

அ
லுவலகங்களிலும் வீடுகளிலும் குறிப்புகளைச் சிறிய வண்ணத் தாள்களில் ஒட்டி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ’போஸ்ட் இட் நோட்’, ’ஒட்டும் காகிதம்’ என்று அழைக்கப்படும் இந்தக் காகிதங்களை விரும்பிய இடங்களில் ஒட்டி, தேவையில்லாதபோது எடுத்துவிடலாம். ஒரே தாளை மீண்டும் மீண்டும் எடுத்து வேறு இடங்களில் ஒட்டிக்கொள்ளவும் செய்யலாம். தாளும் கிழியாது, ஒட்டிய இடமும் அழுக்காகாது.
ஒட்டும் காகிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 41 ஆண்டுகள்தான் ஆகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த 3எம் என்ற சர்வதேச நிறுவனம், புதுவிதமான பசையைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியிருந்தது. இதற்காக ஸ்பென்சர் சில்வர் என்ற விஞ்ஞானி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தும் அவர்கள் நினைத்ததுபோல் ஒட்டி, எடுக்கக் கூடிய புதுவிதமான பசையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே ஒட்டக் கூடிய பசையைத்தான் ஸ்பென்சர் சில்வரால் உருவாக்க முடிந்தது. ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தார்.
ஸ்பென்சர் சில்வருடன் பணியாற்றிய விஞ்ஞானி ஆர்ட் ஃப்ரை. 1974-ம் ஆண்டு, துதிப்பாடல் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே பாடிக்கொண்டிருந்தபோது, பக்கங்கள் அடிக்கடிப் பறந்தன. இதனால் அவருக்குத் தொடர்ச்சியாகப் பாட முடியாமல், வரிகளைத் தவறவிட நேர்ந்தது. அப்போதுதான் ஒரு முறை மட்டும் ஒட்டும் பசையை வைத்து புத்தகங்களின் பக்கங்களை அடையாளப்படுத்தும் புக் மார்க் ஆகப் பயன்படுத்த முடிவு செய்தார். அதற்காக மேலும் சில மேம்படுத்தல்களை மேற்கொண்டார். அவரது அலுவலகத்துக்குப் பக்கத்தில் மஞ்சள் வண்ணத்தாள்கள்தான் கிடைத்தன. அதை வைத்து ‘ஒட்டி எடுக்கும்’ தாள்களை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டார்.
1977-ம் ஆண்டு அமெரிக்காவின் நான்கு முக்கிய நகரங்களில் இது விற்பனைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. ஓராண்டுக்குப் பிறகு, 3எம் நிறுவனம், பல்வேறு நகரங்களுக்கு இலவசமாக ஒட்டும் புக்மார்க்கை அனுப்பி வைத்தது. ஆச்சரியப்படும் விதத்தில் மக்களிடம் வரவேற்பு இருந்தது. 1979-ம் ஆண்டு ‘போஸ்ட் இட்’ என்ற பெயரில் ஒட்டும் தாள்கள் அமெரிக்கா முழுவதும் விற்பனைக்கு வந்தன.
அடுத்த ஆண்டு கனடாவுக்கும் ஐரோப்பாவுக்கும் பரவியது. இருபதே ஆண்டுகளில் 3எம் நிறுவனம் தன்னுடைய காப்புரிமையை இழந்தது. அதனால் பல்வேறு நிறுவனங்கள் ஒட்டும் காகிதங்களை, பல வண்ணங்களில் வெளியிட ஆரம்பித்தன. அலுவலகங்களிலும் வீடுகளிலும் குறிப்புகளை எழுதி வைக்கவும் பிறருக்குத் தகவல் தெரிவிக்கவும் ஒட்டும் காகிதங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். சுவர், மரம், உலோகம், புத்தகம், பிளாஸ்டிக் என்று எதில் வேண்டுமானாலும் இந்த ஒட்டும் காகிதங்களை ஒட்டலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கலாம். இன்று உலகம் முழுவதும் 100 நாடுகளில் ஒட்டும் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(கண்டுபிடிப்போம்)