

ஆசிரியரும் சிறார் பாடலாசிரியருமான முத்துராஜா ‘காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்' பாடல் தொகுப்பு வழியாகக் கவனம் பெற்றவர். தற்போது அவருடைய ‘பூ பூ பூசணிப் பூ' எனும் புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது. சிறிய பாடல்கள், சற்றே பெரிய பாடல்களுடன், விடுகதைப் பாடல்கள், கதைப் பாடல்கள் போன்றவற்றையும் இந்தத் தொகுப்பில் முயன்று பார்த்துள்ளார்.
குழந்தைகளுக்கான பாடல்களாக அல்லாமல், குழந்தைகள் எதிர்பார்ப்பதைப் பாடல்கள் ஆக்குவது மிக முக்கியம். அவர்களை எளிதில் கவரும் சக்கரம் வச்ச செருப்பு, சவ்வு மிட்டாய் போன்றவை குறித்துச் சில பாடல்கள் பேசுகின்றன. இப்படிக் குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் பாடல்கள் நிறைய வெளிவர வேண்டும்.
அதேநேரம், வெறுமனே தகவல்கள்-வார்த்தைகளை அடுக்காமல் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டக்கூடிய சில செய்திகளையும் பாடல்களில் பொதிந்தே தந்திருக்கிறார் முத்துராஜா. அதுவே அவரது தனித்தன்மை. எளிமையும் ஓசை நயமும் மிக்க அவருடைய பாடல்கள் சிறார் வாசிக்கவும், மொழியைப் பழகிக்கொள்ளவும் நிச்சயமாக உதவும். - நேயா
பூ பூ பூசணிப் பூ (சிறுவர் பாடல்கள்), குருங்குளம் முத்து ராஜா, மேஜிக் லாம்ப் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302