலம்’, ‘பூந்தளிர்’ இதழ்களில் அவர் எழுதிய படைப்புகள் சிறுவர்களின் வாழ்வில் செழுமை சேர்த்தவை. கெளசிகன், விசாகன், சாந்தா மூர்த்தி என்று பல்வேறு பெயர்களில் எழுதிவந்த வாண்டுமாமா, 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். பல சிறுவர் தொடர்களை எழுதி, பல புகழ்பெற்ற கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருக்கிறார்.

இத்தகைய சிறப்பு மிக்க வாண்டுமாமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் உள்ள டிஸ்கவரி பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று காலை 9.55 முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இயக்குநர்கள் வசந்த், சுசீந்திரன், வசந்தபாலன், சிங்கம்புலி, ஊடகவியலாளர்கள் சமஸ், தமிழ்மகன், கல்கி சீதா ரவி, முருகேஷ் பாபு, சுட்டி கணேசன், ரமேஷ் வைத்யா, சுஜாதா, ஆண்டாள் பிரியதர்ஷினி, உமா சக்தி, பதிப்பாளர்கள் பத்ரி சேஷாத்ரி, ராமநாதன், காந்தி கண்ணதாசன், எழுத்தாளர்கள் பாலபாரதி, எஸ்கேபி கருணா, ஓவியர்கள் ராமு, ம.செ., ஜெயராஜ், அரஸ், ஸ்யாம், ராஜரத்தினம், பாண்டியன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு வாண்டுமாமாவின் சிறப்புகளைப் பற்றி உரையாற்றவிருக்கின்றனர். பல்வேறு அமர்வுகள் கொண்ட இந்த நிகழ்வு, வாண்டுமாமா ரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in